கடும் விஷச் சிலந்தி கொட்டிய சிறுவன் தப்பியது எப்படி?

உலகிலேயே அதிக நச்சுத்தன்மை கொண்ட ஒரு சிலந்தி கொட்டிய பத்து வயது ஆஸ்திரேலிய சிறுவன், 12 குப்பிகள் விஷ முறிவு மருந்து கொடுக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

அதிக நச்சுத்தன்மை கொண்ட ஒரு சிலந்தி

பட மூலாதாரம், AUSTRALIAN REPTILE PARK

சிகிச்சைக்காக இந்த அளவு விஷமுறிவு மருந்து கொடுக்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியாவில் இதுவே முதன்முறை.

கொட்டகை ஒன்றை சுத்தம் செய்து தனது தந்தைக்கு உதவிக் கொண்டிருந்த மேத்யூ மைக்கேலின் விரலில் புனல் வலை சிலந்தி கடித்துவிட்டது.

உடனே, மைக்கலுக்கு வலிப்பு ஏற்பட்டு, கண்கள் செருகி, வாய் உலர ஆரம்பித்துவிட்டது.

``என்னை ஏதோ கவ்வியது போல இருந்தது, என் விரலை, அதன் அனைத்து கால்களும் பிடித்துக்கொண்டன, என்னால் விடுபடவே முடியவில்லை``, என்று சிறுவன் ஆஸ்திரேலியன் டெய்லி டெலிகிராஃப் நாளிதழிடம் தெரிவித்தார்.

நச்சு பரவாமல் இருக்க, மேத்யூ மைக்கேலின் சட்டையை இறுக்கிக்கட்டிய அவரது பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மூன்று குப்பி விஷமுறிவு மருந்துக்கு மேல் கொடுத்த யாரும் உயிர் பிழைத்ததில்லை என்று நம்பப்படுவதாக அந்த நாளிதழ் தெரிவிக்கிறது.

அந்த நச்சு சிலந்தி பிடிக்கப்பட்டு, சிட்னியின் அருகில் இருக்கும் ஊர்ந்து செல்லும் உயிரினங்களுக்கான பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, நச்சு சேகரிக்கப்படும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

தங்களுக்கு தெரிந்த அளவில் மேத்யூ மிகவும் அதிர்ஷ்டசாலி என்கிறார் பூங்காவின் மேலாளர் டிம் ஃ பால்க்னெர்.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள், பல்வேறு புனல்வகை சிலந்திகளின் உச்ச இனப்பெருக்க காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்காலத்தில் பெண் சிலந்திகளை விட ஐந்து மடங்கு நச்சு கொண்ட ஆண் சிலந்திகள் மிகவும் ஆக்ரோஷத்துடன் இருக்குமாம்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்