விமானங்களில் லேப்டாப்களுக்கு தடை விதிக்கப்பட என்ன காரணம்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விமானங்களில் லேப்டாப்களுக்கு தடை விதிக்கப்பட என்ன காரணம்?

  • 22 மார்ச் 2017

அமெரிக்காவைத்தொடர்ந்து பிரிட்டனும் சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானப்பயணிகள் செல்பேசி தவிர, லேப்டாப், டேப்ளெட்கள் உள்ளிட்ட பெரிய மின்னணு உபகரணங்களை கைப்பைகளில் கொண்டுசெல்ல தடை விதித்துள்ளது.

மின்னணு உபகரணங்களைப் பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாக வந்த நம்பத்தகுந்த புலனாய்வு எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மின்னணு உபகரணங்கள் மூலம் வெடிமருந்தை விமானங்களுக்குள் கொண்டு செல்ல இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு முயல்வதாக அமெரிக்காவின் ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.

தீவிரவாத குழுக்கள் விமானங்களைத் தொடர்ந்து குறிவைப்பதாகவும் மின்னணு உபகரணங்களில் குண்டுகளை வைத்து பயணிகள் விமானங்களை வானில் வெடிக்கச்செய்ய முயல்வதாகவும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் உளவுத்துறையினர் மத்தியில் கவலை அதிகரித்து வருகிறது.

லேப்டாப்கள், கேமெராக்கள், டேப்ளெட்கள், விளையாட்டு உபகரணங்கள் என எவையெல்லாம் செல்பேசிகளைவிட பெரிதாக இருக்கிறதோ அவற்றை சில மத்திய கிழக்கு விமானநிலையங்களிலிருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு செல்லும் விமானபயணிகள் இனிமேல் கைகளில் கொண்டு செல்ல முடியாது.

மாறாக விமானம் ஏறும்போது விமான சரக்குப்பகுதிக்குள் வைக்கப்படும் பெட்டிகளுக்குள் இவை கையளிக்கப்படவேண்டும். பயணம் முடிந்து இறங்கும் விமானநிலையத்தில் பெட்டிகளோடு அவற்றைத் திரும்ப எடுத்துக்கொள்ள முடியும்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட ஆறு விமான சேவைகளும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவைச் சேர்ந்த எட்டு விமான சேவைகளும் இதனால் பாதிக்கப்படும்.

சென்ற ஆண்டு அல் ஷபாப் தீவிரவாதி ஒரு லேப்டாப்பை விமானத்துக்குள் கடத்திச்சென்று வெடிக்கச் செய்தபோது கொல்லப்பட்டார். விமானம் சேதமடைந்தாலும் வேறு உயிரிழப்பு நடக்கவில்லை. அந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த தடை வந்திருக்கிறது.

அதற்கும் முன்பு, இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு ரஷ்ய பயணிகள் விமானத்தின் சரக்குப்பகுதியில் வைக்கப்பட்ட குண்டு மூலம் Sinai தீபகர்ப்பத்தின் மேல் விமானத்தை வைத்து வெடிக்கச் செய்தது. ஜிகாதிகள் மூலம் விமானப்பயணத்துறைக்கான அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரிப்பதாக கூறும் அமெரிக்க உளவுத்துறை, மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.

அமெரிக்கத்தடை தவறானது என்று கூறியுள்ள துருக்கி அது திரும்பப் பெறப்படவேண்டுமென கோரியுள்ளது.

இந்த தடைகள் கோடிக்கணக்கான விமானப்பயணிகளுக்கு அதிகபட்ச அசௌகரியம் ஏற்படுமென்பதால் விமானப் பயணிகள் கடும் கோபமடைவார்கள் என்று விமானத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர்.

பயணிகளுக்கான அசௌகரியம் மட்டுமல்ல; சர்வதேச அரசியலிலும் பொருளாதார ரீதியாகவும் மேற்குலக நாடுகள் கூடுதல் விலைகொடுக்கவேண்டி நேரலாம். காரணம் பாதிக்கப்பட்டிருப்பவை மேற்குலகின் நட்பு நாடுகள்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள சர்ச்சைக்குரிய தடையின் பின்னணியில் இது வந்திருக்கிறது. அதனால் இது இஸ்லாமிய எதிர்ப்பாகவும், பாரபட்சமானதாகவும் உலக அளவில் பலரால் பார்க்கப்படலாம். சமூக பிளவுகள் கூர்மையடையக்கூடும்.

அடுத்த 96 மணி நேரத்திற்குள் விமான நிறுவனங்கள் இந்த தடையை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் இது எப்போது முடிவுக்கு வருமென தெரியாது. கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் பயணிகளின் பாதுகாப்பே முக்கியமென அதிகாரிகள் வலியுறுத்துகிறார்கள்.