பல்கேரிய கிராமத்தின் பகுதிகளை அழித்த சரக்கு ரயில் விபத்து

பல்கேரியாவின் வட கிழக்கில் வாயு கொண்டு சென்ற சரக்கு ரயில் ஒன்று வெடித்து சிதறியதில், சிறியதொரு கிராமத்தில் பகுதிகளையே அழிவுக்குள்ளாக்கியிருக்கிறது. இதுவரை 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

20-க்கு மேலானோர் காயமடைந்துள்ளனர். அதில் சிலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். வீடுகளின் இடிபாடுகளுக்கு அடியில் குழந்தைகள் உள்பட பலர் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மூன்று தெருக்கள் முழுவதும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 800 மக்கள் வாழ்கின்ற ஹிட்டிரினோ என்கிற கிராமத்தின் ரயில் நிலையத்தை கடந்து செல்கையில் இந்த ரயில் தடம்புரண்டுள்ளது. அந்த ரயிலில் இருந்த சில வாயு கொள்கலன்கள் மின்கம்பிகளில் மோதியதால் அதற்கு உள்ளிருந்த வாயு தீப்பற்றி எரிந்திருக்கிறது என்று அவ்விடத்தை நேரில் பார்வையிட்ட பிரதமர் பாய்கோ போரிஸ்சோவ் தெரிவித்திருக்கிறார்.

உயிர் தப்பிய ரயில் ஓட்டுநர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பிற கொள்கலன்களை கொட்டி தீர்த்து, மேலும் வெடிப்புக்கள் ஏற்படாத வண்ணம் தீயணைப்பு வீரர்கள் தங்களுடைய செயல்பாடுகளை ஒருமுகப்படுத்தி செயல்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்