ரஷியாவில் உள்ள 35 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற புதினுக்கு பரிந்துரை

அமெரிக்காவில் இருந்து 35 ரஷிய தூதரக அதிகாரிகளை அந்த அரசு வெளியேற்ற உத்தரவிட்டநடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவில் உள்ள 35 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றுமாறு ரஷியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிபர் புதினுக்கு பரிந்துரைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் இணையத்தில் ஊடுருவி ரஷியா முக்கிய தகவல்களைத் திருடியதாகவும், அதன் மூலம் தேர்தல் முடிவை மாற்ற சதி நடந்திருப்பதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அடுத்து ரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியது என்று கூறப்படுகிறது.

ரஷிய அரசு இணையத் திருட்டில் தனக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நடவடிக்கை ''ரஷியாவுக்கு எதிரான மற்றும் அமைதியைக் குலைக்கும் இறுதி நடவடிக்கை'' என ரஷியாவின் பிரதமர் திமித்ரி மெத்வெதேவ் விவரித்துள்ளார்.