கிழக்கு அலெப்போவிலிருந்து 3 ஆயிரம் பேர் வெளியேற்றம்

சிரியாவின் அலெப்போ நகரில் முற்றுகையில் இருக்கும் கிளர்ச்சியாளர்களின் பகுதியில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேலானோர் பேருந்துகள் மற்றும் அவசர மருத்து ஊர்திகள் மூலம் வெளியேற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கிழக்கு அலெப்போவில் இன்னும் 50 ஆயிரம் பொது மக்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது

அப்பகுதியில் இருக்கும் பொது மக்கள் அனைவரையும் வெளியேற்ற பல நாட்கள் பிடிக்கும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூறியிருக்கிறது.

ரஷ்யாவின் ஆதரவோடு சிரியா அரசு படைப்பிரிவுகள் ஏறக்குறைய எஞ்சியிருக்கும் அலெப்போவின் எல்லா பகுதிகளையும் கைப்பற்றியிருக்கின்றன.

இது, அதிபர் பஷார் அல் அசாத்துக்கு கிடைத்திருக்கும் மிக பெரிய வெற்றியாகும்.

படத்தின் காப்புரிமை AFP

அலெப்போவுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது என்றும், வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்த வெற்றியை பற்றி அசாத் தெரிவித்திருக்கிறார்.

இந்த பகுதியில் இருந்த பொது மக்கள் புதன்கிழமை வெளியேற்றப்பட இருந்த நிலையில் போர்நிறுத்தம் மீறப்பட்டது.

காயமடைந்த 40 பேர் உள்பட சுமார் 3 ஆயிரம் பொது மக்கள் வெளியே கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் மரியானா காசெர் தெரிவித்திருக்கிறார்,

படத்தின் காப்புரிமை AFP

கிழக்கு அலெப்போவில் எத்தனை பேர் இன்னும் உள்ளனர் என்று யாருக்கும் தெரியவில்லை என்றும், அங்கிருக்கும் மக்களை வெளியேற்ற இன்னும் பல நாட்கள் ஆகலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுவோர் அருகிலுள்ள இட்லிப் மாகாணத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.