“கடல் புழு” இளவரசி கதையால் உருவான லொம்போக் பண்டிகை
செழுமையின் அடையாளமாக இருக்கின்ற கடல் புழுக்களை பிடித்து, சமைத்து சாப்பிட இந்தோனீஷியாவின் செகர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.

பட மூலாதாரம், Rahmat Andi
இந்தோனீஷியாவின் உள்ளூர் சசாக் மொழியில், “கடல் புழுக்களை பிடித்தல்” என்று பொருள்படுகின்ற ‘பௌ நயெலெ‘ பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இந்தோனீஷியாவின் மத்திய லொம்போக்கிலுள்ள கூடா கிராம கடற்கரையோரம் நெடுக வைகறை நேரத்தில் மக்கள் கூட்டம் வந்து சேரத் தொடங்கியுள்ளது. பாரம்பரிய மீன்பிடி கருவிகளோடு வந்த அவர்கள், அந்த கடற்கரையோரத்தில் கடல் புழுக்களை தோண்டி எடுக்கின்றனர்.
பட மூலாதாரம், Rahmat Andi
கடல் புழுக்களை கடலில் முழ்கிவிட்ட இளவரசியின் மறுபிறப்பாக உள்ளூர் மக்கள் பலரும் நம்புகின்றனர். இளவரசி மன்டாலிகா மிகவும் அழகாக இருந்ததால், நாட்டின் எல்லா மூலைகளிலும் இருந்தும் இளவரசர்கள் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினர்.
பட மூலாதாரம், Rahmat Andi
அவரை திருமணம் செய்துகொள்ள இளவரசர்களுக்குள் சண்டையிட்டு வெற்றிகாண அரசர் கேட்டு கொண்டார். “இத்தகைய ரத்தகளறியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு மறுத்துவிட்ட இந்த இளவரசி, கடலில் விழுந்து தன்னையே மாய்த்துக் கொண்டார்” என்று உள்ளூர் சுற்றுலா அதிகாரியான லாலு ஃபௌஸால் கூறினார்.
பட மூலாதாரம், Rahmat Andi
இந்த சடங்கு பல நூற்றாண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்னால்தான் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா நிகழ்வாக இது உருவாகத் தொடங்கியது. “இந்த பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது” என்று ஃபௌஸால் பிபிசியிடம் கூறினார்.
பட மூலாதாரம், Rahmat Andi
இந்த கடல் புழுக்களை சேகரித்த பிறகு, உள்ளூர் மக்கள் அவற்றை தீயில் சமைத்து அல்லது கம்பி சட்ட அடுப்பில் வாட்டி அல்லது ஆவியில் வேகவைத்த பின்னர் சாப்பிடுகின்றனர். இந்த கடல் புழுக்கள் வளத்திற்கும், செழுமைக்கும் அடையாளமாக இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
பட மூலாதாரம், Rahmat Andi
இந்த கடல் புழுக்கள் பச்சை, மஞ்சள், மற்றும் பழுப்பு என வேறுபட்ட பல நிறங்களில் உள்ளதோடு, விளக்கு வெளிச்சத்தில் ஒளிருபவையாக தோன்றுகின்றன.
பட மூலாதாரம், Rahmat Andi
அவர்களின் பாரம்பரிய நாட்காட்டியின்படி, இந்த பண்டிகையை ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் பாரம்பரிய சசாக் சமூகங்கள் கொண்டாடுகின்றன. கடந்த வாரம் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிக்கு முன்னால், உள்ளூர் மக்கள் பாரம்பரிய இசை நிகழ்ச்சியையும், கலாசார அணிவகுப்பையும் நடத்தினர்.
பட மூலாதாரம், Rahmat Andi
“இளவரசி மன்டாலிகாவுக்காக இங்கு வாழ்கின்ற எங்களுக்கு இதுவொரு கொண்டாட்டம். ‘பௌ நயெலெ‘ (கடல் புழுக்கள்) சேகரிப்பதற்கு கடற்கரைக்கு மக்கள் பலர் வருவதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று உள்ளூரை சேர்ந்தவர்களில் ஒருவரான இனாக் சேனா தெரிவித்தார்.