ஆஃப்கானிஸ்தானில் பணிக்கு சென்ற 5 விமான நிலைய பெண் ஊழியர்கள் சுட்டுக் கொலை

  • 17 டிசம்பர் 2016

ஆஃப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் விமான நிலையத்தில் பணியாற்றும் ஐந்து பெண் பாதுகாப்பு பணியாளர்களை அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரிகள் சுட்டுக் கொன்றுவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இன்று காலை சிறிய வேன் ஒன்றில் விமான நிலையத்துக்கு அந்தப் பெண்கள் பணிக்குச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்களில் வந்த இரு தாக்குதல்தாரிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கந்தஹார் ஆளுநரின் பேச்சாளர் சமிம் அக்ஹல்வாக் கூறியுள்ளார்.

வேன் ஓட்டுநர் உள்பட ஐந்து பெண் பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.

விமான நிலையத்திற்கு வரும் பெண் பயணிகளை சோதிக்கும் பணியில் அந்தப் பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தாங்கள் இந்தப் பணியில் ஈடுபடக்கூடாது என்று ஏற்கெனவே கொலை மிரட்டல்கள் வந்த பிறகு அந்தப் பெண்கள் தங்கள் பாதுகாப்புக் குறித்து அச்சமடைந்திருந்தனர் என விமான நிலையத்தின் இயக்குநர் அஹ்மதுல்லா ஃபெய்ஸி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிராக வன்முறைகள் தொடர்பாக, 2015 ஆம் ஆண்டில் 5 ஆயிரம் வழக்குகளும், 2016 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 3,700 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக ஆஃப்கனின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்