அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதில்லை: ஃபிரான்ஸ் அதிபர் ஒல்லாந்த் திடீர் அறிவிப்பு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஒரு முறை போதும்!

ஃபிரான்ஸ் அதிபர் பதவிக்கு இரண்டாவது முறையாகப் போட்டியிடப் போவதில்லை என அதிபர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் திடீரென அறிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஒல்லாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது, நாட்டு மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நான்கரை ஆண்டுகாலம் இந்த நாட்டை உண்மையாகவும், நேர்மையாகவும் வழிநடத்திய தான், இந்த நாட்டின் வளர்ச்சி தொடர்பான தொலைநோக்குப் பார்வையிலிருந்து ஒருபோதும் விலகியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

பிரபல தர வரிசையில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள ஒல்லாந்த், நவீன ஃபிரஞ்சு வரலாற்றில், இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடாத முதல் அதிபர் என்ற பெயரைப் பெறுகிறார்.

மீண்டும் போட்டியிடாமல் இருப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன என்பதைத் தான் அறிந்திருப்பதாகக் கூறிய அவர்,, தீவிர வலதுசாரி தேசிய முன்னணியினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரித்தார்.

அவரது இந்த முடிவு குறித்து முதலில் கருத்துத் தெரிவித்துள்ல முன்னாள் பொருளாதாரத்துறை அமைச்சர் இம்மானுவேல் மேக்ரோன், அதிபர் மிகத் துணிச்சலான முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு அரசாங்கத்தில் இருந்து விலகிய அவர், அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்க முடிவு செய்துள்ளார்.

ஒல்லாந்தின் முடிவால், அதிபர் தேர்தல் வேட்பாளர் யார் என்ற போட்டியை, சோஷலிஸ கட்சியில் ஏற்படுத்தியுள்ளது. ஜனவரியில் இது தீர்மானமாகலாம்.

தேர்தலில் போட்டியிடத் தயார் என அறிவித்ததன மூலம், பிரதமர் மானுவேல் வால்ஸ், அடுத்த வேட்பாளருக்கான வாய்ப்பைப் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன.

கடந்த வாரம், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் பிரதமர் பிரான்சிஸ் ஃபில்லோனுக்கு வாய்ப்பளிக்க ஆதரவாக 4 மில்லியன் ஃபிரஞ்சு வாக்காளர்கள் வாக்களித்தனர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கும்.

சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, முதல் சுற்றில், தேசிய முன்னணி வேட்பாளர் மரைன் லீ பென்னைவிட முன்னிலை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்