அதிக ஆயுட்காலம் கொண்டவர்களாக தென் கொரிய பெண்கள் உருவெடுப்பார்கள் என கணிப்பு

90 வயதிற்கு மேல் சராசரி ஆயுட்காலம் கொண்டவர்களாக தென் கொரிய பெண்கள் தான், உலகில் முதன் முதலில் உருவெடுப்பார்கள் என்று ஒரு ஆய்வு கணிப்பு வெளியிட்டுள்ளது.

தொழில் வளர்ச்சி அடைந்துள்ள 35 நாடுகளில், லண்டன் இம்பீரியல் கல்லூரி மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து மனிதனின் சராசரி வாழ்நாள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டன.

2030 ஆம் ஆண்டுவாக்கில், இந்த நாடுகளில் எல்லா மக்களும் அதிக காலம் வாழ்வார்கள் என்றும், பெரும்பாலான நாடுகளில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான ஆயுள் இடைவெளி குறையத் தொடங்கும் என்றும் இந்த ஆய்வு கணித்துள்ளது.

ஓய்வூதியம் மற்றும் முதியோர் பராமரிப்பில் இது பெரிய சவால்களை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"தென்கொரியா பல விஷயங்களை சரியாகச் செய்திருப்பதாக பேராசிரியர் மஸ்ஜித் எஜ்ஜாட்டி பி.பி.சி இணைய தளத்திடம் கூறியிருக்கிறார்.

``அந்த நாட்டு மக்கள் சரியான இடத்தில் இருப்பதோடு, கல்வி, ஊட்டச்சத்து, போன்ற பல விஷயங்கள் அனைத்து தென் கொரியர்களுக்கும் கிடைத்துள்ளன``.

``மேலும் இதுவரை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்றவற்றை கையாளுவதில் உலகிலேயே அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்``.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தென் கொரிய பெண்கள் அதிக ஆயுட்காலம் கொண்டவர்களாக இருப்பார்கள் என கணிக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் அதிக ஆயுட்காலத்துக்குப் பெயர்போன ஜப்பான், தற்போது உலக தரவரிசையில் கீழே இறங்கும் என்று இந்த தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் பெண்கள் அதிக ஆயுள் கொண்டவர்களாக இருந்தாலும், தென் கொரியா மற்றும் பிரான்சு பெண்கள் அவர்களை முந்திவிவிடுவார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது. இதனிடையில், கணிப்பிற்கு எடுத்துக் கொண்ட நாடுகளில் ஜப்பான் நாட்டு ஆண்களின் சராசரி ஆயுள் குறைந்து, நான்காவது இடத்தில் இருந்து பதினோராவது இடத்திற்கு இறங்கிவிட்டது.

இந்த ஆய்வின்படி, அமெரிக்காவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுவாக்கில், செல்வந்த நாடுகளில் குறைந்த வாழ்நாள் கொண்ட நாடாக அமெரிக்கா இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அப்போது ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 80 ஆக இருக்கும் என்றும், பெண்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆக இருக்கும் என்றும் இந்த ஆய்வு கணித்துள்ளது. இது அப்போது மெக்சிகோ மற்றும் குரோசியாவில் எட்டப்பட்டிருக்கும் அதே நிலைதான்.

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு,

சர்வதேச அளவில் சுகாதார காப்பீடு இல்லாத ஒரே நாடு அமெரிக்கா

அமெரிக்கா இந்த விஷயத்தில் தென்கொரியாவுக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளது" என்று பேராசிரியர் எஜ்ஜாட்டி கூறுகிறார்.

"(அமெரிக்க சமூகத்தில்) தேசிய அளவில் நிலைமை மிகவும் சமமற்று இருக்கிறது - சர்வதேச அளவில் சுகாதார காப்பீடு இல்லாத ஒரே நாடு அமெரிக்கா.

குழந்தைகள் உயரமாக வளர்வது நின்றுபோன முதல் நாடு அமெரிக்கா, இது ஆரம்பகால ஊட்டச்சத்து தொடர்பான எதையோ உணர்த்துகிறது."

சிலி, அமெரிக்காவை 2030ல் முந்திவிடும், அங்கு 2030 ஆம் ஆண்டுவாக்கில் பிறக்கும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 87 ஆண்டுகளாகவும் ஆகவும், ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 81 ஆண்டுகளாகவும் இருக்கும்.

2015 லிருந்து 2030 வரையிலான காலகட்டத்தில், பிரிட்டன் ஆண்களின் சராசரி ஆயுள் 79 இல் இருந்து 82 ஆகவும், பெண்களின் சராசரி வயது 83 இல் இருந்து 85 ஆகவும் அதிகரிக்கும்.

ஆண்கள் முன்னேறுகிறார்கள்

ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான ஆயுள் இடைவெளி குறைந்துவருவதாக, `லாண்செட்` என்ற மருத்துவ சஞ்சிகை வெளியிட்ட ஆய்வு கூறுகிறது.

பேராசிரியர் எஜ்ஜாடி கூறுகிறார் "ஆண்கள் பாரம்பரியமாகவே ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளை கொண்டிருந்த்தால், சராசரி வாழ்நாள் குறைந்தே இருந்தது..

"புகைபிடிப்பது, மது அருந்துவது, சாலை விபத்துகள் மற்றும் கொலை செய்யப்படுவதால் ஆண்களின் சராசரி ஆயுள் குறைவாக இருந்தாலும், தற்போது பெண்களின் வாழ்க்கை முறை கிட்டத்தட்ட அதே போல் மாறிவிட்டதால், இருபாலரின் ஆயுட்காலமும் ஏறக்குறைய ஒன்று போல் மாறுகிறது".

வானிலை கணிப்புகளை மதிப்பிடும் முறைகளை போலவே , இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

21 தனித்தனி கணித மாதிரிகளை ஒருங்கிணைத்து, பழைய போக்குகளுடன் ஒப்பிட்டு, இந்த எதிர்கால புதிய கணிப்புகளுக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புகைபிடிக்கும் விகிதம், மருத்துவ மேம்பாடு, உடற்பருமனின் வகைகள் போன்ற வாழ்நாளை மாற்றும் பல்வேறு காரணிகளை மறைமுகமாக கவனத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சி அல்லது அனைத்துவிதமான புற்றுநோய்களுக்கும் தடுப்பு மருந்து போன்ற விதிவிலக்கான, எதிர்பாராதவிதமான சம்பவங்கள் ஏதும் நிகழாதபட்சத்தில், நாடுகள் தற்போது இருப்பதைப் போலவே தொடர்ந்து முன்னேறம் காணும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

"சுகாதாரத் துறையில் முதலீடு செய்து, அதன் பயன் அனைவருக்கும் சென்றடைவதை உறுதிபடுத்தினால், நாடுகள் சிறப்பாக செயல்படமுடியும் என்று பேராசிரியர் எஜ்ஜாட்டி கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்