"சர்வதேச உணர்வை ஊட்டி வளர்த்தவர் காஸ்ட்ரோ"
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"சர்வதேச உணர்வை ஊட்டி வளர்த்தவர் காஸ்ட்ரோ"

ஸ்பெயினில் ஃப்ராங்கோ அரசுக்கு எதிராக சர்வதேச அளவில் பலர் போராடினார்கள். அது போல பின்னர் வியட்நாமில் அமெரிக்க ஆக்ரமிப்புக்கு எதிராகவும் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் வந்தன. இதற்குப் பின்னர், சர்வதேச அளவில், உலக மக்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான ஒரு உணர்வை உருவாக்கத் துணை நின்றவர் கியூபாவின் முன்னாள் அதிபர் மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோதான் என்று கூறுகிறார் மார்க்ஸிய சிந்தனையாளர் எஸ்.வி.ராஜதுரை.

ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவு குறித்து அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில், காஸ்ட்ரோவுக்குப் பின்னர், கியூபா இடது சாரி அரசியலிலிருந்து விலகி, முதலாளித்துவ நாடாக மாறும் என்று தான் கருதவில்லை என்றார்.

இளைஞர்களும் கறுப்பின மக்களும் அதிகம் வாழும் நாடு கியுபா என்று குறிப்பிட்ட எஸ்.வி.ராஜதுரை, இளைஞர்கள் அதிகம் இருக்கும் நிலையில், அவர்கள் முதலாளித்துவ சிந்தனைக்கு ஆட்பட மாட்டார்கள் என்று தான் கருதுவதாகக் கூறினார். மேலும் கியூபாவில் சொகுசு கார்களோ அல்லது பெருவணிக வளாகங்களோ ( மால்கள்) இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் சீனாவில் இத்தகைய ஒரு முதலாளித்துவ பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியபோது, சீனாவில் இதற்கான அபாயம் இருப்பதாக மாவோ நம்பினார் எனவேதான் அப்போதே வலதுசாரிகளுக்கு எதிராக ஒரு களையெடுப்பை நடத்தினார். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது என்பது வேறு விஷயம்; சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் தங்கள் தோல்விகளிலிருந்து பாடம் பெறவேண்டும் என்றார் ராஜதுரை.