இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் பேட்டி

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இரு அணிகளும் போட்டியிடும் நிலையில், இரட்டை இலைச் சின்னம் யாருக்குக் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி பிபிசி தமிழுக்கு பேட்டியளித்தார்.

படத்தின் காப்புரிமை Facebook
Image caption என். கோபாலசுவாமி

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக ஏப்ரல் 22 ஆம் தேதி முடிவெடுக்கப்படாவிட்டால், அந்தச் சின்னம் முடக்கப்பட்டு, இரு அணியினருக்கும் வேவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்..

தமிழ்நாட்டில் தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பன்னீர்செல்வம் அணி மற்றும் சசிகலா அணி என்ற பிளவால் இரண்டு முக்கிய பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கட்சியின் பொதுச் செயலாளர் முறையாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆகவே, அவர் நியமனம் செய்கின்ற வேட்பாளர் அதிமுகவின் சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளராக இருக்க முடியாது என்பது ஒரு வாதம்.

நாங்கள் தான் உண்மையான அதிமுக என இரு தரப்பினரும் கூறி வருகின்றனர். எனவே இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே வழங்க வேண்டும் என்பது இன்னொரு கோரிக்கை.

இது தொடர்பாக எந்தெந்த விடயங்களை கவனத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என்று கூறிய அவர், கட்சியின் முறையான சட்டத்திட்டங்கள் அடிப்படையாக கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

ஆதரவு அளிக்கின்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டுமன்றி, கட்சியின் அடிப்படை உறுப்பினர், பொதுக்குழுவினரின் ஆதரவு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கலாம் என்று கோபாலசுவாமி கூறினார்.

வரும் 22-ஆம் தேதி சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி ஆகிய இரு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்ட பிறகு தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்க உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்