பர்மா: நூற்றுக்கணக்கான முஸ்லிகள் கொன்று எரிக்கப்பட்டனரா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பர்மா: நூற்றுக்கணக்கான முஸ்லிகள் கொன்று எரிக்கப்பட்டார்களா?

மியன்மாரில் சுமார் பத்துலட்சம் ரோஹிஞ்சாக்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு அங்கே குடியுரிமை இல்லை.

அடிப்படை மனித உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

வேண்டாத முஸ்லிம் சிறுபான்மையினரை பர்மிய இராணுவத்தினர் கையாளும் விதம் குறித்த தகவல்களை இரகசியமாக வைக்கவே பர்மிய அரசு முயல்கிறது.

ஆனால் உலகின் பார்வையிலிருந்து பெருமளவு மறைக்கப்பட்ட மியன்மாரின் ரக்கைன் மாகாணத்திலிருந்து பிபிசிக்கு மாதக்கணக்கில் அதிரவைக்கும் காணொளிகள் வந்தபடி இருந்தன.

கடந்த ஆறுமாதங்களில் எழுபத்தைந்தாயிரம் பேர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அவர்களில் பலர் தற்போது வங்கதேசத்தில் தங்கியுள்ளனர்.

கொடூரமான கொலைகள், மோசமான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் தமக்கு இழைக்கப்பட்டதாக அவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் சொல்வதை ஹெலிகாப்டரிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் பிபிசி ஆராய்ந்தது.

எரிந்த வீடுகளையும் ஏராளமான எரிந்த சடலங்களையும் அந்த காட்சிகள் காட்டின.

பரவலான பாலியல் வல்லுறப்புகார்களும் கூறப்படுகின்றன. அரசாங்க புலனாய்வாளர்களிடம் ரோஹிஞ்சா பெண்களுக்கு நடந்த கொடுமைகளை தைரியமாக பேசியதன் மூலம் ஜமலிடா பேகம் மியன்மாரில் பிரபலமானார்.

சிலமாதங்களுக்குப்பின் ஜமாலிடாவை பிபிசி வங்கதேசத்தில் சந்தித்தது. புகைப்படத்தின்மூலம் இராணுவத்தினர் தன்னை தேடியதால் வங்கதேசம் தப்பி வந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.

நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு பலநூறுபேர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக ரோஹிஞ்சா அகதிகள் தெரிவிக்கும் புகார்கள் ஐநா தூதரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இவை மனித குலத்துக்கு எதிரான குற்றங்களென்றே தான் நம்புவதாக தெரிவித்தார் மியன்மாரிலுள்ள ஐநாவின் மனித உரிமைகளுக்கான சிறப்பு பிரதிநிதி யாங்கீ லீ.

இவற்றுக்கு மியன்மார் தலைவி ஆங்க்சான் சூசியின் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்திய யாங்க் லீ, “இறுதியில் சிவில் அரசாங்கமே இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டும். சொந்த மக்கள் மீதே மோசமான சித்ரவதைகள், மனிதத்தன்மையற்ற குற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதற்கு அரசு தான் பதிலளிக்கவேண்டும்”, என்றார்.

ஆனால் இந்த விவகாரம் குறித்து மியன்மார் ஜனநாயகத்துக்கான முன்னாள் போராளியாக பார்க்கப்பட்ட ஆங் சான் சூசி பிபிசிக்கு பேட்டியளிக்க மறுத்துவிட்டார்.

விடாப்பிடியாக அவருக்கு நெருக்கமான தலைவர் ஒருவரிடம் பிபிசி பேசியது.

ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி பேச்சாளர் வின் டேன், இது மனித குலத்துக்கு எதிரான குற்றங்களென்று தாங்கள் நம்பவில்லை என்றும் இது உள்நாட்டு விவகாரமேயன்றி வெளிநாட்டு பிரச்சனையல்ல என்றும் பிபிசியிடம் தெரிவித்தார்.

நூற்றுக்கணக்கான ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படுவதையும் அவர் நிராகரித்தார்.

ஆங்சான் சூசி ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய ஓராண்டாகப்போகிறது. ஒருகாலத்தில் அவரோடு அடையாளப்படுத்தப்பட்ட கொள்கைகள், மதிப்பீடுகள் தொடர்பில் அவர் கடைபிடிக்கும் தற்போதைய மௌனமே ஆட்சி அதிகாரத்திற்கான அவரது விலையாக இருந்து வருகிறது.

இதில் வரும் காட்சிகள் சிலரை சங்கடப்படுத்தலாம்.