மூன்று பெற்றோர்களைக் கொண்டு குழந்தையை உருவாக்க பிரிட்டனில் ஒப்புதல்

மூன்று பெற்றோர்களைக் கொண்டு மருத்துவ ரீதியாக ஒரு குழந்தையை உருவாக்குவதற்கு பிரிட்டனின் செயற்கை கருவுறுதல் ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புதல் கொடுத்துள்ளது. இது வரலாற்று ரீதியான முடிவாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இன்விட்ரோ பெர்டிலைசஷன்(In-vitro Fertilisation ) என்று அறியப்படும் சோதனைக்குழாய் மூலம் கருத்தறிப்பு முறையிலேயே ஒரு மேம்பட்ட முறையைப் பயன்படுத்தி, இதைச் செய்ய தேவையான உரிமத்தை பெற மருத்துவமனைகள் Human Fertilisation and Embryology Authority என்ற செயற்கை கருத்தரிப்பை ஒழுங்குபடுத்தும் பிரிட்டிஷ் அரசின் ஆணையத்திடம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்ததொழில் நுட்பத்தால், கொடிய மரபணு நோய்களோடு குழந்தைகள் பிறப்பதை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் எல்லா மருத்துவமனைகளும், ஒவ்வொரு முறையும் இந்த அமைப்பின் ஒப்புதலை பெற வேண்டும்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஒரு அமெரிக்க குழு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு ஆண் குழந்தையை உருவாக்கியது. அந்த குழந்தையை உருவாக்க மெக்ஸிகோவில் உள்ள மூன்று நபர்களின் மரபணுக்கள் பயன்படுத்தப்பட்டன.