ரஷிய விமானம் விபத்து; தாக்குதல் நடந்திருப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கருத்து

ஞாயிற்றுக்கிழமையன்று 92 பேர் இறந்த ரஷிய விமான விபத்து சம்பவத்திற்கு தொழில் நுட்பக் கோளாறு அல்லது மனித தவறு காரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது எனக் கருதும் ரஷிய அதிகாரிகள் தாக்குதல் நடந்திருப்பதற்கான வாய்ப்புக்களையும் மறுப்பதற்கில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

விமானம் வெடித்துச் சிதறியதற்கான எந்த அறிகுறிகளையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடிக்காத போது, வெளிப்புறத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாகவும், விமானம் கீழே விழுந்திருக்கலாம் என்ற சாத்தியம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறியும் பணி தொடரும் அதே வேளை, விமானத்தில் இருந்த பதிவுக் கருவிகள் ஆய்வு செய்யப்படுகின்றன என்றும் அந்த முடிவுகள் 2017ல் ஜனவரி மாதத்தின் இறுதியில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது

சோச்சியில் இருந்து கிளம்பிய இராணுவ டுப்போலேவ்-154 என்ற விமானம் கருங்கடலில் விழுந்தது என்று கூறப்படுகிறது.