ஐஎஸ் பிடியில் போர்ப் பயிற்சி; காணொளியில் பிள்ளைகளைக் கண்டு கதறும் தாய்மார்கள்

  • 20 மார்ச் 2017
ஆயுதப்படை பயிற்சி

ஐ.எஸ். படையினரிடம் சிக்கிக் கொண்ட யாஸிடி (குர்து இன சமூகம்) சிறுவர்கள் கட்டாயப் போர்ப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் மீது துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெற கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இன்னொரு பக்கம், அவர்களின் நிலை தெரியாமல் தாய்மார்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, தங்கள் பிள்ளைகள் கட்டாய போர்ப் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும் காட்சிகளை செல்போசி காணொளி வழியாக ஐ.எஸ். அவர்களுக்கு அனுப்புகிறது. அதைப் பார்த்து அந்தத் தாய்மார்கள் இன்னும் துடித்துப் போகிறார்கள். அந்தக் கொடுமைகளை அப்பெண்கள் விவரிக்கிறார்கள்.

இந்தத் தொகுப்பில் இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.

(இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்படும் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன).

துரோகிகள் என்று கொல்லப்பட்டோரின் இறந்த உடல்களின் மீது துப்பாக்கியால் சுடுவதற்கு, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவினரால் கட்டாயப்படுத்தப்பட்டபோது, லோவான்ட்டுவும், சப்பாவும் முறையே 16, 14 வயதான சிறுவர்கள்தான்.

இளைஞர்களுக்கான ஐ.எஸ் ராணுவ முகாமில் ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்ட பல சுற்றுகளில் வெறும் ஒரு பகுதியான இதில், கொல்லப்பட்டோரின் உடல்தான் சுடுவதற்கு இலக்காக இருந்தது.

இந்த சிறுவர்கள் இராக்கின் வட பகுதியிலுள்ள யாஸிடி எனப்படும் குர்து இன சமூகத்தவர் ஆவர். 2014 ஆம் ஆண்டு சின்ஜார் மலைமீது வெப்பம் அதிகரிக்கையில் உணவும், தண்ணீரும் இல்லாமல் சிக்கிக்கொண்ட பல லட்சக்கணக்கான மக்களை உலகமே திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தது.

அதேநேரத்தில், பதின்ம வயதினரான லோவான்ட்டும், சப்பாவும் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஆயுதப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டனர்.

வயது வந்த ஆண்கள் பலரும் பிடித்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். சிறுவர்கள் தங்களுடைய குடும்பங்களில் இருந்து பிரிவதற்கு முன்னால், இராக்கின் வட பகுதிக்கு அருகிலுள்ள நகரத்தில் அவர்களுடைய தாய்மார்களோடு குடியேறினர்.

ஓராண்டுக்கும் மேலாக, அவர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

சிரியாவின் மலைப்பாங்கான தொலைதூர பகுதியிலுள்ள ஒரு முகாமில் "கலிபா கால கத்துக்குட்டிகள்" போல பயிற்றுவிக்கப்பட்டனர்.

போரிட கட்டாயப்படுத்தல்

"இந்த ஆட்சியில் உளவாளிகளாக செயல்பட்ட முஸ்லிம் துரோகிகள் அல்லது போதை மருந்து எடுத்துக் கொண்டவர்களின் இறந்த உடல்கள் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கல்லறைகளுக்கு அவர்கள் எங்களை சில நேரங்களில் அழைத்துச் சென்றார்கள். தாக்குதல் தொடுப்பதை பழக்கமாக்கி கொள்ள அந்த சடலங்கள் மீது துப்பாக்கியால் சுட வேண்டும் என்று அவர்கள் கூறுவர்" என்று சப்பாத் கூறுகிறார்.

இத்தகைய முகாம்களில் எத்தனை யாஸிடி குர்து இனத்தவர் பயிற்சி பெற கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்பது பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால், ஐ.எஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்ட 8 வயது இளம் சிறுவர்கள் உள்பட நூற்றுக்கணக்கான குழந்தைகள் இந்த பயிற்சி பெற கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தீவிரவாத எதிர்ப்பு நிறுவனமான குயில்லியம் பவுண்டேசன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

தாங்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்த முகாமில் 120 சிறுவர்கள் இருந்ததாக இந்த பதின்ம வயதினர் கூறுகின்றனர். அதில் பெரும்பாலோர் சிரியாவை சேர்ந்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருந்தனர். யாஸிடி சிறுவர்களை தவிர இந்த முகாமுக்கு எடுக்கப்பட்டுள்ள பலரும் அடுத்த தலைமுறை ஜிகாதி ஆயுதப்படையினராக உருவாகுவதற்கு அவர்களின் குடும்பங்களால் அனுப்பப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

"நான் என்னுடைய வீட்டை விட்டு பிரிந்திருப்பதை நினைத்து மிகவும் வருந்தினேன். குறிப்பாக, சிரியாவில் அவர்களின் குடும்பத்தாரோடு அரேபிய சிறுவர்கள் ஒவ்வொரு வார இறுதியும் இருப்பதை பார்க்கும்போது ஏங்கினோம். இத்தகைய நேரங்களில் 10 முறை செத்து பிழைப்பதுபோல உணர்ந்தோம்" என்று சப்பா தெரிவிக்கிறார்.

இந்த சிறுவர்கள் செபிக்கவும், குரான் வாசிக்கவும், ஐ.எஸ். அமைப்பின் பாடநூல்களை மனப்பாடம் செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். இதனால் சிறுவர்களுக்கு அவர்கள் பரிட்சை வைக்க முடிந்தது.

"அவர்கள் என்னை மூளை சலவை செய்ய முயன்றார்கள். அவர்களின் புத்தகங்கள் மாந்திரீகப் புத்தகங்களை போல இருந்தன. அவை விரைவாக உங்களுடைய மனங்களை மாற்றக்கூட்டியவை. நான் மட்டுமல்ல எந்தவொரு நபரின் மனதையும் அவை மாற்றிவிடக்கூடும் என்று சாப்பா தெரிவிக்கிறார்.

பின்னர் உடற் பயிற்சி வழங்கப்பட்டது. "அப்போது கோடைக்காலம். மிகவும் வெப்பமாக இருந்தது" என்று அவர் கூறுகிறார். "தரை அதிக வெப்பமாக இருந்தது. அதில் நடக்க அவர்கள் எங்களுக்கு கற்பித்தார்கள். எனவே, போரிடும்போது அத்தகைய சூழ்நிலைக்கு பழகிவிட்டோம்" என்கிறார் அவர்.

பீதியின் கலாசாரம் அந்த முகாமை ஆக்கிரமித்திருந்ததை அவர் விவரிக்கிறார். இரவில் குழந்தைகள் அந்த வளாகத்தில் அடிக்கடி காவல் காக்க வைக்கப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த முகாமிலுள்ள சிறுவர்களில் ஒருவர் தூங்கியவுடன், அவன் மீது குளிர்ந்த நீரை ஊற்றுவர். மரக் கம்பால் அவனை அடிப்பர். தோளில் எப்போதும் குண்டுகளை அணிந்திருக்க வேண்டும். கழிவறைக்கு சென்றால் கூட அப்படியே தான் செல்ல வேண்டும். ஏதாவது இளம் வீரர் மறந்து விட்டாலோ அல்லது அவருடைய குண்டுகள் தவறி கீழே விழுந்து விட்டாலோ, அவருக்கு அதிக அடி கிடைக்கும்.

மதிய உணவிற்கு பிறகு உள்ளூர் நதியில் நீந்துவது உள்ளிட்ட இயல்பான தருணங்களும் கிடைக்கலாம். ஆனால், அப்போது அவர்களை பிடித்து வைத்திருப்போருடன் அமர்ந்து கொடூரமான போர் பற்றிய காணொளிகளை பார்க்க வைக்கப்படுவர்.

"அவை எங்களுக்கு வேண்டாம் என்று அவா்களிடம் கூற எங்களுக்கு தைரியமில்லை. அந்த அளவுக்கு நாங்கள் பீதியுடன் இருந்தோம்" என்று நினைவுகூர்கிறார் சப்பா.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரோடு ஓராண்டு கழித்த பிறகு அவர்களுடைய தீவிரவாத சிந்தனைகளை நம்புவதற்கு மிகவும் நெருங்கி வந்ததை நினைத்து கவலையடைவதை சாப்பா ஏற்றுகொள்கிறார்.

"இன்னும் ஒரு மாதம் கூடுதலாக அவர்களோடு இருந்திருந்தால், நானும் அவர்களில் ஒருவராக மாறியிருப்பேன்" என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை Gokhan Sahin/getty images

ஐ.எஸ்ஸிடம் இருந்து தப்புதல்

இந்த சிறுவர்கள் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய சரியான முறையை நம்மால் வெளியிட முடியாது. ஆனால், லோவான்ட் ஒரு மூன்றாவது நபரோடு தொடர்பு ஏற்படுத்தி கொண்டார். அந்த மூன்றாவது நபர் கடத்தல்காரர் ஒருவர் மூலம் அவர்களை ஏற்கெனவே குறிக்கப்பட்ட ஓரிடத்தில் இருந்து கடத்திச் சென்றுவிட்டார்.

அந்த முகாமில் இருந்து தப்பிக்க சப்பா தொடக்கத்தில் தயக்கம் காட்டினார். ஆனால், இந்த ஆபத்தான முயற்சி நல்லதற்கே என்று அவரிடம் பக்குவமாக எடுத்துக்கூறி சம்மதிக்க வைத்தார் லோவான்ட் .

இந்த சிறுவர்கள் கடத்தல்காரர் ஒருவரால் கார் மூலம் கடத்தப்பட்டு, ரக்கா நகரின் தாழ்வான பகுதிகளில் சில நாட்கள் கழித்த பின்னர், எல்லையை நோக்கிய நீண்ட, கடுமையான பயணத்தை இந்த சிறுவர்கள் மேற்கொண்டனர்.

"தெருக்களில் நடனமாடி மகிழ்ந்தோம். என்னுடைய நண்பர் அந்த முகாமில் இருந்து தப்பியோட என்னை சம்மதிக்க வைத்ததில் நான் மிகவும் மகிழ்கிறேன். அவர் எனக்கு ஒரு சகோதரனை போன்று விளக்குகிறார்" என்று சிரியாவின் மண்ணை விட்டு இராக்கிற்குள் திரும்பி வந்தவுடன் அந்த தருணத்தை நினைவுகூர்ந்து சாப்பா தெரிவிக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

லோவன்ட் மற்றும் சப்பா இருவரும் தெரிவித்த பயிற்சி வசதிகளின் விவரங்கள் இஸ்லாமிய அரசு அமைப்பின் பரப்புரை காணொளிகளில் இருந்து சிறிது சிறிதாக பெற்றுக்கொண்ட தகவல்களுக்கு ஒத்துப்போகின்றன.

சமீபத்தில், மொசூலில் இராக் படைப்பிரிவுகளின் மீது இரண்டு இளம் யாஸிடி சிறுவர்கள் தற்கொலை கார் குண்டு தாக்குதல் நடத்துகின்ற புதிய அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்றை ஐ.எஸ். வெளியிட்டுள்ளது.

இந்த சிறுவர்கள் 11 மற்றும் 12 வயதினர் என்றும், 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சின்ஜார் நகரில் இருந்து பிடிக்கப்பட்டவர்கள் என்றும் ஓரறிக்கை உறுதிப்படுத்துகின்றது.

அந்த காணொளியில், தங்களுடைய பழைய மதத்தை விட்டுவிடுவதை பற்றி அந்த சிறுவர்கள் பேசுகின்றனர்.

"சின்ஜாரில் நாங்கள் சாத்தானை வழிபட்டுக் கொண்டிருந்தோம்" என்று அவர்கள் கூறுகின்றனர். வெடிபொருட்கள் நிரம்பிய காரில் ஏறுவதற்கு முன்னால் ஐ.எஸ்.-க்கு விசுவாசமாக இருப்பதை உறுதி அளிப்பதாக இந்த காணொளி காட்டுகிறது.

சரி. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழவினர் யாஸிடி சிறுவர்களை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்? ஜிகாதி ஆயுதப்படையினரின் நிலையினை பெருக்கிக் கொள்வதை சாத்தியமாக்குவதற்கு இதனை மேற்கொள்ளலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜார்ஜியா மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மியா புளூம் இன்னொரு காரணமும் இருப்பதாக எண்ணுகிறார்.

பரப்புரையில் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதில் ஒரு பயன் உள்ளது. எங்களுடைய முன்னாள் எதிரிகளும் எங்களோடுதான் உள்ளனர் என்று ஐ.எஸ்-யிடம் இருந்து உலகிற்கு செய்தி ஒன்றை அனுப்பும் உள்நோக்கம் இதிலுள்ளது. எனவே, ஐ.எஸூடன் இணைந்து கொள்வதன் மூலம் தங்களுடைய இனத்திற்கு அப்பாற்பட்டு யாரும் தங்களை மீட்டுக்கொள்ள முடியும் என்பதுதான் அது என்று பேராசிரியர் மியா புளூம் குறிப்பிடுகிறார்.

ஜெர்மனியில் புதிய வாழ்க்கை

பிப்ரவரியில் லோவான்டையும், சப்பாத்தையும் சந்தித்தபோது அவர்களின் படுக்கையறையில் எக்ஸ்பாக்ஸில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் தற்போது எறக்குறைய 80 யாஸிடி இன மக்கள் வாழுகின்ற ஜெர்மனியின் பாடென் வியுர்டெம்பொர்க் மாநிலத்தில் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்.

மிகப் பெரிய கட்டடமான முன்னாள் நகராட்சி கட்டடத்தில்தான் அவர்கள் வாழ்கின்றனர். இந்தக் கட்டடம் சுத்தமாகவும், வெப்பமாகவும் உள்ளது.

சுவர்களில் குழந்தைகளின் படங்கள், படுக்கையில் வண்ண விரிப்புகள் ஆகியவற்றோடு உண்மையான இல்லம் போன்ற உணர்வை வழங்க அதிக பணிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.

பேசுகின்றபோது, தங்களுடைய குரலின் எதிரொலியை கேட்டு டஜன் கணக்கான சிறு குழந்தைகள் நீண்ட வெள்ளை சாரளங்களில் உற்சாகமுடன் ஓடுகின்றனர்.

தந்தையர் பலர் இல்லை என்பதால், இந்த சமூகம் பெரும்பாலும் பெண்களே அதிகமாக இருக்கின்ற சமூகமாக உள்ளது. முன்னாள் குழந்தை படையினருக்கும், ஐ.எஸ். குழவினரால் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்ட பெண்களுக்கும் அவர்கள் அனுபவித்த வன்முறை பற்றி பேசுவதற்கான சிகிச்சைகளோடு அமர்வுகள் ஒழுங்காக நடத்தப்படுகின்றன.

3 ஆயிரத்து 500 பெண்களும், குழந்தைகளும் இன்னும் ஐ.எஸ். அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுவதால், புலம்பெயர்ந்து வாழ்கின்ற யாஸிடி இன மக்களின் மனவேதனையின் ஒரு பகுதியாக உறுதியின்மை காணப்படுகிறது.

அவர்கள் இன்னும் என்னுடைய மகனை வைத்துள்ளனர்

மகனின் இழப்பால் ஏற்படும் வலியை உணர்ந்துள்ள பெண்களில் ஒருவர் தான் குலி.

2014 ஆம் ஆண்டு கோடை காலத்தில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் அமைப்பினரின் வன்முறை பற்றிய இரக்கமற்ற பரப்புரையால் இவருடைய குடும்பம் பிளவுண்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

அவர்கள் கொண்டு சென்ற அவருடைய கணவர், ஏறக்குறைய உறுதியாக கொல்லப்பட்டிருப்பார் என்று எண்ணுகின்றனர். அவருடைய மூத்த இரு மகன்கள் மொசூலில் போரிட சென்றனர். அவர்களுக்கு என்ன ஆனது என்று அவருக்கு இதுவரை தெரியாது.

தொடக்கத்தில், அப்போது நான்கு வயது பையனாக இருந்த இணைய மகனோடு குலி வாழ்ந்து வந்தார். ஆனால், படிப்படியாக அவர்களும் பிரிந்து விட்டனர். அந்த மகனையும் ஜிகாதிகள் பிடித்து வைத்திருப்பதாக அவர் கூறுகின்றனர். இதில் இரக்கமே இல்லாத திருப்பம் என்னவென்றால், அந்த மகனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை செல்பேசி வழியாக அவர்களால் அனுப்ப முடிவது தான்.

தற்போது 6 வயதாகியிருக்கும் அந்த சிறுவன் ஒரு துப்பாக்கிக்கு அடுத்ததாக தவழ்ந்து சென்று பயிற்சி எடுப்பது அவ்வாறு அனுப்பப்பட்ட புகைப்படம் ஒன்றில் தெரிகிறது,

எங்களுடைய குழந்தைகளை துப்பாக்கி முனையில் பார்க்கின்றபோது, எங்களுடைய உணர்வுகளோடு விளையாடவும், எங்களை காயப்படுத்தவுமே அவர்கள் இதனை மேற்கொள்கிறார்கள்" என்று அவர் அங்கலாய்க்கிறார்.

இந்த புகைப்படங்கள் அவரது கண்களில் நீர் நிரம்ப செய்வதோடு, குழப்பமடையவும் காரணமாகின்றன.

"அவன் உயிரோடு இருக்கிறான் என்பதில் மகிழ்ச்சியடையும் அதேநேரத்தில், அவன் என்னோடு இல்லையே, அவர்களின் பிடியில் அல்லவா இருக்கிறான்" என்று மனவேதனை ஏற்படுகிறது என்கிறார்.

தன்னுடைய மகனை திரும்ப ஒப்படைக்குமாறு அவர் கேட்டுள்ளார். ஆனால், அவனை விடுவிக்க விரும்பமில்லை என்று அவனை பிடித்து வைத்திருக்கும் ஐ.எஸ். ஆயுதப்படையினர் கூறிவிட்டனர்.

இராக்கை விட்டு மொத்தமாக வெளியேறியுள்ள பல யாஸிடி மக்களினத்தவரையும் அல்லது தங்களுடைய பிரதேசத்திலேயே அகதிகள் முகாம்களில் முடங்கி கிடக்கின்ற மக்களின் விரிவான புலம்பெயர்வையும் குலி பிரதிபலிக்கிறார்.

"நாங்கள் மாசற்ற மக்களினத்தவர். கடவுள் எங்களுக்கு இந்த மதத்தை வழங்கினார். நாங்கள் அவரை வணங்குகின்றோம். நாங்கள் யாருக்கும் எந்தவித தீங்கும் செய்யாத நிலையிலும், ஐ.எஸ். எங்களுக்கு அதிக தீங்குகளை விளைவித்துள்ளது" என்று அவர் கூறுகிறார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

யாஸிடி இனத்தவருக்கு ஏற்பட்ட நெருக்கடி

  • 3,60 ஆயிரம் யாஸிடி இனத்தவர் ஐ.எஸ்-ஆல் இடம்பெயர்வு
  • 50 ஆயிரம் பேர் சின்ஜார் மலையில் இருந்து வெளியேற்றம்
  • 3 ஆயிரத்து 500 பெண்களும், குழந்தைகளும் ஐ.எஸ். ஆயுதப்படையால் பிடித்து வைப்பு

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

யாஸிடி இன மக்கள் 4 ஆயிரம் ஆண்டு பழைமையான மதத்தை பின்பற்றி வருகின்றனர். இதில் சௌராஸ்டிரம், யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களின் அம்சங்கள் உள்ளடங்குகின்றன.

இவர்களை இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவினர் "சாத்தானை வழிபடுகிறவர்கள்" என்று கருதுகின்றனர்.

2014 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில், நினிவே மாகாணத்திலுள்ள 3 லட்சத்து 60 ஆயிரம் யாஸிடி இன மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

மக்கள் பெருங்கூட்டமாக பாலியல் வல்லுறவுக்கும், கொலைக்கும் உள்ளாவதை தடுக்கும் வகையில், கொப்பளங்களை உருவாக்கும் தட்பவெப்ப நிலை காணப்படும் சின்ஜார் மலையில் இருந்து பலர் தப்பியோடி விட்டனர்.

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 தேதி இந்த மலையில் சிக்கிக்கொண்ட யாஸிடி இன மக்களை வெளியேற வைக்கும் நோக்கத்தில், ஜிகாதிகளை பின்வாங்க வைக்க அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வான்வழி தாக்குதலுக்கு கட்டளையிட்டார்.

யாஸிடி இன மக்களுக்கு ஐ.எஸ். அமைப்பினர் இழைத்த கொடூரத்தை அமெரிக்கா "படுகொலை" என்று குறிப்படுகிறது. "ஒரு குழுவின் குழந்தையை இன்னொரு குழுவிற்கு கட்டாயப்படுத்தி மாற்றுவதை" குற்றம் என்கிற அம்சத்தை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் படுகொலை மாநாடு உள்ளடக்குகிறது.

சின்ஜார் மலையில் இருந்து கிடைத்த விடுதலையைத் தொடர்ந்து, ஜெர்மனியிலுள்ள யாஸிடி இன மக்களின் மத்திய பேரவை, ஜெர்மனியின் தெற்கு மாநிலமான பாடென் வியுர்டெம்பொர்க்கிடம் முறையீடு செய்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இராக்கின் வட பகுதியில் இருந்து மிகவும் கொடுமை அனுபவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 650 பேரை குடியேற்ற உள்ளூர் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொண்டனர்.

இறுதியில், சித்ரவதைக்கு உள்ளான கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்பட பொரும்பாலும் யாஸிடி இன மக்களாக 1000 அகதிகளை இந்த மாநிலம் ஏற்றுக்கொண்டது.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட எட்டு வயது சிறுமியர் உள்பட இவர்கள் அனைவரும் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பினரின் முன்னாள் சிறைக் கைதிகளாக இருந்தவர்கள்.

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அகதிகள் முகாமில் கிடைக்காத ஆற்றுப்படுத்துதல் மற்றும் சிகிச்சைகளை இவர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாக அமைந்தது.

ஜெர்மனியின் பதில்

புதிதாக வருவோரை தன்னார்வத்தோடு ஏற்றுக்கொள்ள பாடென் வியுர்டெம்பொர்க்கிலுள்ள 21 நகரங்களில் இருந்து நேர்மறையான சிறந்த மறுமொழி கிடைத்தது என்று அவர் கூறுகிறார்.

"சிறுபான்மையினர் படுகொலை செய்யப்படுகின்றபோது, அவர்களை பராமரிப்பதில் நமக்கு பொறுப்புணர்வு உள்ளது என்பதை பல ஜெர்மனியர்களும் உணர்ந்திருந்தனர்" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"இரண்டாம் உலகப் போரின்போது, கொடூரங்களாலும், பாலியல் வன்முறைகளாலும் இன்னலுற்ற ஜெர்மனி பெண்கள் பலரும் எங்களிடம் உண்டு. இந்த மக்கள் எத்தகைய கொடுமையான அனுபவத்தை பெற்றிருப்பார்கள் என்று தெரிந்து வைத்திருப்பதால், நாம் இந்த பெண்களுக்கு உதவ வேண்டும் என்று மக்கள் பலரும் தெரிவித்தனர்.

இது போன்ற பணித்திட்டத்தை செயல்படுத்த பிற நாடுகளும் ஆர்வம் காட்டியதாக புளும் தெரிவித்திருக்கிறார். எடுத்துக்காட்டாக, கனடா மற்றும் ஆஸ்ட்ரியாவை கூறலாம்.

ஐக்கிய ராஜ்ஜியமும் இதனை பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைத்து கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பிரிட்டனின் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்தின் உள்துறை அமைச்சர் அம்பர் ரூடுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

யாஸிடி இன மக்களில் 90 சதவீதத்தினர் இராக்கியர்களாக இருப்பதால் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரன் அரசு அமைத்த சிரியாவின் அகதிகள் இட ஒதுக்கீட்டில் தற்போது யாஸிடிகள் உள்ளடங்கவில்லை.

ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கலின் அகதிகளை திறந்த மனப்பான்மையுடன் வரவேற்கும் கொள்கையில், குறிப்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ள பல இடங்களில் இந்த பணித்திட்டம் சிறந்த பணித்திட்டமாக அமையும் என எண்ணுவதாக புளும் தெரிவித்திருக்கிறார்.

"இத்தகைய நெருக்கடி மிகுந்த இடங்களில் மனிதநேய மிக்க வகையை தெரிவு செய்வது நல்லதாக இருக்கும். அப்படியானால்தான், அதிக உதவி தேவைப்படுவோர் மீது கவனம் செலுத்த முடியும். இவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை பொது மக்கள் புரிந்து கொள்வதாகவே தெரிகிறது. எல்லைகளை திறந்தால் ஜெர்மனிக்கு கொண்டு வருபவர்கள் வலுவானவர்களாக இருப்பார்கள்."

சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஜெர்மனியின் இந்த பணித்திட்டம் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது. தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து பல மைல்கள் கடந்து வந்து, மேற்கு ஐரோப்பிய அன்னிய சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்வது, பழமைவாத, மூடிய சமூகத்திலிருந்து வந்த யாஸிடி இன மக்களுக்கு இது மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று அவர்கள் கலையடைந்துள்ளனர்.

ஆனால், இராக்கின் வட பகுதிக்குத் திரும்பிச் செல்ல விரும்புவோர் நேரடியாக திருப்பி அனுப்பப்படலாம் என்பதில் புளும் பிடிவாதமாக இருக்கிறார்.

"உண்மை. இது மிகவும் கடினமானது", என்று அவர் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்