மலேஷிய விமான நிலையத்தில் கதிரியக்க மூலகமா?

மலேஷிய விமான நிலையத்தில் கதிரியக்க மூலகமா?

வடகொரியத்தலைவரின் சகோதரர் கிம் ஜாங் நாமை, கோலாலம்பூர் சர்வதேச விமானநிலையத்தில் கொல்வதற்கு, உலகின் மிக ஆபத்தான, நரம்புமண்டலத்தை தாக்கும் வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக மலேஷிய காவல்துறை தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடந்து 11 நாட்கள் ஆன பிறகு வி எக்ஸ் என்கிற பெயரில் அழைக்கப்படும் வேதிப்பொருளின் தடயங்கள் தாக்குதல் நடந்த விமானநிலையத்தில் இருக்கிறதா என்பதை பரிசோதித்துவருவதாக மலேஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அங்கே கதிரியக்க மூலகங்கள் இருக்கிறதா என்கிற பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.

இந்த வி எக்ஸ் வேதிப்பொருளை பேரழிவு ஆயுதமாக ஐநா வகைப்படுத்தியுள்ளது.

நாமின் முகத்திலும் கண்களிலும் இந்த வேதிப்பொருள் சிறிதளவு காணப்பட்டது.

இது அதிசக்திவாய்ந்த வேதிப்பொருள்.

இதன் ஒரே ஒரு கிராமின் நூற்றில் ஒரு பகுதி ஒரு ஆளையே கொன்றுவிடும்.

நிறமற்ற வாசனையற்ற வி எக்ஸ் வேதிப்பொருளை தயாரிப்பது மிக மிக கடினம்.

இது பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்திருப்பது இந்த வழக்கின் முக்கிய திருப்பம் என்கிறார்கள் நிபுணர்கள்.

இதன் பின்னணியில் ஒரு அரசு இருந்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.

வேறு ஆறுபேரிடம் விசாரணை செய்யவேண்டும் என்று காவல்துறை விரும்புகிறது.

அதில் நால்வர் ஏற்கனவே வடகொரியாவுக்கு சென்றுவிட்டனர். கோலாலம்பூரிலிலுள்ள வடகொரிய தூதரக அதிகாரி ஒருவரையும் காவல்துறை விசாரிக்க விரும்புகிறது.

வடகொரிய அரசு இதில் ஈடுபட்டிருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்று தென்கொரியா நம்புகிறது.

இந்த வேதிப்பொருள் உட்பட பல ரசாயன ஆயுதங்கள் வடகொரியாவிடம் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

ஆனால் எந்த பிரேதபரிசோதனை அறிக்கையையும் அங்கீகரிக்க மறுக்கும் வடகொரியா, சடலத்தை ஒப்படைக்கும்படி கோரிவருகிறது.

மலேஷியாவின் புலனாய்வை நம்ப முடியாதென கோலாலம்பூரில் இருக்கும் வடகொரிய தூதர் தெரிவித்துள்ளார்.

ஆனால் மலேஷியா இதை கடுமையாக எதிர்த்துள்ளது.

இது தொடர்பான புலனாய்வு நடுநிலையாகவும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடந்ததை ஒட்டுமொத்த உலகமே அறியும் என்று மலேஷிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வேறொரு நாட்டின் சர்வதேச விமானநிலையத்தில் தடைசெய்யப்பட்ட ரசாயனத்தை தாக்குதலாளிகள் பயன்படுத்தியதற்கான சான்றுகள் இருப்பது நிரூபிக்கப்பட்டால் அது பாரதூரமான சர்வதேச பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

இத்தகைய தாக்குதலை நடத்த முடியும் என்கிற யதார்த்தமும் இதை எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதும் உலகநாடுகளுக்கு மிகப்பெரும் கவலையாக மாறியுள்ளது.