“உங்கள் செல்பேசியிலும் தொலைக்காட்சியிலும் சிஐஏ”: விக்கிலீக்ஸ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“உங்கள் செல்பேசியிலும் தொலைக்காட்சியிலும் சிஐஏ”: விக்கிலீக்ஸ்

  • 8 மார்ச் 2017

சிஐஏ நிறுவனத்தின் அதிகபட்ச முக்கியத்துவம் வாய்ந்த சிஐஏ இணைய புலனாய்வு மையத்தின் ஏழாயிரம் ஆவணங்கள் என்று விகிலீக்ஸ் கூறும் தரவுகளை விக்கிலீக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தான் தொடர்ந்து வெளியிடவுள்ள தகவல்களின் ஒரு பகுதியே இதுவென்றும் அது கூறுகிறது.

சுயாதீனமாக உறுதிசெய்யப்படாத இந்த ஆவணங்கள், பொதுமக்களின் மின்னணு உபகரணங்களான செல்பேசிகள், கணினிகள், இணையத்தொடர்புடைய தொலைக்காட்சிகளுக்குள் சிஐஏ எப்படியெல்லாம் ஊடுறுவி வேவு பார்க்கிறது என்கிற உத்திகளை விரிவாக விவரிக்கிறது.

"அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை சட்டப்படி மேற்கொள்ளும் வெளிநாட்டு ரகசிய புலனாய்வின் உத்திகள், தொழில்நுட்பம், முறைமைகள் மற்றும் உபகரணங்கள் என எல்லாவற்றிலும் அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தகவல் வெளியீடு இது. வேறு வார்த்தையில் சொல்வதானால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்பு இதான் பாதிக்கப்பட்டுள்ளது”என்கிறார் சிஐஏ அமைப்பின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் மைக்கல் ஹைடன்.

டெலிகிராம், சிக்னல், வாட்ஸப் போன்ற செல்பேசி செய்தியனுப்பும் செயலிகளின் பாதுகாப்புத் தடுப்பை ஊடுறுவி சிஐஏ தகவல்களை சேகரிப்பதாக விக்கிலீக்ஸின் இந்த ஆவணங்கள் குறிப்புணர்த்துகின்றன.

இந்த செயலிகள் யாராலும் ஊடுறுவ முடியாத அளவுக்கு அதிகபட்ச பாதுகாப்பானவை என்று நம்பும் பலர் இவற்றின் மூலம் அதிமுக்கிய தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.

சிஐஏவின் எதிர்கால திட்டங்களுக்கு எல்லையே இல்லை என்பதை இந்த ஆவணங்கள் காட்டுவதாக கருதப்படுகிறது.

தானியங்கி கார்களை கொலைக்கருவிகளாக பயன்படுத்துவது முதல் தொலைக்காட்சிகள் மூலம் வீட்டை ஒட்டுக்கேட்பதுவரை பல திட்டங்கள் அதனிடம் இருப்பதாக இவை சொல்கின்றன.

தொலைக்காட்சி மூலம் ஒட்டுக்கேட்கும் தொழில்நுட்பம் பிரிட்டன் ரகசிய புலனாய்வுத்துறை துணையுடன் உருவாக்கப்பட்டதாக விகிலீக்ஸ் சொல்கிறது.

இவை எப்படி வெளியேறின என்பது தெளிவாகவில்லை. ஆனால் அரசு ரகசியங்கள் சந்திக்கும் மிகப்பெரிய ஆபத்து என்பது கலாச்சார புரிதல் சார்ந்தது என்கிறார் சிஐஏவின் முன்னாள் இயக்குநர்.

"விஸ்வாசம், இரகசியம், வெளிப்படைத்தன்மை போன்ற வார்த்தைகளை எங்கள் தலைமுறையினர் புரிந்துவைத்திருந்தவிதம் வேறு. இருபத்தி ஓராம் நூற்றாண்டு இளம் தலைமுறை புரிந்துகொண்டிருக்கும் விதம் வேறு. எங்கள் துறைக்குள் மிகச்சிறந்த அமெரிக்கர்களை கொண்டுவருவதாகவே நாங்கள் நம்புகிறோம். ஆனால் அவர்களை பணிக்கமர்த்தியவர்களின் கலாச்சார புரிதலும் இவர்களின் புரிதலும் அடிப்படையிலேயே மாறுபடுகின்றன”

தம்மிடம் பல மில்லியன் கணினிக்குறியீடுகள் மற்றும் உத்தரவுகள் கிடைத்திருப்பதாக விகிலீக்ஸ் கூறுகிறது. அவற்றை எப்படி கையாள்வது என்பது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படும்வரை அவற்றை வெளியிடப்போவதில்லை என்றும் அது அறிவித்துள்ளது.

எவ்வளவு ரகசியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரியவில்லை.

ஆனால் மேற்கத்திய புலனாய்வு நிறுவனங்களுக்கு செல்ஸி மேன்னிங்கும் எட்வர்ட் ஸ்நோடெனும் ஏற்படுத்திய பாதிப்பை இது மேலும் அதிகமாக்கியிருக்கிறது.