துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டில் 29 பேர் மீது விசாரணை

துருக்கியில் ஜூலை மாதம் நடைபெற்ற தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக 29 துருக்கி போலிஸார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நீதிமன்றத்திற்கு வெளியே காவலில் ஈடுபட்டுள்ள துருக்கி சிறப்பு ஆயுத படை

ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விசாரணை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

மேலும், 40 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விசாரணைகள், நவீன துருக்கி வரலாற்றில் அதிகபட்சமான ஒரு சட்ட நடைமுறையாகக் கூறப்படுகிறது.

குற்றவாளிகளாக கூறப்படுபவர்கள் மீது, அரசை கலைக்க முயற்சித்ததாகவும், ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் பின்னனியில் இருப்பதாக அதிகாரிகளால் குற்றம் சுமத்தப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த மதகுரு ஃபெதுலா குலனால் தலைமை வகிக்கப்படும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால் அந்த குற்றச்சாட்டை ஃபெதுலா குலன் மறுத்துள்ளார். அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானிற்கு எதிரானவர்களை ஒடுக்கும் நடவடிக்கை இது என பலர் அச்சம் கொள்வதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.