பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கப்பட வேண்டுமா?

பெண்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் வலியால் துன்பப்பட்டால் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் விடுமுறை எடுப்பதை உறுதி செய்வது சீனாவின் பல மாகாணங்களில் இப்போது சட்டங்களாகி வருகின்றது. ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் நேரத்தில் விடுமுறை வழங்கப்பட வேண்டுமா என்பது சூடான விவாதங்களை எழுப்பி வருகிறது.

படத்தின் காப்புரிமை Churan Zheng

நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக பணிபுரியும் ச்சுரான் ட்சாங் மாதவிடாய் கால விடுமுறையை தவறாமல் எடுத்துவருபவர். ஒவ்வொரு பெண்ணுக்கும் இது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறுகிறார்.

’’ஒவ்வொரு மாதமும் நான் மாதவிடாயின்போது வலியால் மிகவும் துன்புறுகிறேன். அப்போது, கண்ணால் காணமுடியாத சிலுவை ஒன்றில் ஒரு பெண் அறையப்பட்டிருப்பது போலவும், அவருடைய வயிற்றில் அம்புகள் செலுத்தப்பட்டிருப்பது போலவும் காட்டுகின்ற படத்தை எனது சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றுகிறேன். இந்த காலகட்டத்தில் ஒரு பெண் அனுபவிக்கின்ற வலியை இந்த படம் சரியாக வெளிக்காட்டுவதால் அதிகமானோரால் இந்த படம் விரும்பப்படுவதை என்னுடைய பதிவில் காணமுடிகிறது’’.

’’மாதவிடாய் காலத்தில் மிகவும் கடுமையான உணர்வுகளை அனுபவிக்கிறேன். மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் என்னுடைய வயிற்று தசை இறுகிவிடுகிறது’’.

’’அடுத்தநாள் எழுகின்றபோது மாதவிடாயோடு சேர்ந்து வருகின்ற வலி தாங்க முடியாததாகிவிடுகிறது’’.

’’என்னுடைய இரைப்பையை எடுத்து உடலுக்கு வெளியே எறிந்துவிட வேண்டும் அல்லது கத்தரியால் அதனை வெட்டிவிட வேண்டும் என தோன்றுகிறது. வாந்தி எடுக்கும் உணர்வும் ஏற்படுகிறது’’.

’’நான் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியவுடன் வேலை செய்ய தொடங்கிவிட்டேன். ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்திருக்கிறேன். அவை என்னை மிகவும் களைப்பாக்கி, தூங்கச் செய்யும் உணர்வை தந்தன. வலியை எதிர்த்து போராட வெந்நீர் பாட்டில்கள் எனக்கு தேவைப்பட்டன’’.

’’இந்த நேரங்களில் என்னுடைய பணிகளில் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை. சில வேளைகளில் என்னுடைய பாலினத்தையே சபிக்க செய்கிற வேளையாக அந்நேரம் அமைகிறது’’.

படத்தின் காப்புரிமை Churan Zheng

’’அதிர்ஷ்டவசமாக "பிரைடு பிளனிங்" என்கிற பெண்களின் உரிமைகளுக்காக பணியாற்றும் என்னுடைய நிறுவனம் ஒவ்வொரு பெண் ஊழியருக்கும் மாதவிடாய் நேரத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியத்துடனான விடுமுறையை வழங்குகிறது’’.

’’இதற்கு மருத்துவர் சான்றிதழ் தேவையில்லை அல்லது ஒரு நாள் பணிக்கு வராமல் இருப்பதால் ஊதியம் குறைக்கப்படும் என்றும் கவலைப்படவும் தேவையில்லை’’

’’பணிப்பயணமோ அல்லது முடிக்க வேண்டிய முக்கியமான வேலைகளோ இல்லாவிட்டால், நான் வழக்கமாக அரை நாள் அல்லது ஒரு நாள் விடுமுறை எடுத்து கொள்கிறேன்’’.

’’அவ்வாறான விடுமுறையின்போது, வீட்டில் ஓய்வெடுக்கிறேன். வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தூங்குகிறேன் அல்லது படுக்கையில் இருந்து கொண்டே சில வேலைகளை செய்கிறேன்’’ என்கிறார்.

நிறுவன வருவாய் பாதிக்கப்படுமா?

இவ்வாறு மாதவிடாய்க்கு விடுமுறை எடுக்க அனுமதித்தால், அது நிறுவனத்தின் வருவாயை பாதிக்கும் என சிலர் எண்ணுகின்றனர். எனவே, பெண்களை வேலைக்கு எடுப்பதற்கு நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டுமா என்கிற விவாதம் நடைபெறுகிறது.

இருப்பினும், எனக்கு தெரிந்த வரை, பெண் ஊழியர்கள் அதிகமான வேலை செய்கின்ற என்னுடைய நிறுவனத்தில், ஏறக்குறைய ஒவ்வொரு பெண் ஊழியரும் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒரு மாதம் விட்டு அடுத்த மாதம் மாதவிடாய்க்கு விடுமுறை எடுத்த பின்னரும் குறிப்பிடும் படியாக நிதி இழப்புக்கள் எதையும் சந்திக்கவில்லை.

மாதவிடாய் கால வலி

படத்தின் காப்புரிமை iStock

மாதாந்தர மாதவிடாய் சுழற்சியில் பெண்களில் பலர் வலிகளை அனுபவிக்கிறார்கள்.

இது பொதுவாக, வயிற்று பகுதி உள்ளிழுப்பது போன்று சுருங்குகின்ற உணர்வை அளிக்கிறது. இந்த உணர்வு முதுகிற்கும், தொடைகளுக்கும் பரவலாம்.

மாதவிடாய் வலியானது கடும் தலைவலி, மற்றும் வலி பிடிப்பு போல உணரப்படும். வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலியையும் பெண்கள் உணரலாம்.

இந்த மாதவிடாய் காலத்தின் வலியானது அறிவியல்பூர்வமாக வலி மிகுந்த மாதவிடாய் என்று பொருள் தரும் வகையில் டிஸ்மேனோரியா (dysmenorrhoea) என்று குறிக்கப்படுகிறது.

கருப்பையின் உள்ளே மெல்லிய செல்கள் உற்பத்தி செய்யும் புராஸ்டோகிலான்டின் ஹார்மோன் நிலைகள் அதனை சுருங்க செய்ய காரணமாகின்றன.

அந்த ஹார்மோன் நிலைகள் அதிகமாக இருந்தால், இந்த கருப்பை சுருங்குதல் மிகுந்த வலி ஏற்படுத்த காரணமாகிறது.

மாதவிடாய் நேரமாக இல்லாமல் இருந்தாலும் சில பெண்கள் இடுப்பு (பெல்விக்) பகுதியில் வலியை உணரலாம்.

தேங்கும் பணிகள்

விடுமுறையை முன்னரே திட்டமிடுகிறோம் அல்லது விடுமுறை முடிந்தவுடன் வேலைகளை விரைவாக முடிக்க முயல்கிறோம். ஆண்கள் தாங்கள் அநியாயமாக நடத்தப்படுவதாக உணர்வதில்லை.

உண்மையில் இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எங்களுடைய பணிச்சூழல் மிகவும் நேர்மறையானதாக, சிறந்ததாக மாறியுள்ளது.

இத்தகைய கொள்கைகள் பெண்களை மிகவும் பாதுகாப்பதாகவும், பெண் ஊழியர்கள் பலவீனமானவர்கள் அல்லது சோம்பலானவர்கள் எனவும் பார்க்க காரணமாகலாம் என்று பிறர் எண்ணலாம்.

இருப்பினும், எனக்கு தெரிந்த வரை, மாதவிடாய் நேரத்தில் வலி அனுபவிக்காத பெண்கள் இந்த விடுமுறையை எடுப்பதில்லை.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பாலியில் தாக்குதல் தொடர்பாக கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்ட பெண்ணியவாதிகளில் ட்சுவாங்கும் ஒருவர்

எல்லாவற்றிற்கும் மேலான அதிக போட்டியாற்றலோடு பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற குழும நிறுவனங்களின் பெண் ஊழியர்கள் தாங்கள் பலவீனமானவர்கள் என கருதப்படுவதை விரும்புவதில்லை.

நான் சொல்வதைபோல, என்னுடைய நிறுவனத்தில் மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுப்போர், பணிக்கு திரும்பியவுடன் தேங்கியிருக்கும் அதிக அழுத்தங்களை வழங்கும் தங்களுடைய பணிகளை விரைவில் முடிக்கவே எண்ணுகின்றனர்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை வழங்கலாமா?

மாதவிடாய் நேரரத்தில் பெண்களுக்கு சம்பளத்தோடு கூடிய விடுமுறை அளிக்கப்படுவது மிகவும் சூடான விவாதங்களையும், விமர்சனங்களையும் இன்று கூட எழுப்பக் கூடியதாக இருப்பது வினோதமாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட மேலானதாக ஆதாயமும், செயல்திறனும் பார்க்கப்படுகின்றன.

பெண்களை மாதவிடாய் கால வலியிலிருந்து இயற்கை விடுவிக்கமுடியாதுதான். ஆனால், இதற்காக நம்முடைய சமூகம் பெண்களுக்கு செய்வதற்கு ஒன்றுமில்லையா?

ஆண்களுக்கும் மாதவிடாய் காலம் இருப்பதாக இருந்திருந்தால், பல நாடுகளில் அரசியல் சாசனம் எழுதப்படும்போதே மாதவிடாய் கால விடுமுறை வழங்கப்பட வேண்டுமென எழுதப்பட்டிருக்கலாம் என்று என்னால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்