அதிர்ச்சியில் உறைந்துள்ள நேரில் கண்ட சாட்சிகள்

''மக்கள் மகிழ்ச்சியாக மதுவருந்திக் கொண்டிருந்தனர். நகரெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக இசை நிகழ்ச்சிகள், வண்ண விளக்கு அலங்காரங்கள். நகரே விழா கோலம் பூண்டிருந்த சூழலில், திடீரென எங்கள் கண் முன் ஒரு பயங்கரம் நிகழ்ந்தது''

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் 12 பேர் இறக்க காரணமான லாரி

பெர்லின் நகரத்தின் மையத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த சந்தை பகுதியில் லாரியை ஓட்டிச் சென்று 12 பேர் கொல்லப்பட்டதற்கும், 48 பேர் காயமடைந்ததற்கும் காரணமான கோர சம்பவம் குறித்து நினைவுகூர்கையில் அதிர்ச்சியில் உறைந்த பிரிட்டனை சேர்ந்த எம்மா ரஸ்டன் கூறியது தான் மேற்கூறியவை.

பெர்லின் நகருக்குள் முதல் முறையாக வருகை புரிந்துள்ள பிரிட்டனின் வாரிக்ஷர் நகரின் ரக்பி பகுதியை சேர்ந்த ரஸ்டன், தான் நம்ப முடியாத மற்றும் அதிர்ஷ்டகரமான இந்த தாக்குதல் சம்பவத்தில் இருந்து தப்பித்ததாக தெரிவித்தார்.

நீஸ் நகர தாக்குதல் போல அமைந்த பெர்லின் தாக்குதல்

அவர் மேலும் கூறுகையில், ''நாங்கள் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வண்ண விளக்கு அலங்காரங்களை பார்த்துக் கொண்டிருந்தோம். உணவு விடுதிக்கு திரும்பி செல்லலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு பேரொலி கேட்டது'' என்று தெரிவித்தார்.

''என்ன நடக்கிறது என்று நாங்கள் சுற்றி பார்த்த போது, விளக்கு அலங்காரங்களையும், எங்களின் முன் அமைக்கப்பட்டிருந்த குடில்களும் ஒரு லாரியால் முற்றிலும் நொறுக்கப்பட்டதை உணர்தோம்'' என்று எம்மா பெர்லின் தாக்குதல் சம்பவத்தை விவரித்தார்.

ஒரு பத்திரிகையாளரான ரஸ்டன், பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் குறித்து மேலும் விவரிக்கையில், ''பிரான்சில் உள்ள நீஸ் நகரத்தில் தாக்குதல் நடந்த போது, நான் செய்தியரங்கில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதனை போன்ற மற்றொரு தாக்குதல் சம்பவத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ள இந்த தாக்குதல் நிகழ்வில் இடம்பெறுவேன் என்பதை நான் நினைத்து பார்க்கவேயில்லை'' என்று அதிர்ச்சியுடன் விவரித்தார்.

'அதிர்ஷ்டவசமாக தப்பித்தோம்'

படத்தின் காப்புரிமை Image copyrightREUTERS, AP
Image caption ஜெர்மனி தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய மைக் பாஃக்ஸ்

தாக்குதல் நடந்த பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தைக்கு வருகை புரிந்த பிரிட்டனின் பெர்மிங்காமை சேர்ந்த மைக் ஃபாக்ஸ், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கூறுகையில், தாக்குதலுக்கு பின்னர் சந்தையில் சில நொறுங்கிய கடை அங்காடிகளுக்கு கீழே சிக்கியிருந்த மக்களை காப்பாற்றுவதற்கு தான் உதவி செய்ததாக தெரிவித்தார்.

''நாங்கள் சந்தையை வீட்டுக் கிளம்பித் செல்ல எண்ணிய போது , ஒரு மிகப் பெரிய லாரி சந்தைக்குள் நுழைந்தது. அந்த லாரி என்னையும், என் பெண் தோழியையும் கடந்து சென்றது. அந்த லாரியின் அடியின் சிக்காமல் மூன்று மீட்டர் இடைவெளியில் நானும், 5 மீட்டர் இடைவெளியில் என் தோழியும் தப்பித்தோம்'' என்று தெரிவித்தார் மைக் ஃபாக்ஸ்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பெர்லின் சந்தையில் அதிவேகத்தில் சென்ற லாரி

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து குறிப்பிட்ட பெர்லின்வாசியான இப்ராஹிம் கோலாக் , சந்தைக்குள் லாரி புகுந்து விபத்து ஏற்பட்டது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமாக இருக்கக்கூடும் என்று தான் நம்புவதாக கூறினார்.

பிபிசியிடம் இது குறித்து பேசிய இப்ராஹிம் கோலாக், ''அப்போது என் நண்பர்களுடன் தாக்குதல் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சந்தையில் நின்று கொண்டிருந்தேன். இரவு சாப்பாடுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆயுத்தம் செய்து கொண்டிருந்த போது ஒரு பெரிய சத்தம் கேட்டது'' என்று கூறினார்.

''அந்த சத்தம் ஏதோவொரு கிறிஸ்துமஸ் அங்காடி கீழே விழுந்து விட்டதை போன்ற உணர்வை அளித்தது '' என்று கோலாக் கூறினார்.

''என்ன நடக்கிறது என்று நான் திரும்பிப் பார்க்கும் போது, ஒரு லாரி முழு வேகத்தில் வந்து கொண்டிருந்தது. இது நிச்சயம் ஒரு தாக்குதல் சம்பவம் தான் என்று நான் எண்ணினேன். அந்த லாரி நிறுத்தப்படவுமில்லை.அல்லது மக்களை விட்டு விலகிச் செல்லவுமில்லை'' என்று இப்ராஹிம் கோலாக் பிபிசியிடம் தெரிவித்தார்.

இவர்களை போன்று இந்த சம்பவத்தை நேரில் கண்ட இன்னும் பலரும் அதிர்ச்சியுடன் விவரித்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்