தெற்கு சூடானில் பஞ்சம் தாக்கியுள்ளதாக ஐநா பிரகடனம்

உலகில் கடந்த 6 வருடங்களில் முதல் தடவையாக தெற்கு சூடானில் பஞ்சம் தாக்கியுள்ளதாக பிரகடனம் செய்ய்யப்பட்டுள்ளது.

தெற்கு சூடானில் பஞ்சம் பிரகடனம்
படக்குறிப்பு,

தெற்கு சூடானில் பஞ்சம் பிரகடனம்

பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பஞ்சத்தால் பிடிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லட்சம் பேர்வரை பட்டினியில் வாடுவதாகவும் அந்த நாட்டு அரசாங்கமும் ஐநாவும் கூறியுள்ளன.

உள்நாட்டுப் போரும் பொருளாதார வீழ்ச்சியும் இந்த பஞ்சத்துக்கு காரணமாக கூறப்படுகின்றது.

ஏமன், சோமாலியா மற்றும் வடகிழக்கு நைஜீரியாவில் நிலவரம் பஞ்ச நிலையை எட்டியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ள போதிலும், தெற்கு சுடானில்தான் பஞ்சம் முதல் தடவையாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு சூடானின் யுனிட்டி மாநிலத்தில் பஞ்சம் தாக்கியுள்ளதாகவும் ஆனால், மனித நேய உதவிகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால், நெருக்கடி ஏனைய இடங்களுக்கும் பரவலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தெற்கு சூடானின் மக்கள் தொகையின் 40 வீதத்துக்கும் அதிகமான மக்கள் அதாவது 49 லட்சம் பேருக்கு அவசர உணவு உதவி தேவைப்படுவதாக ஐநாவின் உலக உணவுத் திட்டம் மற்றும் ஐநாவின் சிறார் அமைப்பான யுனிசெஃப் உட்பட உதவி நிறுவனங்கள் கூறியுள்ளன.

பஞ்சம் எப்போது பிரகடனப்படுத்தப்படும்?

உணவுத்தட்டுப்பாடு பெருமளவிலான மக்களை ஊட்டச்சத்தின்மை நிலைக்கு தள்ளினாலும், ஐநாவின் தரங்களின்படி பஞ்சம் பிரகடனப்படுத்தப்படுவது மிகவும் அபூர்வமாகும்.

நீண்டகால வறட்சியும், ஏனைய பிரச்சினைகளும் உணவு விநியோகத்தை குறைத்தாலும் அவை பஞ்சநிலைக்கு போகும் என்ற அவசியமில்லை.

ஆட்கள் இறத்தல், ஊட்டச்சத்தின்மை மற்றும் பசி ஆகியன ஒரு எல்லையை எட்டும் போதுதான் பஞ்சம் அறிவிக்கப்படும்.

  • குறைந்தபட்சம் 20 வீதமான மக்களாவது உணவுத்தட்டுப் பாட்டை எதிர்கொள்வதுடன் தாக்குப் பிடிக்க முடியாத நிலையை எட்டவேண்டும்.
  • மோசமான ஊட்டச்சத்தின்மை 30 வீதத்துக்கும் அதிகமாக வேண்டும்.
  • பத்தாயிரம் பேருக்கு ஒரு நாளைக்கு இருவராவது இறக்கும் நிலை ஏற்பட வேண்டும்.

பஞ்சம் அறிவிக்கப்படுவதால் ஐநா உறுப்பு நாடுகள் மீது அது எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தாது. ஆனால், அந்த பிரச்சினை குறித்த உலக கவனத்தை ஈர்க்கவே அது செய்யப்படுகிறது.