தடையை மீறி வட கொரியாவிலிருந்து வெளியேறிய ஐ.நா பணியாளர்கள்

வட கொரியாவிலிருந்து வெளியேற தடைவிதிக்கப்பட்ட ஐ.நாவின் இரண்டு பணியாளர்கள் உட்பட 11 மலேசியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கிம் ஜங் நம்மின் கொலையால் வட கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது

உலக உணவு திட்டத்தால் பணியமர்த்தப்பட்ட அந்த இருவரும் வியாழக்கிழமையன்று பெய்ஜிங் வந்தடைந்தனர்.

வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கொல்லப்பட்டதையடுத்து, வட கொரியா மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளும் அந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் பரஸ்பரம் வெளியேற தடை விதித்தன.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் கிம் ஜங் நம், நச்சு ரசாயனம் தடவிக் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது.

வட கொரியா மலேசியாவை நேரடியாக குற்றம் சாட்டவில்லை என்றாலும் வட கொரியாவிற்கு இதில் தொடர்பு உள்ளது என பரவலாக சந்தேகங்கள் உள்ளன.

வட கொரியாவால் ஒப்படைக்கப்பட்ட, கொலையில் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் மூன்று பெண்கள், மலேசியாவில் உள்ள வட கொரியாவின் தூதரகத்தில் மறைந்திருப்பதாக நம்பப்படுகிறது என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசியர்கள் வடகொரியாவை விட்டு வெளியேற தடை; கிம் ஜங்-நம் விவகார எதிரொலி

இந்த கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என வட கொரியா தீவிரமாக மறுத்து வருகிறது. கிம்மின் உடலை வாங்குவதற்கு உரிமையுள்ள நபர் கடந்த இரண்டு வாரங்களாக தலைமறைவாக உள்ளார்.

உலக உணவு திட்டம் தனது ஊழியர்கள் சீனாவில் இருப்பதை சிறிய அறிக்கை ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளது. "ஊழியர்கள் சர்வதேச உள்நாட்டு பணியாளர்கள், அவர்களின் நாட்டின் பிரதிநிதிகள் இல்லை" என தெரிவித்துள்ளது

ஐ.நாவின் பயண ஆவணங்களை வைத்துள்ள மலேசியா, அந்த இருவரின் விடுதலையை தடுக்கவில்லை என அரசியல் அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

கிம் ஜோங் நாம் கொலை விசாரணையில் மலேசிய அதிகாரிகள் கூட்டுச்சதி : வட கொரியா சந்தேக நபர் குற்றச்சாட்டு

படுகொலை விவகாரம்: மலேசியாவை விட்டு வெளியேறினார் வட கொரிய தூதர்

கிம் ஜோங் நாம் கொலை: இந்தோனீஷிய, வியட்நாம் பெண்கள் மீது கொலை வழக்கு

அந்த இரண்டு பேருடன் 9 மலேசியர்களும் வெளியேறினர். தற்போது மலேசியாவில் 1000 வட கொரியர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வடகொரியாவில் உள்ள மலேசிய தூதரகத்தின் ஆலோசகராக இருக்கும் என்சிக் மொகத் நார் அரினிடம் தான் பேசியதாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் முகநூலில் தெரிவித்துள்ளார்.

"அவர்கள் நாடு திரும்ப தேவையான அனைத்து வித நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளும் என நான் உறுதியளித்துள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

"வட கொரியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டாலும் அவர்களின் பாதுகாப்பிற்கு வட கொரிய அரசாங்கம் உறுதியளித்திருப்பதாகவும், மேலம் அவர்கள் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபடுவதற்கான எவ்வித தடைகளுக்கும் இல்லை" எனவும் ரசாக் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP

மலேசியாவில் நடைபெற்ற சம்பவம் முறையாக தீர்க்கப்படும் வரை மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற கூடாது என வட கொரிய முதலில் பயணத்தடையை விதித்தது.

அது ஒரு "அருவருப்பான செயல்" என மலேசியா தெரிவித்திருந்தது; மேலும் மலேசியாவும் அம்மாதிரியான தடையை விதித்தது. பணி அனுமதி காலாவதியாகி விட்டது என்று டஜன் கணக்கான வட கொரியர்களை மலேசிய குடியேறி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஆனால் ராஜாங்க உறவுகள் தடைபட்டுவிட வில்லை என ரசாக் வியாழனன்று தெரிவித்திருந்தார்.

புதன்கிழமையன்று அதிகாரிகள் கிம்மின் குடும்பத்தினரிடமிருந்து, டி என் ஏ மாதிரிகளை பெற முயற்சித்து வருகின்றனர்; ஆனால் அவர்கள் அச்சத்தில் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் தனது தாய் மற்றும் சகோதரியுடன் இருப்பதாக தெரிவிக்கும் வீடியோ ஒன்றை கிம் ஜங் நம்மின் மகன் வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்