கிம் யாங்-நம் கொலை: இந்தோனீஷிய, வியட்நாம் பெண்கள் மீது கொலை வழக்கு

வட கொரிய தலைவரின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் கிம் ஜோங் நாமின் கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு பெண்கள் மீது புதன்கிழமையன்று கொலைக் குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட இருப்பதாக மலேசிய அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

வியட்நாமை சேர்ந்த தேயன் தி ஹூயோங் மற்றும் இந்தோனீஷியாவை சேர்ந்த சிற்றி அஸ்யா

பட மூலாதாரம், Reuters/AFP

படக்குறிப்பு,

கொலையில் ஈடுபட்டுள்ளதாக மலேசியா இனம் கண்டுள்ள 10 சந்தேக நபர்களில், வியட்நாமை சேர்ந்த தேயன் தி ஹூயோங் மற்றும் இந்தோனீஷியாவை சேர்ந்த சிட்டி அய்ஷ்யா பெண்கள் இருவரும் அடங்குகின்றனர்

இந்தோனீஷியா மற்றும் வியட்நாமை சேர்ந்த இந்த பெண்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்யப்படுவதோடு, இந்த குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் மரண தண்டனையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அட்டர்னி ஜெனரல் முகமது அபான்டி அலி தெரிவித்திருக்கிறார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் மலேசிய விமான நிலையத்தில் வைத்து கிம் ஜோங் நாமின் முகத்தில் விஷத்தன்மை வாய்ந்த வி.எக்ஸ் ரசாயனத்தை தெளித்ததாக இந்த பெண்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியில் தாங்கள் பங்கேற்கிறோம் என்று எண்ணியதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு,

சிட்டி அய்ஷ்யாவின் பாஸ்போர்ட் புகைப்படம்

குற்றமுடையவராக கணடறியப்பட்டால் நிச்சயமாக மரண தண்டனை பெறும் கொலை வழக்கு பிரிவில், "கொலை குற்றவியல் சட்ட சரத்தின் 302-ன் கீழ் அவர்கள் வழக்கு பதிவு செய்யப்படுவர்" என்று அட்டர்னி ஜெனரல் தெரிவித்திருக்கிறார்.

இந்த கொலை தொடர்பாக பிடிக்கப்பட்டுள்ள வட கொரியாவை சேர்ந்த ரி ஜோங் சோல் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமா என்பது தொடர்பாக எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த கொலையில் ஈடுபட்டுள்ளதாக மலேசியா இனம் கண்டுள்ள 10 சந்தேக நபர்களில், வியட்நாமை சேர்ந்த தேயன் தி ஹூயோங் மற்றும் இந்தோனீஷியாவை சேர்ந்த சிட்டி அய்ஷ்யா பெண்கள் இருவரும் அடங்குகின்றனர்.

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு,

தேயன் தி ஹூயோங்கின் ஃபேஸ்புக் பக்கம்

கோலாலம்பூரிலுள்ள வட கொரிய தூதரகத்தின் மூத்த அதிகாரியும், நாட்டின் விமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவரும் பிற சந்தேக நபர்களில் அடங்குகின்றனர்.

ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் தூதரின் வழிநடத்துதலில் வட கொரியாவில் இருந்து உயர் நிலை பிரதிநிதித்துவம் செவ்வாய்கிழமையன்று மலேசிய தலைநகரை வந்தடைந்துள்ளது.

கிம் ஜோங் நாமின் சடலத்தை பெற்றுகொள்ளவும், ரி ஜோங் சோலின் விடுதலைக்காகவும், வட கொரியா மற்றும் மலேசியாவுக்கு இடையில் நட்புறவை வளர்க்கவும் வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

கடந்த மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் வாழ்ந்து வந்துள்ள 47 வயதான ரி ஜோங் சோல் சந்தேக நபராக இனம் காணப்பட்டுள்ளார்

இறந்தவர் ராஜீய பாஸ்போட் வைத்து கொண்டு பயணம் மேற்கொண்ட வட கொரியர் என்று கூறியுள்ள வட கொரியா, பிப்ரவரி 13 ஆம் நாள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கொல்லப்பட்டவர் கிம் ஜோங் நாம் என்று உறுதி செய்யவில்லை.

42 வயதான கிம் ஜோங் நாம் வாழ்ந்து வந்த மக்கௌவுக்கு செல்லுவதற்கு விமான நிலையத்தில் சோதனை சாளரத்தில் நின்று கொண்டிருந்தபோது இரண்டு பெண்கள் அவரை சந்தித்தனர்.

நரம்பை பாதிக்கும் கொடிய விஷமான விஎக்ஸ் ரசாயனம் அவர் முகத்தில் பூசப்பட்டதால், வலியால் துடித்து 15, 20 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மலேசிய சுகாதார அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்