`லண்டன் தாக்குதல்தாரியை புலனாய்வு அமைப்புக்கு தெரியும்': உரிமை கோருகிறது ஐ.எஸ்.

  • 23 மார்ச் 2017

லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தாக்குதல்தாரி பிரிட்டனை பிறப்பிடமாக கொண்டவர் என்றும், அவர் யாரென்று காவல்துறைக்கும், புலனாய்வு சேவை அமைப்புக்கும் தெரியும் என்ற தகவலையும் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வெளிப்படுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது ஐ.எஸ். அமைப்பு.

பிரிட்டன் நாடாளுமன்ற தாக்குதல்: இஸ்லாமிய இயக்கங்களுக்கு தொடர்பு?

லண்டன் தாக்குதல்: 10 முக்கிய தகவல்கள்

லண்டன் தாக்குதல்: 7 பேர் கைது; 6 வீடுகளில் சோதனை; 7 பேர் கவலைக்கிடம்

படத்தின் காப்புரிமை PA/FACEBOOK
Image caption உயிரிழந்த கீத் பால்மர் மற்றும் ஐஷா ஃபிராடே

இத்து தொடர்பாக பிரிட்டனின் பிரதிநிதிகள் சபையில் வெளியிட்ட அறிக்கையில், வன்முறை மிகுந்த தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த தாக்குதல்தாரி விசாரிக்கப்பட்டார் என்று தெரிவித்த தெரீசா மே , ஆனால் அவர் தொடர்புக்கு அப்பால் இருந்து வந்தார் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

''புலனாய்வு அமைப்பின் தற்போதைய பட்டியலில் அவர் இடம்பெறவில்லை'' என்று தெரீசா மே குறிப்பிட்டுள்ளார்.

Image caption தெரீசா மே

புதன்கிழமை நான்கு பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த தாக்குதல் தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் போலீஸ் கான்ஸ்டபிளான கீத் பால்மர், லண்டன் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வந்து உயிரிழந்த கீத் பால்மர், ஐஷா ஃபிராடே என்ற பெண்மணி , 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மற்றும் தாக்குதல்தாரி ஆகியோர் அடங்குவர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஏழு பேரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சம்பவ இடத்தில் அஞ்சலி செலுத்தும் ஒரு பெண்

மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த 29 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக லண்டன் பெருநகர பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தலைவர் மார்க் ரோவ்லி மேலும் தெரிவித்தார்.

வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடைபாதையை ஒட்டி காரை ஓட்டி சென்ற ஒரு நபர் பாதசாரிகள் மீது மோதி பலரை கீழே விழ வைத்துள்ளார். பீதியை உண்டாக்கியுள்ள இந்த சம்பவத்தில் பல டஜன் நபர்கள் காயமடைந்துள்ளனர்.

பின்னர், நாடாளுமன்றத்தை நோக்கி ஓடிய தாக்குதல்தாரி, அங்கிருந்த நிராயுதபாணியான போலீஸ் கான்ஸ்டபிளான கீத் பால்மரை கத்தியால் குத்தினார். அதன் பிறகு, ஆயுதம் ஏந்திய போலீசார் தாக்குதல்தாரியை சுட்டுக் கொன்றனர்.

உயிரிழந்த காவலரான பால்மருக்கு அஞ்சலி செலுத்திய தெரீசா மே, ''ஒவ்வொரு அங்குலத்திலும் அவர் ஒரு காதநாயகனே. மேலும், அவரது செயல்களையும், தியாகத்தையும் எப்போதும் மறக்க முடியாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption கீத் பால்மரின் புகைப்படத்துக்கு அஞ்சலி

பிரிட்டன் நாடாளுமன்ற தாக்குதல்: இஸ்லாமிய இயக்கங்களுக்கு தொடர்பு?

தாக்குதல்தாரி ஐ.எஸ். இயக்கத்தவரா?

இதனிடையே, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்த தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரி தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று தனது செய்தி முகமை மூலமாக அந்த அமைப்பு கோரியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்