பால்பாயிண்ட் பேனா: நெருடலில் சீனா

  • 10 ஜனவரி 2017

சீனா விண்வெளியில் ராக்கெட்டுகளை ஏவியுள்ளது, கோடிக்கணக்கான ஸ்மார்ட்ஃபோன்கள், அதியுயர் ரயில் வண்டிகள் ஆகியவற்றை தயாரித்துள்ளது. ஆனால் ஒரே ஒரு விஷயம் சீனாவுக்கு நெருடலாக இருந்துவருகிறது.

Image caption பேனா முனையில் உயர் தொழில்நுட்பம் உள்ளது

அது பால்பாயிண்ட் பேனா.

பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் இந்தப் பேனாக்களை உயர்தரத்தில் தம்மால் உருவாக்க முடியவில்லை என்று பிரதமர் லீ க சாங் கடந்த ஆண்டு தேசியத் தொலைக்காட்சியில் புலம்பினார்.

ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பானிலிருந்து வரும் பேனாக்களை விட உள்நாட்டில் செய்யப்படும் பேனாக்கள் கரகரவென எழுதுகின்றன என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

இதில் பிரச்சினை என்பது பேனாவின் உடல்பகுதியில் அல்ல, முனைப்பகுதியிலேயே உள்ளது. எழுதும்போது குழாயிலிருந்து மை வெளியேறுவதற்கு வழிசெய்யும் சிறிய உருளையில்தான் பிரச்சினை.

உயர் தொழில்நுட்பம்

அது சாதரண விஷயம் என நம்மில் பலர் நினைக்கலாம், ஆனால் அது உயர் தொழில்நுட்பம் சார்ந்தது.

அதைத் தயாரிக்க அதியுயர் தொழில்நுட்ப கருவிகளும் உறுதியான, ஆனால் மிகமிக மெல்லிய எஃகு தகடுகளும் தேவை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சீனாவின் பிரதமர் லீ க சாங்

இதில் சிக்கல் எங்கு என்றால், சீனாவில் தயாரிக்கப்படும் எஃகு அந்த அளவுக்கு தரம் வாய்ந்தது இல்லை. அதனால் பேனா முனையை துல்லியமாகத் தயாரிப்பதில் சிரமங்கள்.

ஆகவே சீனாவிலுள்ள 3000 பேனாத் தயாரிப்பாளர்கள், அத்துறைக்கு தேவையான மிகமுக்கிய பகுதியை இறக்குமதி செய்யவேண்டிய நிலையில் உள்ளனர்.

இதனால், அத்துறைக்கு ஆண்டொன்றுக்கு பல லட்சம் டாலர்கள் செலவாகின்றன.

இப்போது ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகு, அரச எஃகு நிறுவனமான டாய்யுஆன் இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது போலத் தோன்றுகிறது என பீப்பிள்ஸ் டெய்லி பத்திரிகை கூறுகிறது.

அண்மையில் அங்கு முதல் தொகுதியாக 2.3-மில்லிமீட்டர் பால்பாயிண்ட் பேனா முனைகள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்தன என்றும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

பரிசோதனைக் கூடங்களில் ஆய்வுகள் முடிந்த பிறகு, இந்தப் பேனா முனைகள் உள்நாட்டு உற்பத்திகளை நிறைவு செய்து, முற்றாக இறக்குமதியைத் தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெருடல்

சீனா சிறப்பான பேனா ஒன்றை தயாரிக்கிறதா இல்லையா என்பது இதில் பிரச்சினை.

பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பால்பாயிண்ட் பேனா தயாரிப்பில் ஐரோப்பிய நிறுவனங்களே ஆளுமை செலுத்துகின்றன

உள்நாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், உயர் தொழில்நுட்பம் மற்றும் நூதனமான தயாரிப்புகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு தொழில்துறையில் மேலும் சாதித்திட சீனா முன்னெடுத்துள்ள, "சீனாவின் தயாரிப்பு 2025" திட்டத்தின் அடிநாதமாக இப்படியான ஆய்வுகள் உள்ளன.

சீனாவில் குறைந்த விலைகொண்ட பால்பாயிண்ட் பேனாக்கள் போன்ற பொருட்கள் முன்னுரிமை பட்டியலில் இருந்ததில்லை. ஆனால் குறியீட்டளவில் இந்தப் பேனாப் பிரச்சினை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

உலகளவிலான இரும்பு மற்றும் எஃகுத் தேவையில் பாதியளவுக்கு உற்பத்தி செய்யும் சீனா, இன்னும் உயர்தரம் வாய்ந்த எஃகுக்கு இறக்குமதியையே நம்பியுள்ளது என்பது யதார்த்தம்.

அந்த நிலை மாறவேண்டும் என்பதையே லீ க சாங்கின் உரை சுட்டிக்காட்டியது. சீனா தனது உற்பத்தித்துறையின் தரத்தை மேம்படுத்த வேண்டுமென பிரதமர் கோடிட்டு காட்டியுள்ளார்.

எங்கு பிரச்சினை?

இதேவேளை சரித்திர ரீதியாக சீனா ஒருபோதும் நுட்பமான அதியுயர் தொழில்நுட்பத்தை முன்னெடுக்க முடியவில்லை, அதற்கு பால்பாயிண்ட் பேனா ஒரு உதாரணம் என்று, ஹாங் காங் பல்கலைகழத்தில் தொழில் உற்பத்தி பொறியியல்துறையின் தலைவரான பேராசிரிய ஜார்ஜ் ஹுவாங் கூறுகிறார்.

Image caption பால்பாயிண்ட் பேனா-அன்றாட வாழ்வில்

பேனா போன்ற பொருளின் பகுதிகள் மிகவும் சிறியதாகவும் நுணுக்கமானதாகவும் இருப்பதால் அதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது எளிதல்ல எனவும் அவர் கூறுகிறார்.

வானூர்தி தயாரிப்பு மற்றும் பாதுகாப்புத்துறை போன்றவற்றின் நுட்பமான பொறியியலின் தேவை உள்ளது என்றும், அதனால் அப்படியான துறைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது எனவும் பேராசிரியர்ர் ஹுவாங் சுட்டிக்காட்டுகிறார்.

உதாரணமாக ஸ்மார்ட் ஃபோன்கள், கணினிகள் ஆகியவற்றுக்கு தேவையான உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய கணினி சில்லுகள் ஜப்பான் அல்லது தாய்வானிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன என்கிறார் ஜார் ஹுவாங்.

சீனாவின் துல்லியத்துடன் கூடிய அதியுயர் தொழில்நுட்பத்திறன் இல்லாத ஒரு சூழலே நிலவுகிறது என்றும், இதில் தான் ஜெர்மனி மற்றும் ஜப்பான் தனித்து நிற்கின்றனர் எனக் கூறும் அவர், சீனாவில் திறமையான தொழிலாளிகள் உள்ளனர் ஆனால் சிறப்பான தொழில்நுட்பம் இல்லை எனவும் கூறுகிறார்.

சீனாவின் உற்பத்தி திறன் நுனிப்புல் மேயும் கதையே எனவும் பேராசிரியர் ஜார்ஜ் ஹுவாங் பிபிசியிடம் தெரிவித்தார்.