போலந்து ஊடக சுதந்திரம்: மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

நாடாளுமன்றத்தில் ஊடகங்களின் செய்தி சேகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை எதிர்த்து, போலந்து தலைநகர் வார்சாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP

வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கிய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் உள்ளிருந்து கொண்டே போராட்டத்தை தொடர்கின்ற நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே குழுமியுள்ளனர்.

அரசுக்கு ஆதரவு தெரிவிப்போர் இன்று மாலை ஆப்பாட்டம் நடத்த உள்ளனர்.

போலந்து அதிபர் அஞ்ஜெய் டூடா இன்று ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கவிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை EPA

ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிபர் இருந்தாலும், எதிர்க்கட்சியினரை சந்திக்க ஒப்புகொண்டுள்ளார்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின் மேலவை சபாநாயகரை பத்திரிகையாளர்கள் சனிக்கிழமை சந்தித்தனர்.

அதில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்ப்படவில்லை என்றாலும், சமரச ஒப்பந்தம் ஒன்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் தோன்றியிருப்பதால், திங்கள்கிழமை இன்னொரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.