பிரேசில் சிறையில் மீண்டும் கலவரம் ; 33 கைதிகள் கொலை

  • 6 ஜனவரி 2017

பிரேசிலின் வட மாநிலமான ரோரைமாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில், சக கைதிகளால் 33 சிறை கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Image caption கோப்புப்படம்

போ விஸ்டாவில் இருக்கும் இந்த சிறைச்சாலையில் தங்கள் அறைகளிலிருந்த பூட்டுக்களை கைதிகள் குழு ஒன்று உடைத்தெறிந்தது மட்டுமின்றி அதே கட்டடத்திலிருந்த தனி ஒரு பிரிவையும் கைப்பற்றியதாக உள்ளூர் ஊடகங்களுக்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் கை மற்றும் கால்களில் வெட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையிலிருந்து யாரும் தப்பவில்லை என்றும், தற்போது சிறை வளாகம் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனாயுஸ் மாநிலத்திலுள்ள சிறைச்சாலைக்குள், கைதிகளுக்குள் எழுந்த மோதலில் சுமார் 56 பேர் கொல்லப்பட்டு சில தினங்களே ஆன நிலையில் தற்போது ரோரைமாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.