ஆஸ்கரில் உறையை மாற்றித்தந்த இரு கணக்காளர்களின் வீடுகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

  • 3 மார்ச் 2017

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், பிரதான விருதின் உறையில் குழப்பத்தை ஏற்படுத்திய இரு கணக்காளர்களுக்கு சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மார்ட்டா ரூயிஸ் மற்றும் ப்ரையன் கல்லினன்

ப்ரையன் கல்லினன் மற்றும் மார்ட்டா ரூயிஸ் ஆகியோரின் தவறுகளை தொடர்ந்து, இருவரின் வீடுகளிலும் பாதுகாப்பு அதிகரித்திருப்பதாக கணக்குகள் ஆய்வு நிறுவனமான பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் தெரிவித்துள்ளது.

இருவரும் தங்கள் உயிர் குறித்த பயத்தில் இருப்பதாக பிரபலங்கள் பற்றிய இணையதளமான டி எம் ஸி கூறியுள்ளது.

கடந்த புதன்கிழமையன்று, ஆஸ்கர் வேலைகளில் அவர்கள் இருவரும் இனிவரும் காலங்களில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்ற தகவல் வெளியானது. ஆனால், அவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று டிஎம்ஸி செய்தி கூறுகிறது.

ஊடகங்களில் இருவரின் வீட்டு முகவரிகள் மற்றும் குடும்பத்தாரின் புகைப்படங்கள் வெளியானதால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தின் பேச்சாளரான கேரி போரென்ஹெய்மர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வாரேன் பெய்ட்டி மற்றும் ஃபெய் டன்னவே ஆகியோரிடம் தவறுதலாக கல்லினன் தவறான உறையை வழங்கியுள்ளார்

கடந்த ஞாயிறன்று, ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த படத்திற்கான விருது மூன்லைட் திரைப்படத்திற்கு பதிலாக லா லா லேண்ட் என்ற படத்திற்கு வழங்கப்பட்டது.

விருதை ஏற்றுக்கொண்டு லா லா லேண்ட் திரைப்பட குழுவினர் ஏற்புரை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் நடுவே குறுக்கீடு செய்யப்பட்டு உண்மையான வெற்றியாளர் அறிவிக்கப்பட்டது.

அகாடமி விருதுகளின் 89 ஆண்டுகால வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய தவறாக விவரிக்கப்படுகிறது.

இரு தொகுப்பாளர்கள் வாரேன் பெய்ட்டி மற்றும் ஃபெய் டன்னவே ஆகியோரிடம் தவறுதலாக கல்லினன் தவறான உறையை வழங்கியுள்ளார்.

சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட திரைப்படத்தின் பெயரை கொண்ட உறையை வழங்குவதற்கு பதிலாக, முன்னணி கதாபாத்திரம் ஒன்றில் சிறந்த நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயரை கொண்ட உறை தொகுப்பாளர்களிடம் வழங்கப்பட்டது.

வாக்குகளை எண்ணி உறைகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் செய்து வருகிறது.

ஆஸ்கர் விழாவில் நடைபெற்ற குழப்பங்களுக்கு அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்