எமோஜி , மீம் என்ற சமூக ஊடக வார்த்தைகளை தெருக்களின் பெயர்களாக வைக்க முடியுமா ?

எமோஜி , மீம் என்ற சமூக ஊடக வார்த்தைகளை தெருக்களுக்கு பெயர்களாக வைக்க முடியுமா ? பின்லாந்தில் தற்போது எடுக்கப்பட்டுவரும் ஒரு முன்முயற்சி வெற்றி பெற்றால் அது நடந்து விடும்.

படத்தின் காப்புரிமை Getty Images

தெற்கு பின்லாந்தில் உள்ள ஒரு நகரத்தில் உள்ள இரண்டு புதிய சாலைகளுக்கு ''எமோஜி தெரு'' (Emoji Street)மற்றும் ''மீம் தெரு'' ("Meme Street") எனப் பெயரிடலாமா என விவாதம் நடைபெற்று வருகிறது.

பின்லாந்தில், மேற்கு ஹெல்சிங்கி நகரத்திற்கு அருகில் உள்ள லோஹ்யா என்ற பகுதியில் ஒரு புதிய வர்த்தக மண்டலத்தை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக எமோஜிகாட்சு ( Emojikatu)மற்றும் மீமீகாட்ச்சு (Meemikatu) என்ற பின்னிஷ் மொழியில் உள்ள பெயர்களை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு நகரத் திட்டமிடல் குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது.

தற்போது, உள்ளூர் மக்களிடம் அவர்களின் கருத்துக்களை நகர கவுன்சில் கேட்டுள்ளது என நிட் நியூஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத் தலைமுறையினர் 21ம் நூற்றாண்டைப் பற்றிய உணர்வைப் பெற, தெருக்களுக்கு நவீன பெயர்களை சூட்ட வேண்டும் என நகரத் திட்டமிடல் குழு விரும்புகிறது என கட்டிடக்கலை நிபுணர் மற்றும் நகரத் திட்டமிடல் குழுவைச் சேர்ந்த யுஹா ஆன்டிலா கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

எங்களது பகுதியில் உள்ள செடி, மரம் மற்றும் பறவைகளின் பெயர்கள் என எல்லாப் பெயர்களையும் சுட்டியாகிவிட்டது. நவீன காலத்தைப் பற்றி பேசும்பொருளான ஒன்றின் பெயரை வைக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,'' என அவர் எம்.டி.வி. செய்தி இணைய தளத்திடம் கூறியுள்ளார்.

புதிய தெருக்களுக்கான பெயர்களைப் பற்றி குடியிருப்புவாசிகளிடம் கேட்டபோது அனைவரும் ப்ளூபெரி தெரு அல்லது சில்வர் பிர்ச் தெரு என்ற பெயரை கூறினர். ஆனால் இந்த இரண்டு பெயர்களும் லோஹ்யாவின் வரைபடத்தில் உள்ளன. ''20க்கும் மேற்பட்ட இடங்கள் பிர்ச் எனத் தொடங்கும் பெயரைக் கொண்டதாக உள்ளன,'' என ஆன்டிலா தெரிவித்தார்.

பின்லாந்து அதிகாரிகள், பிரபலமான ஸ்மார்ட்போன் கலாச்சாரத்தைச் சார்ந்தவற்றின் பெயர்களைப் பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல.

2015ல் வெளியுறவு அமைச்சகத்தால் தேசிய எமோஜிகள் உருவாக்கப்பட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images

அவற்றில், அனைத்துக் கணினி சாதனங்களிலும் படிக்கும் யூனிகோடு மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு எமோஜிகள் விரைவில் அடங்கும்.

உள்ளூர் மக்கள் லோஹ்யா திட்டத்தை எதிர்க்காவிட்டால், புதுவருட பிறப்பின் போது அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். ஆனால், சில பின்லாந்துவாசிகள் ட்விட்டர் தளத்தில், பாரம்பரியம் அல்லாத பெயர்களை வைப்பது சரியானதா என்று கேட்டுள்ளனர்.

ஒருவர் இவ்வாறு பெயரிடுவதை எப்படி நிறுத்துவது எனக் கேட்கிறார். மற்றவர்கள் இதை வரவேற்கின்றனர். வேறு சிலர் மாற்றுப் பெயர்களை பரிந்துரை செய்கின்றனர். ஆன்டிலாவோ மோக்குலட்டி(Mokkulatie) மற்றும் ஹெய்மியொட்டி(Hymiotie) என்ற பெயர்களை விரும்புவதாகக் கூறுகிறார். இந்தப் பெயர்களின் அர்த்தம் டாங்கள் சாலை (Dongle Road) மற்றும் ஸ்மைலி பேஸ் சாலை (Smiley Face Road) என்பதாகும்.

வைரஸ் தெரு என்று பெயர் வைக்காமல் இருந்தால் சரி !