ட்ரம்பின் புதிய தடையுத்தரவு: நீதிமன்றங்கள் ஏற்குமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ட்ரம்பின் புதிய தடையுத்தரவு: நீதிமன்றங்கள் ஏற்குமா?

  • 7 மார்ச் 2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பயணத்தடை குறித்து ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆறு நாட்டு மக்கள் அமெரிக்கா வருவதற்கு 90 நாட்கள் தடைவிதிக்கும் புதிய உத்தரவில் அதிபர் ட்ரம்ப் திங்களன்று கையெழுத்திட்டார்.

இது அமெரிக்காவின் பாதுகாப்பை பாதிக்கும் என்று ஜனநாயக கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

டொனால்ட் ட்ரம்பின் இந்த புதிய ஆணையால் சொமாலியா, சூடான், சிரியா, இரான், லிபியா மற்றும் யெமென் நாட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் முந்தைய உத்தரவிலிருந்த இராக் இதில் இல்லை.

அமெரிக்க கிரீன்கார்ட் மற்றும் முறையான விசாக்கள் இருப்பவர்கள் இந்த தடையால் பாதிக்கப்படமாட்டார்கள்.

முந்தைய உத்தரவில் கூறப்பட்டிருந்ததைப்போல சிரிய அகதிகள் மீது மட்டும் குறிவைத்து கடுமை காட்டப்படவில்லை.

அதேசமயம் சில அகதிகள் பயங்கரவாத ஆபத்தை உருவாக்கவல்லவர்கள் என்று ட்ரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

இந்த புதிய உத்தரவை நீதிமன்றங்களில் தாக்குப்பிடிக்கும் வகையில் உருவாக்க ட்ரம்ப் நிர்வாகம் முயன்றுள்ளது.

ஆனால் அதில் அவர்கள் வெற்றி பெற்றதாக சொல்ல முடியாது என்கிறார்கள் அரசியல் சட்டவல்லுனர்கள்.

“இந்த நிர்வாக ஆணையை எதிர்க்க முகாந்திரங்கள் உள்ளன. முந்தைய உத்தரவை எதிர்த்ததற்கான அதே காரணங்கள் இதற்கும் பொருந்தும். ஆனால் கொஞ்சம் கூடுதல் சிரமமாக இருக்கும். இது கொஞ்சம் மேம்படுத்தப்பட்டிருந்தாலும் இதை நீதிமன்றங்கள் நிராகரிக்கவோ தடுக்கவோ முடியாது என்று சொல்ல முடியாது”, என்கிறார் அரசியல் சட்ட நிபுணரான பேராசிரியர் ஜோனத்தன் டுர்லி.

அமெரிக்காவின் புகழ்பெற்ற சுதந்திரதேவி சிலை குறிப்புணர்த்துவதை போல குடியேறிகளை வரவேற்பதில் அமெரிக்காவுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு.

ஆனால் டொனால்ட் ட்ரம்பின் பயணத்தடையைப்பொருத்தவரை இது அமெரிக்கத்தனமே அல்ல என்போருக்கும், அமெரிக்காவை பாதுகாக்க இது அவசியம் என்போருக்கும் இடையில் ஆழமான பிளவுகள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.