மனிதஉரிமை செயற்பாட்டளர்களை சிறையிலடைத்தது  சாதனை: சீன தலைமை நீதிபதி.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மனிதஉரிமை செயற்பாட்டளர்களை சிறையிலடைத்தது சாதனை: சீன தலைமை நீதிபதி.

சீனாவின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாட்டாளர்களை சிறையிலடைத்தது தனது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என்று சீன உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சீன நாடாளுமன்றத்தின் தனது வருடாந்த செயற்பாட்டு ஆண்டறிக்கையை வாசித்த தலைமை நீதிபதி ஜோ ட்சியாங்க், சீன அரசின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டதை பாராட்டினார்.

சீன அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை குறித்தும் மரணதண்டனை குறித்தும் பேசியவர் அரசுடன் முரண்படுபவர்களுக்கு எதிரான தாக்குதல் குறித்தும் பேசினார்.

அரச எதிரப்பு செயற்பாட்டாளர்களை, பயங்கரவாதிகளோடு சமப்படுத்தி பேசிய தலைமை நீதிபதி, அவர்களுக்கு தண்டனை அளித்து சிறையில் அடைத்ததை சீன நீதித்துறையின் சாதனைகளில் ஒன்றாக பட்டியலிட்டார்.

“அரச பாதுகாப்புக்கு எதிரான குற்றங்களை நாங்கள் கடுமையாக தண்டித்தோம். அரசின் அதிகாரத்தை குலைக்கும் ஷோ ஷிபெங்கின் வழக்கு போன்றவற்றை முடித்து வைத்தோம். நாட்டின் அரசியல் பாதுகாப்பையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் நாங்கள் உறுதியாக பாதுகாத்தோம்”, என்றார் தலைமை நீதிபதி.

தலைமை நீதிபதி குறிப்பிட்ட ஷோ ஷிபெங்ங், பீஜிங்க் நகர வழக்கறிஞர். அரசுக்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஆகஸ்டில் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

டியாஞ்சின் நகரில் நடந்த அவரது வழக்கு விசாரணையை பார்க்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அதிபர் ஷி ஜின்பிங்கின் ஆட்சியில் அரச எதிர்ப்பாளர்கள் சிறைவைக்கப்படுவது அதிகரித்துள்ளது.

இதை அரசியல் போலிநாடகம் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அனைப்பு வர்ணித்தது.

ஆனால் தனது எதிர்ப்பாளர்களை கடுமையாக கையாளும் கொள்கை குறித்து சீன அரசுக்கு எந்த வருத்தமும் இல்லை.

சீனாவில் சுயாதீன நீதித்துறை என்கிற ஒன்று இல்லை என்று சீன தலைமை நீதிபதி சமீபத்தில் பேசியிருந்தார்.

சீன நீதித்துறையின் முக்கிய பணிகளில் ஒன்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை பாதுகாப்பது. அதன் ஒரு அங்கமே பல்வேறு வகையான செயற்பாட்டாளர்களையும் சிறையிலடைப்பது.