மலேசிய பிரதமர் பதவி விலக கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கை பதவி விலகக் கோரி தலைநகர் கோலாலம்பூரில் மஞ்சள் நிற சட்டைகள் அணிந்து ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption இந்த பேரணி தேர்தல் ஆர்வலர்கள் குழுவான பெர்சியால் ஒருங்கிணைக்கப்பட்டது

பிரதமரின் யோசனையால் உருவான முதலீட்டு நிதியமான 1 எம்டிபியிலிருந்து பில்லியன் கணக்கான பணம் திருடப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, பிரதமர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆர்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

போலிஸாரால் தடை விதிக்கப்பட்டப் போதும் போராட்டக்காரர்கள் ஓயவில்லை; மேலும் அந்த திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கு பிறகு பல ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை நஜீப் மறுத்துள்ளார்; மேலும் போராட்டங்களுக்கு தான் அடிபணியப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தை ஒருங்கிணைத்த தேர்தல் சீர்திருத்த குழுவான பெர்சியை, "ஒரு ஏமாற்று வேலை" என பிரதமர் தனது வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினர் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பதற்கு இந்த போராட்டம் ஒரு கருவியாக அமைந்து விட்டது என பிரதமர் நஜீப் தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரதமரின் அந்த குற்றச்சாட்டை மறுத்த பெர்சியின் துணைத் தலைவர், சஹ்ருல் அமன் ஷாரி, தேசிய மசூதியில் கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து: ''நாட்டின் மதிப்பை குறைப்பதற்கு நாம் இங்கு கூடவில்லை. நாம் நாட்டை நேசிக்கிறோம். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக வரவில்லை அதனை வலிமையாக்கவே இங்கு கூடியுள்ளோம்'' என்று கூறினார்.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் மொகமத், இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டார்; நஜீப் ரசிக்கின் கொடுங்கோன்மை ஆட்சி என்று அவரால் அழைக்கப்படும் அந்த ஆட்சியை கவிழ்க்க உதவ வேண்டும் என போராட்டக்காரர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption 15 மாதங்களில் பிரதமரின் ராஜினாமாவை வலியுறுத்தி நடத்தப்படும் இரண்டாவது பேரணி இதுவாகும்

கடந்த பதினைந்து மாதங்களில் பிரதமர் பதவி விலக கோரி மலாய் மொழியில் "தூய்மை" என்று பொருள் கொண்ட பெர்சியால் ஒருங்கிணைக்கப்பட்ட இரண்டாவது பேரணி இதுவாகும்.

மேலும் அரசுக்கு எதிரான "மஞ்சள் நிற சட்டை" மற்றும் அரசிற்கு ஆதரவான "சிவப்பு நிற சட்டை" குறித்து பதற்றங்கள் அதிகரித்த சில வரங்களில் இந்த பேரணி நடந்துள்ளது.

இரு தரப்பு தலைவர்கள், மேலும் பெர்சியின் ஆர்வலர்கள் பலர் பேரணி நெருங்கும் நேரத்தில் கைது செய்யப்பட்டனர்; ஆனால் இந்த நடவடிக்கைக்கு அம்னெஸ்டி மனித உரிமை அமைப்பு உடனடியாக கண்டனம் தெரிவித்தது.

அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது; மேலும் மனசாட்சி மிகுந்த கைதிகள் அவர்கள் என விவரித்துள்ளது.

எனினும் கைது நடவடிக்கைகளால் போராட்டக்காரர்கள் பின்வாங்கவில்லை, அதில் சிலர் "ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்" என்றும் "பெர்சி பெர்சி" என்றும் முழக்கமிட்டனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அரசுக்கு எதிரான "மஞ்சள் நிற சட்டை" மற்றும் அரசிற்கு ஆதரவான "சிவப்பு நிற சட்டை" குறித்து பதற்றங்கள் அதிகரித்துள்ளது

எங்களுக்கு தூய்மையான அரசுதான் வேண்டும். நல்ல முறையில் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என போராட்டக்காரர்களில் ஒருவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

நடந்த போராட்டத்திற்கு எதிராக, சிவப்பு சட்டைக் குழுவைச் சேர்ந்த ஒரு சிறிய அமைப்பு போராட்டத்திற்காக ஒன்று கூடியது.

தொடர்புடைய தலைப்புகள்