கடல் நத்தை நஞ்சிலிருந்து கடும்வலிக்கு நிவாரணம்

சிறிய நத்தை ஒன்றிலிருந்து எடுக்கப்படும் நஞ்சு நாள்பட்ட வலியை குணப்படுத்துவதில் உதவக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்

பிபிசி, மருந்து

பட மூலாதாரம், MY HUYNH

படக்குறிப்பு,

கோனஸ் ரெய்ஜியுஸ் கடல் நத்தையின் கூடுகள்

அமெரிக்காவின் யூட்டாஹ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், எலிகளிடம் நடத்திய ஆய்வில் நம்பிக்கையூட்டும் இந்த முடிவு தெரியவந்துள்ளது.

கோனஸ் ரெய்ஜியுஸ் என்றழைக்கப்படும் கடல் நத்தை, உணவுக்காக இலக்கு வைக்கும் ஜீவராசிகள் மீது இந்த நஞ்சைப் பாய்ச்சி அதை முடக்கவோ அல்லது கொல்லவோ பயன்ப்படுத்துகிறது.

ஆனால் எலிகள் மீது இந்த நஞ்சை குறிப்பிட்ட அளவில் செலுத்தினால் மூன்று நாட்களுக்கு பிறகும் அது வேலை செய்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் வேறு வழிகளில் வலி நிவாரணம்பெற முடியாதவர்களுக்கு, புதிய மருந்தை உருவாக்க இது பயன்படக் கூடும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள.

ஓபியாய்ட்ஸ் எனப்படும் வலி நிவாரணிகள் மிதமானது முதல் கடுமையான வலி உள்ளவர்களுக்கு, வலி குறைவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, நோயாளிக்கு சிறிதளவு ஆறுதலை அளிக்கிறது.

மூளை மற்றும் உடலின் வேறு சில உறுப்புகளில் இருக்கும் புரதங்களுடன் இந்த வலிநிவாரணி ஒட்டிக்கொண்டு செயல்படுவதால் வலி குறைவதைப்போன்ற எண்ணம் உருவாகிறது.

நரம்பு மண்டலத்தின் மீது தாக்கம்

ஆனால் கரீபியன் பகுதியில் இருக்கும் இந்த கோனஸ் ரெய்ஜியுஸ் கடல் நத்தையின் நஞ்சிலிருந்து எடுக்கப்படும் Rg 1A எனப்படும் வேதியியல் கூட்டு, வேறு வழியில் வேலை செய்வதால், வலி நிவாரணத்துக்கான புதிய பாதையொன்று திறந்துள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த வேதியியல் கூட்டு நரம்பு மண்டலத்தின் சில பகுதிகள் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவது போலத் தோன்றுவதாக என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கண்டுபிடிப்பு வலியைக் குறைப்பதில் புதிய வழிகளை ஏற்படுத்தியுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

தீர்க முடியாத கடுமையான வலி ஏற்பட்டால் அதற்கு மருத்துவம் அளிப்பது கடினம் எனும் நிலையில், இந்த ஆய்வின் முடிவு உற்சாகமூட்டுகிறது என்று ஆய்வை முன்னெடுத்த யூட்டாஹ் பல்கலைக்கழக உளவியில்துறை பேராசிரியர் ஜெ மைக்கேல் மெக்கிண்டாஷ் கூறுகிறார்.

இந்த புதிய வேதியியல் கூட்டானது அடிப்படையில் வலி ஏற்படுவதை தவிர்க்கிறது என்றும் வேறு வழிகளில் நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு புதிய சிகிச்சை அளிக்கப்படும் வாய்ப்பை உருவாக்குகிறது என்று அவர் கூறுகிறார்.

எலிகளுக்கு கதிரியக்கச் சிகிச்சை அளிக்கும்போது, தொடுவுணர்ச்சி மற்றும் ஈரப்பதத்தால் வலியை உணர்ந்த அவை, இந்த நத்தை நஞ்சிலிருந்து உருவாக்கப்பட்ட வேதியியல் கூட்டின் சிறு அளவைக் கொடுத்தபோது வலியை உணரவில்லை என்பது கண்டறியப்பட்டது.

எலிகளுக்கு ஊசி மூலம் இந்த மருந்து செலுத்தப்பட்டு 72 மணி நேரங்களுக்கு பிறகும் அவை வலி உணர்வை தடுத்தன என்றும் பேராசிரியர் மெக்கிண்டாஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.