21ஆம் நூற்றாண்டு சின்டரெல்லாவின் கதை

சித்தியின் கொடுமைக்கு ஆளாவதும் பிறகு தேவதையின் துணையுடன் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று இளவரசரால் விரும்பப்படுவதும் நாம் அனைவரும் கேட்ட அதே சின்டரெல்லாதான்; ஆனால் அந்த சின்டரெல்லா தற்காலத்தில் அதாவது 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால் அவளின் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும்?!

இதோ 21ஆம் நூற்றாண்டுசின்டரெல்லாவின் கதை.

படத்தின் காப்புரிமை KIRTISH

சின்டரெல்லாவின் தந்தை வெளியூருக்கு சென்றிருந்தார். அதனால் சின்டரெல்லா யாருக்கும் தெரியாமல் முகநூல் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களை தொடர்பு கொண்டிருந்தாள்.

தனது வீட்டு வேலைகளை செய்து கொண்டே முகநூலில் தனது கவனத்தை செலுத்தி வந்தாள் சின்டரெல்லா; அப்பொழுதுதான் முகநூல் பக்கம் ஒன்றில் கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்ச்சி ஒன்றின் அறிவிப்பை கண்டாள், அந்த நிகழ்விற்கு இளவரசர் வருகிறார் என்றும் அவள் அறிந்துக் கொண்டாள்; ஆனால் தன்னிடம் அங்கு செல்வதற்கான அழைப்பு இல்லை என்ற தனது வருத்தத்தை முகநூல் பதிவாக வெளியிட்டாள்.

சின்டரெல்லாவின் அந்த முகநூல் பதிவை பார்த்த ஒரு தேவதை, அவளுக்கு புதிய ஆடைகளையும், நிகழ்ச்சிக்கான அழைப்பையும் கொடுத்தது; அது மட்டுமல்லாமல் அவளின் போக்குவரத்திற்காக தனது அலைப்பேசி செயலி மூலம் கார் ஒன்றையும் பதிவு செய்து கொடுத்தது அந்த தேவதை. தேவதையை கண்டு மகிழ்ந்த சின்டரெல்லா தேவதையுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டாள்.

படத்தின் காப்புரிமை KIRTISH

இவை அனைத்தையும் செய்து கொடுத்த தேவதை, "போ சின்டரெல்லா போ, உன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்., உனக்கு எவ்வளவு நேரம் வெளியே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவ்வளவு நேரம் நீ இருக்கலாம் உன் விருப்பப்படி உன் வாழ்க்கையை வாழு" என்றும் தெரிவித்தது.

மகிழ்ச்சியாக அந்த கேளிக்கை விருந்து நிகழ்வுக்கு சென்றாள் சின்டரெல்லா; அங்கு இளவரசரை கண்டாள். இளவரசரும் சின்டரெல்லாவும் சேர்ந்து நிகழ்ச்சியில் நடனம் ஆடினார்கள்.

படத்தின் காப்புரிமை KIRTISH

பின்பு அவர்கள் இருவரும் பேசுவதற்காக தோட்டத்திற்கு சென்றனர், அங்கு நள்ளிரவு பன்னிரெண்டு மணி ஆவதற்கு முன் தன் கடிகாரத்தை அடிக்கடி பார்த்தாள் சின்டரெல்லா பின்பு இளவரசரிடம், "இன்று என் நண்பனின் பிறந்தநாள், அனைவருக்கும் முன்னதாக என் நண்பனிற்கு நான் முதலில் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும்" என்று தெரிவிக்கிறாள்.

இருவரும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். விடிந்தும் விட்டது; சின்டரெல்லா வீட்டிற்கு செல்ல தயாராகிறாள், அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளவரசர் சின்டரெல்லாவிடம் கேட்கிறார்.

படத்தின் காப்புரிமை KIRTISH

சின்டரெல்லா பதிலளிக்கிறாள், "நீங்கள் நல்ல மனிதராக இருக்கிறீர்கள், நல்ல முறையில் பேசுகிறீர்கள், ஆனால் இப்போது நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை; உலகைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறேன்; பல நல்ல அனுபவங்களைப் பெற விரும்புகிறேன்; நீங்கள் விரும்பினால் நாம் முகநூலில் தொடர்பில் இருப்போம், நீங்கள் இண்ஸ்டாகிராமில் இருக்கிறீர்களா? என்று தன் விருப்பத்தை தெரிவித்தாள் சின்டரெல்லா.

சின்டரெல்லாவின் எதிர்கால திட்டத்தை பார்த்து அமைதியாக திரும்பிச் சென்றுவிட்டார் இளவரசர்; அவரும் மேல் படிப்பு படிக்க வெளிநாட்டிற்கு சென்று விட்டார்.

படத்தின் காப்புரிமை KIRTISH

சின்டரெல்லா தற்போது தனது கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறாள். உலகைச் சுற்றி வருகிறாள் சின்டரெல்லா; தற்போது அவளை லட்சம் பேருக்கு தெரியும். தனது பயண அனுபவங்களை குறித்து புத்தகம் ஒன்றையும் வெளியிட இருக்கிறாள் சின்டரெல்லா.

இன்னொரு பக்கம், சின்டரெல்லாவின் சித்தியும் அவரது மகளும் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் வாசலில் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.