திபெத் நாட்டை சேர்ந்த கால்பந்து வீராங்கனைகளுக்கு அமெரிக்க விசா மறுப்பு

  • 2 மார்ச் 2017

அமெரிக்காவில் உள்ள டெக்சஸ் மாநிலத்தில் நடைபெற உள்ள கால்பந்து போட்டியில் பங்கேற்க தங்களுக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டதாக திபெத் பெண்கள் கால்பந்து அணி கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை TIBET WOMEN'S SOCCER

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள காரணம் எதுவும் அவர்களிடமில்லை என கூறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

அந்த அணியில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்தியாவில் வாழும் திபெத்திய குடியேறிகள். தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசாக்காக விண்ணப்பித்திருந்தனர்.

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அமெரிக்க அரசாங்கமானது, ஏழு நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தாற்காலிக தடைவிதித்தது.

ஆனால், அந்த பட்டியலில் இந்தியா மற்றும் திபெத் இல்லை.

அமெரிக்க குடியுரிமை பெற்றவரும், திபெத் பெண்கள் கால்பந்து அணியின் செயல் இயக்குனருமான கேஸி சைல்டெர்ஸ் பிபிசியிடம் பேசுகையில், கடந்த மாதம் பிப்ரவரி 24 ஆம் தேதி விசா நடைமுறைகளுக்காக 16 வீராங்கனைகளை கொண்ட குழுவை அழைத்து சென்றதாக கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை TIBET WOMEN'S SOCCER

''நான் மிகவும் அதிருப்தியில் இருக்கிறேன் காரணம் பல மாதங்களாக திட்டமிட்ட பயணம் இது. இந்த பயணம் குறித்து அணியில் உள்ளவர்களிடம் தெரிவித்த போது அதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்விலும் மிகப்பெரிய தருணமாக கருதப்பட்டது. திபெத்திய பெண்கள் எதிலும் சாதித்து காட்டும் திறன் படைத்தவர்கள் என்பதற்கான வாய்ப்பாக அணியினர் கருதினர்'' என்றார் கேஸி.

தன்னுடைய நாடு பெண்கள் கால்பந்து அணி ஒன்றுக்கு விசா கொடுக்க மறுத்ததை நினைத்து தான் வெட்கப்படுவதாக சைல்டர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

எனினும், விசா மறுக்கப்பட்டதற்கும், டிரம்ப் நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லை என தான் நம்புவதாக கேஸி கூறியுள்ளார்.

தனிப்பட்ட புகார்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ள அமெரிக்கா அதிகாரி ஒருவர், திபெத் மீதான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும், இன்னும் சீனாவின் ஓர் அங்கமாக திபெத் பார்க்கப்படுவதாகவும் ஏ பி செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்