ஃபிடல் காஸ்ட்ரோவின் உடல் இன்று இரவு தகனம் : அதிபர் ரவுல் காஸ்ட்ரோ

ஃபிடல் காஸ்ட்ரோவின் உடல் இன்று இரவு தகனம் செய்யப்படும் என்றும் இறுதிச் சடங்கு டிசம்பர் மாதம் 4ம் தேதி தென்கிழக்கில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமான சாண்டியாகோவில்நடைபெறும் என்றும் கியூப அரசு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இன்றிரவு தகனம்

கியூபாவின் அரசு தொலைக்காட்சியில் காஸ்ட்ரோவின் சகோதரரும், தற்போதைய அதிபருமான அதிபர் ரவுல் காஸ்ட்ரோ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஃபிடல் காஸ்ட்ரோவின் மரணத்தை ஒட்டி கியூபாவில் ஒன்பது நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்போரின் போது புரட்சி மற்றும் எதிர்ப்பின் சின்னமாகத் திகழ்ந்த, முன்னாள் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, தனது 90வது வயதில் காலமானார்.

அமெரிக்காவின் கடற்கரை பகுதியில் இருந்து வெகு அருகில் உள்ள ஒரு தீவு நாடான கியூபாவில், உலகின் நீண்ட கால ஆட்சி செய்த கம்யூனிச ஆட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ.

மறைந்த கியூப தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சீன மக்கள் ஒரு உண்மையான காம்ரேடை இழந்துவிட்டனர் என்றும் காஸ்ட்ரோவின் சாதனைகள் என்றும் நிலைத்திருக்கும் என்றும் சீனா அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார்.

ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், காஸ்ட்ரோ ''ஒரு சகாப்தத்தின் சின்னம்'' என்றார்.

போப் பிரான்சிஸ் அவரது மரணம் ஒரு சோக செய்தி மற்றும் அதற்காக பிரார்த்தனை நடத்தப்பட்டது என்று கூறினார்.

இந்திய பிரதமர் மோதி, இருபதாம் நூற்றாண்டின் மிக சின்னமான நபர்களில் ஒருவர் காஸ்ட்ரோ என விவரித்தார்.