பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”: ஐவர் பலி; 40 பேர் காயம்

  • 22 மார்ச் 2017
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பிரிட்டன் நாடாளுமன்ற வளாக தாக்குதல்: நேரில் பார்த்தவர் சாட்சியம்

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று புதனன்று நடந்த தாக்குதலில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலை நடததியவரும் அவரால் தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரியும் இதில் அடங்குவர். இதையொட்டி மிகப்பெரும் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று மாநகர காவல்துறை துணை ஆணையர் மார்க் ரௌலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிரிட்டன் நாடாளுமன்ற தாக்குதல்: படங்களில்

தாக்குதலை அடுத்து நாட்டியின் அதியுயர் பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டம் பிதமர் தலைமையில் இரவு நடக்கிறது.

மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எட்டு பேரில், இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதன் துணை மருத்துவ அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் தற்போதைய காட்சி
Image caption பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் தற்போதைய காட்சி

இத்தாக்குதலை பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் கண்டித்துள்ளது.

லண்டன் மாநகர வீதிகளில் பாதுகாப்புக்காக கூடுதல் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று மாநகர காவல்துறையும், உள்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்தை "பயங்கரவாத தாக்குதலாக" கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

பன்னாட்டுத் தலைவர்கள் பிரிட்டனுக்கு தமது ஆதரவை தெரிவிததுள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இணைந்து பணியாற்றவும் அவர்கள் சூளுரை.

முன்னர் வந்த தகவல்கள்

நாடாளுமன்ற வளாகத்திற்குள் வைத்தே காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காயமடைந்த நபரை ஆம்புலன்ஸ் அவசர சிகிச்சை பிரிவினர் எடுத்துச் சென்ற காட்சி

தாக்குதலாளி மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். காயமுற்ற அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக தாக்குதலாளி ஓட்டிவந்த கார் ஒன்று வேகமாக ஓட்டப்பட்டு அங்கிருந்த தடுப்புச் சுவரில் பலவந்தமாக மோதச் செய்யப்பட்டதாகவும் அதற்கு முன் அந்த கார் நான்கு அல்லது ஐந்து பாதசாரிகள் மீது ஏற்றப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

நாடாளுமன்ற வளாக சுற்றுச்சுவரில் கார் மோதியதைக் காட்டும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

படத்தின் காப்புரிமை AFP
Image caption நாடாளுமன்ற தாக்குதல்

அவசர சிகிச்சை வாகனங்களும், காவல்துறை வாகனங்களும் அங்கு குழுமியுள்ளன.

துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டவுடன் நாடாளுமன்றத்துக்குள்ளிருந்த பிரிட்டன் பிரதமர் தெரெசா மே அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் அவசரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருந்தவர்கள் யாரும் வெளியேறவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதோடு, நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி யாரும் வரவேண்டாமென்றும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்