ஹிலரி அமெரிக்க அதிபரானால் பில் கிளிண்டன் எவ்வாறு அழைக்கப்படுவார்?

வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஹிலரி கிளிண்டனை பின் தொடர்ந்த கேள்வியும், பல ஆயிரக்கணக்கில் கூகுள் தேடுதளங்களில் தேடப்பட்டதும் ஒரே கேள்வி தான் .

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எவ்வாறு அழைக்கப்படுவார் பில்?

ஹிலரி கிளிண்டன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரது கணவரான பில் கிளிண்டன் எவ்வாறு அழைக்கப்படுவார்? - இது தான் அந்த கேள்வி.

உலக அரங்கில் , பில் கிளிண்டன் முக்கிய அரசியல் பங்கு வகிப்பது புதிதில்லை. ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கலின் கணவரும், வேதியல் பேராசிரியருமான யோவாசிம் ஜார், அவரது இயற் பெயரால் தான் அழைக்கப்படுகிறார். அதே போல் தான், புதிய பிரிட்டன் பிரதமரான தெரிஸா மேயின் கணவரும், நிதியாளருமான பிலிப் ஜான் மே அழைக்கப்படுவதும் அவரது இயற் பெயரால் தான்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கணவர் பிலிப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரிஸா மே

ஜெர்மனியை போல பிரிட்டனிலும், ஆட்சி அதிகாரத்தில் உள்ள தலைவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கென்று அடைமொழியோ அல்லது பட்டமோ இல்லை.

ஆனால், அமெரிக்காவில் இது வரையில் அதிபர் ஜோடிகளை குறிப்பிடுகையில் அதிபர் என்றும் முதல் பெண்மணி என்றும் அழைக்கப்பட்டு வந்ததால், பில் கிளிண்டனை எப்படி அழைப்பது என்ற வினாவுக்கு பதிலளிப்பது எளிதில்லை.

இது வரை வெள்ளை மாளிகையில் எந்த பெண் அதிபரும் பதவி வகிக்கவில்லை என்றாலும், அமெரிக்க மாநில ஆளுநர்களாக உள்ள பெண்மணிகளின் கணவர்களுக்கு வழங்கப்படும் அதிகாரபூர்வ பட்டம் 'முதல் கனவான்' ( First Gentleman) என்பதாகும்.

அமெரிக்காவில் தற்போது ஆறு `முதல் கனவான்கள்’ உள்ளனர்.

ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் பில் கிளிண்டன் உரையாற்றிய போது ’முதல் கனவான்’ என்ற இந்த சொல் சமூக வலைத்தளங்களில் ஒரு முக்கிய ஹாஷ்டாக் ஆக(டிவிட்டர் வலைதளத்தில் தேட உதவும் முத்திரை) உலவியது.

பில் கிளிண்டன் மேற்கூறிய மாநாட்டில் உரையாற்றிய அதே நேரத்தில் கூகுள் வலைத்தளத்தில் அதிகமாக தேடப்பட்டது அமெரிக்காவின் 42-ஆம் அதிபரின் வாழ்க்கைத் துணைவருக்கு தரப்படும் பட்டம் என்ன என்பது தான்.

ஆனால், எஃப்ஜிஓடியூஎஸ் ( FGOTUS- அதாவது, அமெரிக்காவின் முதல் கனவான்) என்ற அடைமொழி, எஃப்எல்ஓடியூஎஸ்ஸை ( FLOTUS - அதாவது, அமெரிக்காவின் முதல் பெண்மணி என்பதற்கு தரப்படும் சுருக்கம்) போல மிகவும் இலாவகமாக, மென்மையாக அமையவில்லை.

முதல் டியூட் ( Dude) அல்லது முதல் சிறுவன் ( Laddie) ஆகியவற்றை பில் கிளிண்டனுக்கு தரப்படும் செல்டிக் பாரம்பரிய ஒப்புதலாக சிலர் பரிந்துரை செய்துள்ளனர்.

கடந்த நவம்பரில் நடந்த ஒரு நேரலை பேட்டியில், இது குறித்து பேசிய ஹிலரி கிளிண்டன், ''நான் இந்த கடுமையான போட்டியில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராவதே பில் கிளிண்டனுக்கு பிரதானமாக உள்ளது. தான் எவ்வாறு அழைக்கப்படுவது என்று அனைவரும் விவாதிக்கும் இந்த தருணத்தை அவர் ரசிக்கவே செய்கிறார். '' என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption பில் கிளிண்டனுக்கு முதல் லாடி என்ற பட்டத்தை பரிந்துரைக்கும் ஆதரவாளர்கள்

மேலும், இது குறித்து பேசிய ஹிலரி, ''இது வரை அமெரிக்க அதிபர்களின் வாழ்க்கை துணைவர்களாக பெண்களே இருந்து வந்ததால் , அதிபரின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு தரப்படும் பட்டத்தை இரும்புப் பிடியாக பெண்களே கொண்டிருந்தனர். தற்போது பில் கிளிண்டன் அதனை முறியடிக்கும் போட்டியில் உள்ளார்'' என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

''பில் கிளிண்டனின் விஷயத்தில் இது மிகவும் சிக்கலானது. ஏனெனில் , முன்னாள் அமெரிக்க அதிபர்களை மக்கள், திருவாளர் . அதிபர் ( Mr.President) என்றே இன்னமும் அழைக்கின்றனர். அதனால், இதற்கு தீர்வு காண்பதற்கு நான் சற்று நேரம் செலவழிக்க வேண்டும், '' என்று கூறிய ஹிலரி கிளிண்டன், ''முதல் டியூட் அல்லது முதல் துணை அல்லது முதல் கனவான், இதில் எதுவென்று எனக்கு உறுதியாக கூற இயலவில்லை'' என்று தெரிவித்தார்.

ஆம். ஹிலரி கூறுவது சரி தான். பில் கிளிண்டனை அவரது பழைய பட்டத்தை கொண்டு அழைப்பதானால், திருவாளர் . அதிபர் ( Mr.President) என்றும், ஹிலரியை திருமதி. அதிபர் என்றும் அழைக்க வேண்டும்.

ஆனால், இது குறித்து ஆராய்ந்த பில் கிளிண்டன் ஒரு பிரச்சார கூட்டத்தில் கடந்த வாரத்தில் உரையாற்றிய போது, ''ஹிலரி வெற்றி பெறுவது தான் எனது நோக்கம். அவர் வெற்றி பெற்று விட்டால், என்னை மக்கள் அழைக்க பயன்படுத்தவுள்ள சொற்றொடர் குறித்து நான் கவலைப்பட மாட்டேன்'' என்று ஆணித்தரமாக கூறினார்.

''ஹிலரிக்கு நான் முதல் தொண்டனாக இருப்பேன். அவருக்கு கிடைத்த சிறந்த இலவச தொழிலாளியாக நான் இருப்பேன் என்று நம்புகிறேன்'' என்று பில் கிளிண்டன் முத்தாய்ப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் குறிப்பட்டார்.

தொடர்புடைய தலைப்புகள்