இலங்கை அரசின் செயல்பாடுகள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் அதிருப்தி

  • 4 மார்ச் 2017

இலங்கையில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நிலை, நீதி கிடைப்பதற்காக மேற்கொள்ளப்படும் மந்தகதியிலான நடவடிக்கை மற்றும் முந்தைய குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் குறித்து ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாமை ஆகிய காரணங்களால் தடம் புரளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.மா. மனித உரிமை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை OHCHR
Image caption சையத் அல் ஹூசைன்

ஐ.நா. மனித உரிமை ஆணையர் சையத் அல் ஹூசைன், வரும் 22-ஆம் தேதி ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்.

அரசியல் சட்ட சீர்திருத்தம் மற்றும் பொதுவான மனித உரிமை அம்சங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. ஆனால், இடைக்கால நீதி வழங்குதல் தொடர்பாக அளிக்கப்பட்ட உறுதிமொழி கவலையளிக்கூடிய வகையில் மந்தகதியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஆய்வு செய்த காலகட்டத்தில், அரசு ஏற்படுத்திய கட்டமைப்புக்கள் மற்றும் நடவடிக்கைகள் உண்மையான முன்னேற்றம் ஏற்படுவதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை OHCHR
Image caption ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டம்

இலங்கையில் 2002-ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவிட்டது.

இந் நிலையில், 17 மாதங்களுக்கு முன்பு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தான் அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள ஆணையர், அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவர கிடைத்துள்ள வாய்ப்பை நழுவ்விடக்கூடாது என்று கேட்டுக் கொண்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

முன்பு நடந்த குற்றச் செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு, நீதியையும், நல்லிணக்கத்தையும் ஒருங்கே கொண்டு செல்ல வேண்டிய கடமை அரசுக்கும் மக்களுக்கும் இருப்பதையும், அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதையும் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

நல்லிணக்க திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு பிரசாரம் செய்ய ஆலோசனை செயலாக்கக் குழுக்களை அமைத்தல், இலங்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணைய அலுவலகம் ஏற்படுத்துதல், ராணுவம் ஆக்கிரமித்துள்ள தனியார் நிலங்களை விடுவித்தல், சர்வதேச பங்களிப்புடன் கூடிய கலப்பு நீதிமன்றங்கள் அமைத்தல் உள்பட பல்வேறு பரிந்துரைகள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Image caption இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்படுவது, காவல் துறையின் அத்துமீறல்கள், துன்புறுத்தல்கள் ஆகியவை தொடர்ந்து நடப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துன்புறுத்தல், பாலியல் வன்முறை மற்ரும் பிற மனித உரிமை மீறல்கள் எந்த வகையிலும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், கடுமையா தண்டிக்கப்படுவார்கள் என்றும் ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகள், உளவுத்துறை மற்றும் காவல் துறைக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையர் சையத் அல் ஹூசைன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரிகள் அனைத்து இலங்கை மக்களின் நம்பிக்கையப் பெறுவதற்கும், அனைத்து மக்களின் உரிமைகளையும் காப்பதற்கு அரசாங்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் மீது முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயல்பாட்டில் நடவடிக்கை எடுக்க மேலும் இரண்டு ஆண்டுகள் அவசாகம் தேவை என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த அவகாசத்தை வழங்க பிரிட்டன் சார்பில் ஒரு பிரேரணை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந் நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனிடம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதே நேரத்தில், ஐ.நா. மனித உரிமை ஆணையத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதியின்படி இலங்கை அரசு செயல்படாது என்றும், அதற்கான அரசியல் சூழ்நிலை தென்னிலங்கையில் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.