தாய்மொழி போலாகுமா? சமயோசிதமாக செயல்பட்டு ஒரு உயிரை காப்பாற்றிய போலீஸ்காரர்

தற்கொலை எண்ணம் கொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு நபரிடம் சரளமான உருது மொழியில் பேசி அவரை காப்பாற்றிய 20 வயதான ஹாங்காங் போலீஸ்காரர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.

தற்கொலை எண்ணம் கொண்டவரிடம் தாய் மொழியில் பேசி காப்பாற்றிய போலீஸ்காரர்

பட மூலாதாரம், Image copyrightHONG KONG POLICE

ஒரு கட்டுமான தளத்தில், அதிக பளுவான பொருட்களை உயரத்துக்கு எடுத்துச் செல்ல பயன்படும் 65 அடி உயரமுள்ள ஒரு கிரேன் இயந்திரத்தின் மீது பாகிஸ்தான் நபர் ஏறியவுடன், சம்பவ இடத்துக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இஃப்ஷால் ஜஃபர் என்ற இந்த போலீஸ்காரர் உடனடியாக தானும் அந்த கிரேன் இயந்திரத்தின் மீது ஏறி, தங்கள் இருவருக்கும் பொதுவான மொழியான உருதுவில் அவருடன் உரையாடியுள்ளார்.

அதன் பின்னர், தற்கொலை எண்ணம் கொண்டிருந்த அந்நபர் கீழே இறங்க சம்மதித்துள்ளார். பின்னர், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கேண்டனீஸ் மொழியிலும் சரளமாக பேசும் போலீஸ் கான்ஸ்டபிளான ஜஃபர், தனது போலீஸ் பயிற்சி முறைகளை தான் பின்பற்றியதாக கூறினார்.

இது குறித்து ஆப்பிள் டெய்லி ஊடகத்திடம் கருத்து தெரிவித்த அவர் கூறுகையில், ''நாங்கள் போலீஸ் அகாடமியில் கற்ற உத்திகளை நான் கையாண்டேன். கிரேன் இயந்திரத்தின் மீதேறிய நபரிடம் நான் தாய் மொழியில் பேசியதும். அவர் பாதுகாப்பாக. உணர்ந்ததாக நினைக்கிறேன் '' என்று தெரிவித்தார்.

போலீஸ்துறையில் ஒரூ வருடத்துக்கும் குறைவான காலத்துக்கு முன்பு பணியில் சேர்ந்த இந்த இளைஞர்தான், இம்மாவட்டத்தில் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட ஒரே போலீஸ் அதிகாரி என்று கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்