மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த ஆண்டு மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு மத்தியில் முடிவடைந்த நிலையில், அதே ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.

ஆனால், இந்த தேர்தல் அறிவிக்கையில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறைப்படி பின்பற்றப்படவில்லையெனக் கூறி, தி.மு.கவின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையை ரத்துசெய்து உத்தரவிட்டதோடு, டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அது தொடர்பான வழக்கு மூர்த்தி ராமமோகன ராவ் மற்றும் சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. குமார் தேர்தலை மே மாதத்திற்குள் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

அப்போது வாதிட்ட தி.மு.க. தரப்பு வழக்கறிஞர் வில்சன், மார்ச் மாதத்திலேயே மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்துவிடும் என்பதால், ஏப்ரலில் தேர்தலை நடத்தலாம் என்று கூறினார்.

ஆனால், தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் மீண்டும் முன்வைத்தார்.

இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவு குறித்த காலகட்டம் கடந்துவிட்டது. ஆகவே புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, வரும் மே 14ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென நீதிபதிகள் இடைக்கால உத்தரவு அளித்தனர்.

பிறகு இந்த வழக்கு மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்