ரொஹிஞ்சா பகுதிகளில் ராணுவத் தாக்குதலில் குறைந்தது 25 பேர் பலி

  • 14 நவம்பர் 2016

மியான்மரில் உள்ள வடக்கு ரக்கீன் மாகாணத்தில் ரொஹிஞ்சா முஸ்லீம்களுடன் மீண்டும் நடந்த மோதல்களில், குறைந்தது 25 பேரை சுட்டுக் கொன்றுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

கொல்லப்பட்டவர்கள் வெட்டுக்கத்திகள் மற்றும் மரத் தடிகள் போன்ற ஆயுதங்களைத் தாங்கியிருந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று, ரொஹிஞ்சா தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்று சந்தேகிக்கப்பட்ட தாக்குதலை தடுக்க ராணுவ ஹெலிகாப்டர் குண்டுவீச்சு விமானங்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

சனிக்கிழமை நடந்த மோதலில் இரண்டு ராணுவ படையினர் உள்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

ஆனால், இந்த வான் வழித்தாக்குதலால், அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பியோட நேர்ந்தது.

தீவிரவாதிகளை குறி வைத்து தாங்கள் தாக்குதல் நடவடிக்கைகள் எடுத்ததாக மியான்மர் அரசு கூறியிருந்தாலும், பலியானவர்களில் ரொஹிஞ்சா முஸ்லீம் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருந்ததை சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ள படங்கள் மற்றும் காணொளிகள் காண்பித்துள்ளன.