ஒலாந்த், இராக்கில் படையினரை சந்தித்த வேளையில் கார் குண்டு தாக்குதல்கள், 35 பேர் பலி

பாக்தாத்தில் மக்கள் நெருசல் மிகுந்த சதுக்கம் ஒன்றில் நடைபெற்ற ஒரு கார் குண்டு தாக்குதலில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60-க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இராக்கின் தலைநகரில் இருக்கும் விரிவான மாவட்டமான சேடுர் நகரில் குறுக்கு சாலைகளில் வேலைகளுக்கு செல்ல காத்து கொண்டிருந்த தினக்கூலி தெழிலாளர்கள் பலர் கொல்லப்பட்டோரில் அடங்குவதாக, சம்பவ இடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாக்தாத்தின் கிழக்கு பகுதியில் மருத்துவமனை ஒன்றுக்கு அருகில் நிகழ்ந்த இன்னொரு கார் குண்டு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாக்தாத்துக்கு அருகிலுள்ள ஒரு ராணுவ தளத்தில், இராக் சிறப்பு படைப்பிரிவுகளுக்கு பயிற்சி அளித்து வருகின்ற பிரெஞ்சு படைப்பிரிவுகளை பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்த் சந்தித்த வேளையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துகொள்ளும் தீவிரவாதிகளுக்கு எதிராக இராக் மண்ணில் போராடுவது, பிரான்ஸில் தீவிரவாத தாக்குதல்களை தடுப்பதற்கும் உதவுவதாக ஒலாந்த் கூறியிருக்கிறார்.

இஸ்லாமிய அரசு தீவிராவாதிகளுக்கு எதிராக போராடும் சர்வதேச கூட்டணியின் ஒரு பகுதியாக ஏறக்குறைய 500 பிரெஞ்சு படையினர் இராக்கில் உள்ளனர்.

சமீப காலங்களில், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நடத்துகின்ற தாக்குதல்கள் போன்ற தொடர் குண்டு வெடிப்புகள் பாக்தாத்தின் உள்ளேயும் வெளியேயும் நடத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்