பாலியல் தொழிலாளிகளுக்கு ஓய்வு இல்லம் உருவாக்கிய பாலியல் தொழிலாளி

படத்தின் காப்புரிமை Clayton Conn

பல ஆண்டுகள் மெக்ஸிகோ சிட்டியின் வீதிகளில் பாலியல் தொழிலாளியாக வாழ்ந்த பின், கார்மென் முனோஸ், வயதாகும்போது தன்னைப் போன்ற விலைமாதர்களுக்கு என்ன நேரும் என்று யோசித்தார்.

அவர்களுக்கென்று ஒரு ஓய்வு இல்லம் கட்ட வேண்டும் என்ற யோசனை அவருக்கு உதிக்க, அதற்காக பிரசாரம் செய்யத் தொடங்கினார்.

மெக்சிகோ சிட்டியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பிளாசா லொரெட்டோ; 16ம் நூற்றாண்டு காலத்திய கட்டிடங்கள் சூழ்ந்த இடம். இங்குதான் கார்மென் முனோஸ் ஒரு பாலியல் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

அந்த நகருக்கு அவர் வேலை தேடித்தான் வந்தார். சாண்டா தெரெசா லா நூவா தேவாலயத்தில் உள்ள பாதிரியார் சில நேரங்களில் வேலை தேடுவோருக்கு வீட்டுப் பணியாளர்களாக வேலை வாங்கிக் கொடுப்பார் என்று அவருக்கு யாரோ சொல்லியிருந்தார்கள்.

கார்மெனுக்கு வயது 22 - எழுதப்படிக்கத் தெரியாது. ஏழு குழந்தைகள் அந்த வயதிலேயே அவருக்கு. அதில் ஒன்று கைக்குழந்தை.

நான்கு நாட்கள் அவர் பாதிரியாரை சந்திக்கக் காத்திருந்தார். ஒரு வழியாக அவரை சந்தித்தபோது, பாதிரியார் அவருக்கு உதவி ஏதும் செய்யாமல் அவரைத் திருப்பியனுப்பிவிட்டார்.

``அங்கே ஏராளமான வேலைகள் இருக்கின்றன, தேடிப்பார்த்தால் கிடைக்கும்`` , என்று அவர் சொன்னர், என்று நினைவுகூர்கிறார் கார்மென்.

``பாதிரியார் அந்த மாதிரி பேசியது என் மனதைப் புண்படுத்தியது. நான் அழுதேன்``, என்கிறார் அவர்.ட்

படத்தின் காப்புரிமை Clayton Conn

அந்தத் தருணத்தில் , ஒரு பெண் கார்மெனுக்கு ஆறுதல் கூற வந்தார்.

``அங்கிருக்கும் அந்த நபருடன் நீ போனால் உனக்கு 1,000 பேசோக்கள் ( மெக்சிகோ நாணயம்) தருவேன் என்கிறார்``, என்று அந்தப்பெண் கூறியதாக நினைவு கூர்கிறார் கார்மென்.

அந்த நேரத்தில் அது ஒரு பெரிய தொகையாக அவருக்குத் தோன்றியது. இப்போதைய அந்நிய செலாவணி மதிப்பை வைத்துப் பார்த்தால் , 1,000 பேசோ என்பது 5 அமெரிக்க செண்ட்டுகளுக்குத்தான் சமம்.

`` நான் சொன்னேன் - நான் ஒரே நேரத்தில் 1,000 பேசோக்களைப் பார்த்த்தேயில்லை. நான் அவருடன் எங்கே செல்லவேண்டும்?``

``அவள் சொன்னாள் - `ஒரு அறைக்கு`.

நான் கேட்டேன்: `` அறைக்கா? என்ன வேலை அங்கே தருவர்கள்?``

அவள்,``இல்லை, உனக்குப் புரியவில்லை. ஒரு ஹோட்டலுக்குச் செல்லவேண்டும்``, என்றாள்.

`` நான் கேட்டேன் - ஹோட்டல் என்றால் ?``

பிறகுதான் அந்தப் பெண் நேரடியாக கார்மென் என்ன செய்யவேண்டும் என்று போட்டுடைத்தாள்.

அதைப் புரிந்து கொண்டவுடன் கார்மெனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

``இல்லை , அதை என்னால் செய்யமுடியாது``, என்றாள் கார்மென்.

``அதை உன்னால், உனக்கு ஒரு சோப்பு கூட வாங்கித் தராத உன் கணவனுக்கு தர முடியும் , ஆனால் உனக்கும் உன் குழந்தைகளுக்கும் பணம் தரக்கூடியவர்களுக்குச் செய்ய முடியாதா?``

வேறு ஒன்றும் செய்ய இயலாத நிலையில், அந்த ஆணுடன் சென்றார் கார்மென். ஆனால் அந்த நபரோ, அவளிடம் 1,000 பேசோக்களை மட்டும் கையில் திணித்துவிட்டு, அவளிடமிருந்து வேறெதையும் பெற்றுக்கொள்ளவில்லை. அவளின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்று கார்மெனிடம் அந்த ஆண் கூறிவிட்டார். அவரிடமிருந்து பணத்தைக் கையில் வாங்கும்போது, கார்மென் அழுதேவிட்டார்.

படத்தின் காப்புரிமை ShutterStock/Benedicte Desrus
Image caption காசா ஸோச்சிகுயிட்சாலில் உள்ள குடியிருப்புவாசி-சோல்டாட்,

ஒரு வேளை அவருக்கு கார்மென் மீண்டும் திரும்பத் தொழிலுக்கு வருவார் என்று தெரிந்திருந்தது போல.

முதல் நாள் இருந்த பலவீனமான மனோநிலை, அடுத்த நாள் துணிச்சலாக மாறியது. மீண்டும் கார்மென் அதே இடத்துக்கு வந்தார். ``இன்றிலிருந்து என் குழந்தைகள் பட்டினி கிடக்கமாட்டார்கள்`` , என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார் கார்மென்.

அடுத்த 40 ஆண்டுகள் கார்மெனுக்கு இந்த பிளாசா மற்றும் அதைச் சுற்றியுள்ள வீதிகளில்தான் கழிந்தன.

மெர்சட் என்றழைக்கப்படும் அந்தப் பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்ட இடம்.

நகரின் மிகப் பழைய கட்டிடங்கள் சில அங்கு இருக்கின்றன. நகரின் வணிக மையமும் அதுதான். அங்குதான், நகரில் உள்ள ஏழு சிவப்பு விளக்குப் பகுதிகளில் மிகப்பெரிய பகுதியும் அமைந்திருக்கிறது.

அந்தப் பகுதியில் எந்தப் பக்கம் திரும்பினாலும், குறைந்தது ஒரு மோசமான ஹோட்டலாவது இருக்கும்.

'சுய மதிப்பை'த் தந்த தொழில்

``முதலில் இந்த தொழிலில் நுழைந்தபோது, இதில் வரும் பணம் என்னை பிரமிக்க வைத்த்து`` என்றார் கார்மென். `` என் குழந்தைகளின் தந்தை, எனக்கு ஒரு மதிப்பும் இல்லை, நான் அழகற்றவள் என்றெல்லாம் கூறிவந்த நிலையில், எனக்கென்று ஒரு மதிப்பு இருக்கிறது, என்னுடன் இருக்கவும் பணம் கொடுக்க சிலர் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்`` என்கிறார் அவர்.

டுமையான வாழ்க்கை

ஆனால் பாலியல் தொழிலால் ஏற்பட்ட பிரச்சனைகள் பல.

போலிசாரும், தரகர்களும் பணம் கேட்டனர். அடி உதை, பாலியல் தொந்தரவுகள் எல்லாம் சாதாரண நிகழ்வுகள்.

அவர் போதை மருந்துகள் மற்றும் மதுவுக்கும் அடிமையானார்.

இருந்தாலும் அவர் கிடைத்த வாழ்க்கைக்கு நன்றியுடன் இருக்கிறார்.

``பாலியல் வேலையால், என் குழந்தைகளைப் பராமரிக்கவும், அவர்களுக்கு வாழ ஒரு வீடு தரவும் என்னால் முடிந்தது ``,என்கிறார் அவர்.

வீடு அவர்களுக்கு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பாடு செய்ய முடிந்தது.

படத்தின் காப்புரிமை Shutterstock/Benedicte Desrus
Image caption முகாமில் உள்ள தன்னுடைய படுக்கையறையில் தன்னை அலங்கரித்து கொள்ளும் லுச்சிடா

ஒரு நாள் இரவு, அவர் வீதியின் ஓரத்தில், ஒரு அழுக்கான, நகர்ந்து கொண்டிருந்த தார்பாலின் திரையைக் கண்டார். ``ஏதோ குழந்தைகள் ஒளிந்துகொண்டிருப்பார்கள் என்று எண்ணி, அதன் அருகில் சென்று, அதை இழுத்துப் பார்த்தேன்``, என்றார் அவர். ஆனால் மாறாக மூன்று வயதான சக பாலியல் தொழிலாளிகள் அந்த தார்பாலின் திரைக்குள் ஒண்டிக்கொண்டிருப்பதை அவர் கண்டார்.

``அவர்கள் இந்தக் கோலத்தில் பார்ப்பது, மனிதர் என்ற அளவில் என்னை மிகவும் சங்கடப்படுத்தியது``, என்றார் கார்மென்.

அவர் அந்தப் பெண்களை எழுப்பி, காபி கொடுத்து, ஒரு மலிவான ஹோட்டலில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கவைத்தார்.

இந்த சம்பவம், அவரை, எத்தனை வயது முதிர்ந்த பெண்கள் பிளாசாவில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சிந்திக்க வைத்தது.

அவர்களின் இளமை போன பிறகு பலர் வீதிகளில் இந்த வேலையைச் செய்ய முடியாமல்,பராமரிப்பற்ற அநாதரவு நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஓய்வு இல்லத்துக்கான போராட்டம்

அவர்கள் குடும்பங்கள் அவர்களை ஆதரிக்க விரும்புவதில்லை. வேறு போக்கிடமும் அவர்களுக்குக் கிடையாது.

இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற வைராக்கியம் கார்மெனுக்கு ஏற்பட்டது.

அடுத்த 13 ஆண்டுகள், இந்த முதிய, வீடற்ற பாலியல் தொழிலாளிகளுக்கு ஒரு ஓய்வு இல்லம் வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுடன் போராடினார் அவர்.

பல பிரபல கலைஞர்கள், மெர்சட்டின் அருகில் வசிப்பவர்கள் மற்றும் சக பாலியல் தொழிலாளிகள் ஆதரவுடன், அவர் ஒரு வழியாக நகராட்சியை இணங்க வைத்தார்.

படத்தின் காப்புரிமை Shutterstock/Benedicte Desrus
Image caption தன்னுடைய அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் நோர்மா

ப்ளாசா லொரெட்டோவுக்கு அருகிலேயே உள்ள ஒரு பெரிய 18ம் நூற்றாண்டு கட்டிடத்தை அவர்களின் இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கியது மாநகராட்சி.

அந்தக் கட்டிடத்தின் வாசல் வழியாக நுழைந்த பெண்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

``அது ஒரு சிலிர்ப்பான அனுபவம்``, என்கிறார் கார்மென். நாங்கள் மகிழ்ச்சியில் அழுதோம், சிரித்தோம் , `` எங்களுக்கென்று இப்போது ஒரு வீடு இருக்கிறது என்று கத்தினோம்`` , என்றார் கார்மென்.

முன்பு ஒரு குத்துச்சண்டை அருங்காட்சியகமாக இருந்த இந்த கட்டிடத்தை சுத்தம் செய்ய பெருமுயற்சி தேவைப்பட்டது.

இந்த இல்லத்துக்கு பெண்களின் அழகுக்கும் , பாலியல் சக்திக்கும் கடவுளாகக் கருதப்படும் அஜ்டெக் கடவுள் `காசா ஸோகிக்கெட்ஸால்` என்று பெயரிட்டனர்.

இங்கு நகை வேலை மற்றும் பூ அலங்கார வேலை பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. கேக் செய்வதற்கும் பயிற்சி தரப்படுகிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption காசா ஸோச்சிகுயிட்சாலில் உள்ள குடியிருப்புவாசிகள் மெக்ஸிக்கோ நாட்டின் 200வது ஆண்டை கொண்டாடுகிறார்கள்.

பெண்களுக்கு புதிய திறன்களைக் கற்றுக்கொடுக்கும் அதே நேரம், இந்த இல்லம், அவர்களது உடல் நலம் மற்றும் மனோநலத்தையும் பேணவேண்டும் என்று முயல்கிறது. மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் தரப்படுகின்றன.

இப்போது அங்கு 25 முதிய மற்றும் வீடற்ற பெண்கள் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். அவர்கள் வயது 55லிருந்து 80-85 வரை.

படத்தின் காப்புரிமை Shutterstock/Benedicte Desrus
Image caption முகாமில் உள்ள கனேலா மாற்றும் நோர்மா

கடந்த 11 ஆண்டுகளாக 250க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்கு இங்கு தங்கும் இடம் தரப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த இல்லத்துக்கு நிதி பெறுவதில் சவால்கள் இருக்கின்றன.

மாநகராட்சி அதற்கு அளித்து வந்த நிதியை குறைத்து விட்டது. இப்போது அது அற நிறுவனங்களின் கொடைகளை சார்ந்திருக்கிறது.

இதற்கும் மேலாக , இல்லத்தில் தங்கியிருக்கும் பெண்களுக்குள்ளேயே பிரச்சனைகள் வருவதுண்டு.

இப்போது இந்தப் பெண்கள் நண்பர்கள்தான், ஒரே அறையில் வசிப்பவர்கள்தான் என்றாலும், முன்பு தொழிலில் இருந்தபோது நிலவிய போட்டி காரணமாக விரோதிகளாகவும் இருந்தவர்கள்.

படத்தின் காப்புரிமை Shutterstock/ Benedicte Desrus
Image caption காசா ஸோச்சிகுயிட்சாலில் உள்ள இல்லத்தில் தன்னுடைய அறையில் மரியா இஸ்பெல்

``நாங்கள் பயன்படுத்தப்பட்டவர்கள். துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள். வாழ்க்கையின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். எனவே எப்போதும் ஒரு வித பதற்ற நிலையிலேயேதான் இருப்போம்```, என்று விளக்குகிறார் கார்மென். ``தாக்கப்பட்டால், பதில் தாக்குதலுக்குத் தயாராக இருப்போம்``, என்றார் அவர்.

ஆனால் குடும்பத்தில் கருத்து வேற்றுமைகள் வருவதில்லையா அது போல இந்த இல்லத்திலும் வரத்தான் செய்யும் என்கிறார் அகுயிலார் என்ற மற்றொருவர். `` இங்கு மற்றவர்களை மதிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்படுகிறது, சில விஷயங்களுக்காக சண்டையிடுவது சரிதான் என்றும் சொல்லித்தரப்படுகிறது- இது இந்த இல்லத்தில் அமைதியை ஏற்படுத்துகிறது``, என்கிறார் அவர்.

சௌஜன்ய நிலை இல்லாவிட்டாலும், ஒரு வித அமைதி உணர்வு இருக்கிறது இங்கு. தாங்கள் வீதிகளில் யாரும் கேட்பாரற்று இறந்து கிடக்கமாட்டோம் என்ற உறுதிப்பாடு இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Shutterstock/Benedicte Desrus
Image caption பணிக்கு செல்வதற்கு முன்பு தன்னை அலங்கரித்து கொள்ளும் பவோலா

எங்கள் கடைசி காலத்தில் கண்ணியத்தோடும் அமைதியோடும் கழிக்க ஒரு இடம் எங்களுக்கு வேண்டும் - அதைப் பெற எங்களுக்குத் தகுதி உண்டு, என்கிறார் கார்மென்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்