மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவை முந்திய பாகிஸ்தான்

  • 21 மார்ச் 2017

உலகிலேயே மிக அதிக மகிழ்ச்சியான நாடு நார்வே என கண்டறியப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மகிழ்ச்சி அறிக்கை என்ற பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில் 122-ஆவது இடத்தில் இந்தியா, இலங்கைக்கு 120-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தில் இருந்த அண்டை நாடான டென்மார்க்கை பின்தள்ளி நார்வே முதலிடத்தை பிடித்தது.

உள்ளார்ந்த மகிழ்ச்சியை கணிக்கும் உலக மகிழ்ச்சி அறிக்கை, மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அதற்கு காரணம் என்ன என்று ஆராய்கிறது.

டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் நிலையில், மத்திய ஆஃப்ரிக்க குடியரசு பட்டியலில் இறுதி இடத்தை பிடித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவும், பட்டியலின் உயர்வான இடங்களை பிடிக்க, அமெரிக்காவும் பிரிட்டனும் முறையே 14 மற்றும் 19 -வது இடங்களை பிடித்துள்ளன.

ஆஃப்ரிக்காவில் சஹாராவை ஒட்டியுள்ள நாடுகளும், உள்நாட்டு சண்டை மிகுந்த நாடுகளும் குறைவான மகிழ்ச்சியுடையதாக இருக்கின்றன. 155 நாடுகள் கொண்ட பட்டியலில், சிரியா 152-வது இடத்தையும், ஏமன் மற்றும் தெற்கு சூடான் 146, 147 வது இடத்தையும் பிடித்துள்ளன.

சர்வதேச மகிழ்ச்சி தினமான மார்ச் 20 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டது.

உலகில் மகிழ்ச்சியான - சோகமான நாடுகள்

முதல் 10 மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:

நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடன்.

மிகவும் மகிழ்ச்சி குறைவான நாடுகள்

ஏமன், தெற்கு சூடான், லிபியா, கினியா, டோகோ, ரவாண்டா, சிரியா, தான்சானியா, புருண்டி மற்றும் மத்திய ஆஃப்ரிக்க குடியரசு

ஆண்டுதோறும் 150 -க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

"அது பூஜ்ஜியத்தில் இருந்து 10 வரை மேல் நோக்கிச் செல்லும் ஒரு ஏணியை கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்று கூறி அதன் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

பிற செய்திகள்

அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தின் புதிய யோசனை நடைமுறையில் சாத்தியமா?

மனித அந்தஸ்து பெற்ற கங்கை, யமுனை நதிகள்

"ஏணியின் மேற்புறம் இருக்கும் படியானது, உங்கள் வாழ்க்கையின் மிகவும் சிறப்பானது என்றும், கடைசிப்படி வாழ்க்கையின் மிக மோசமானது என்றும் வைத்துக்கொண்டால், இப்போது நீங்கள் வாழ்க்கையின் எந்த நிலையில் (படியில்) இருப்பதாக சொல்வீர்கள்?" இதற்கு கிடைக்கும் பதிலின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

ஒரு நாட்டின் சராசரி மதிப்பெண்ணை அடிப்படையாக பார்த்தால், நார்வே 7.54 என்ற அதிக மதிப்பெண்ணும், மத்திய ஆஃப்ரிக்க குடியரசு 2.69 மதிப்பெண்ணும் பெற்றுள்ளது. இதைத்தவிர, ஒரு நாட்டை விட மற்றொன்று எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறது, அதற்கான காரணம் என்ன என்பவை குறித்த தரவுகளையும் இந்த அறிக்கை ஆய்வு செய்கிறது.

பொருளாதார பலம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில்), சமூக ஆதரவு, ஆயுட்காலம், தெரிவு செய்யும் சுதந்திரம், பெருந்தன்மை, ஊழலில் இருந்து பாதுகாப்பு போன்ற காரணிகளையும் கவனத்தில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

இந்தியா, இலங்கையில் மகிழ்ச்சியின் தரவரிசை என்ன?

இந்தப் பட்டியலில் இந்தியா எந்த நிலையில் இருக்கிறது? கடந்த ஆண்டை விட ஒரு நிலை கீழிறங்கி, இந்தியா 122 -ஆவது இடத்தில் இருக்கிறது. இலங்கை, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் இந்தியாவை விட மகிழ்ச்சி பட்டியலில் நாடுகள் என்று பட்டியலில் இந்தியாவை முந்திவிட்டன.

மகிழ்ச்சியின் அளவு குறைந்து வரும் பட்டியலில், இந்தியா, வெனிசுலா, செளதி அரேபியா, எகிப்து, ஏமன் போட்ஸ்வானா உள்ளிட்ட பத்து நாடுகள் உள்ளன.

இந்தப் பட்டியலில், சோமாலியா 76, சீனா 79, பாகிஸ்தான் 80, இரான் 105, பாலஸ்தீனிய பகுதிகள் 108, பங்களாதேஷ் 110 வது இடத்தையும் பிடிக்க, இந்தியா 122 -வது இடத்தில் இருப்பது மகிழ்ச்சியான விசயமாக இல்லை.

அமெரிக்காவிலும் மகிழ்ச்சியின் அளவு குறைந்து வருகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

'அமெரிக்கர்களுக்கு அதிகரிக்கும் செல்வம், குறையும் நிம்மதி'

இந்த ஆண்டின் ஐ.நா.வின் மகிழ்ச்சி தொடர்பான அறிக்கையில் "அமெரிக்கர்களின் மகிழ்ச்சியை மறுசீரமைப்பது" என்ற அத்தியாயமும் இடம் பெற்றிருக்கிறது. அதில், அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், மகிழ்ச்சியான மனோநிலை ஏன் குறைந்து வருகிறது என்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

"அமெரிக்கா, பொருளாதார வளர்ச்சிக்கு பிரத்யேக கவனம் கொடுப்பதை விட, நாட்டில் அதிகரித்துவரும் சமத்துவமின்மை, ஊழல், தனிமை, அவநம்பிக்கை போன்ற பன்முக சமூக நெருக்கடிகளை சீரமைக்கவேண்டும் அது மிகவும்அவசியமானது" என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

"அமெரிக்காவின் சிக்கல் என்பது சிறியது, ஒரு சமூக பிரச்சனை, அது ஒரு பொருளாதாரம் சார்ந்தது அல்ல"

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்குவதாக, இந்த அறிக்கையை வெளியிட்ட நிலையான அபிவிருத்தி தீர்வுகளுக்கான தொடரமைப்பின் இயக்குனர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சமத்துவமின்மையை அதிகரிப்பதை இலக்காக கொண்டு அவர்கள், மேல் நிலையில் இருப்பவர்களுக்கு வரியை குறைப்பது, மக்களுக்கான சுகாதார பாதுகாப்பு பங்களிப்பதில் இருந்து விலகுவது, உணவிற்கான பங்களிப்பை குறைத்து இராணுவத்திற்கான செலவை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இவை அனைத்தும் தவறான திசையில் செல்வதாக நான் நினைக்கிறேன்" என்று ரியூட்டர்ஸ் சொல்கிறார்.

"வெள்ளை சட்டை" வேலைகளை மேற்கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தினரை விட, "நீலச் சட்டை" அணியும் தொழிலாளர்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக கூறும் இந்த அறிக்கை, ஆனால் வேலையில் இருப்பதும் மகிழ்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணம் என்று தெரிவிக்கிறது.

"நல்ல ஊதியத்துடன் வேலையில் இருப்பவர்கள் அதிக திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள்" என்று சொன்னாலும், தொடக்கத்தில் ஏற்படும் திருப்தியும், மகிழ்ச்சியும் நாளடைவில் குறைந்து போகும் லா ஆஃப் டிமினிஷிங் என்ற கோட்பாடு, இங்கே வேலை செய்கிறது. "ஊதியத்தை விட 100 ரூபாய் அதிகமாக கிடைத்தால் கீழ்நிலையில் இருக்கும் சிலருக்கு அதிக மகிழ்ச்சி தருவதாக இருந்தால், அது, அதிகமாக வருமானம் ஈட்டும் ஒருவருக்கு பெரிதாக தோன்றுவதில்லை".

ஐந்து ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் இந்த வருடாந்திர அறிக்கையில், நோர்டிக் நாடுகளே முதல் இடங்களை பிடித்துள்ளன.

பட்டியலில் நோர்டிக் நாடுகளின் ஆதிக்கம், அதிலும் குறிப்பாக டென்மார்க், சொல்வது என்னவென்றால், "ஹ்யூக்" எனப்படும் அன்பு, ஆதரவு மற்றும் அமைதியாக இருக்கும் அந்நாட்டின் கலாசார பாரம்பரியத்தை பிற நாடுகள் ஏற்றுக்கொள்வதற்கு ஊக்கமளிக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

.