பயங்கரவாத தாக்குதல்களை தடுப்பதில் என்ன சிக்கல்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பயங்கரவாத தாக்குதல்களை தடுப்பதில் என்ன சிக்கல்?

  • 23 மார்ச் 2017

வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் போன்ற எவையும் இல்லாமல் தனி ஆளாகவே அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதிகள் மாற்றமடைந்து வரும் பின்னணியில், புலனாய்வு அமைப்புகளால் இவர்களால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க முடியுமா என்கிற விவாதம், லண்டன் தாக்குதலைத்தொடர்ந்து மீண்டும் சூடுபிடித்துள்ளது.

பிரிட்டனில் 2013 ஆம் ஆண்டு முதல் இதுவரை 13 பயங்கரவாத தாக்குதல்கள் தடுக்கப்பட்டிருப்பதாக பிரிட்டன் பாதுகாப்புப் படையினர் கூறுகிறார்கள்.

இத்தகைய தாக்குதல்களுக்கு திட்டமிடுபவர்களை கண்டுபிடிப்பதில் எம்ஐ5 அமைப்பும், காவல்துறையும் பெருமளவு முன்னேறியிருந்தாலும் தாக்குதலாளிகள் தங்களின் வழிமுறைகளை தொடர்ந்து மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். சர்வதேச புலனாய்வாளர்கள் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவர்கள் தமது தாக்குதல்களை வடிவமைக்கிறார்கள்.

ஓராண்டுக்கு முன்னர் பிரஸ்ஸல்ஸ் விமானநிலையத்திலும், அந்நகர சுரங்க ரெயில்களிலும் நடந்த தாக்குதல்களில் வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டதைப்போல தற்போதைய லண்டன் தாக்குதலாளி வெடிப்பொருட்களை பயன்படுத்தவில்லை.

மாறாக பெர்லின், நீஸ் மற்றும் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பிரிட்ஜில் நடந்த தாக்குதல்கள், சாதாரண வாகனங்கள் கூட பெரும் கொலைக்கருவிகளாக மாற்றப்படமுடியும் என்பதை காட்டின.

இவை தவிர சென்றவாரம் பாரிஸ் ஓர்லி விமானநிலையத்தில் இராணுவ சிப்பாயின் துப்பாக்கியை பறித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், ஒற்றை ஆள் நினைத்தமாத்திரத்தில் எங்கும் தாக்குதல் நடத்த முடியும் என்பதை வெளிப்படுத்தியது.

இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்புடன் நேரடி தொடர்பு இல்லாத தனி நபர்கள் கூட அந்த அமைப்பிலிருந்து உத்வேகம் பெற்று செயற்படுவதை சமீபத்திய தீவிரவாத, பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் காட்டுகின்றன.

இத்தகைய தாக்குதல்களை தடுப்பது கடினம் என்கிறார் பயங்கரவாத எதிர்ப்புப்பிரிவின் முன்னாள் தலைவர் ரிச்சர்ட் வால்ட்டன்.

“ஒரு அமைப்பால் ஈர்க்கப்பட்ட தனி நபர்கள் மேற்கொள்ளும் இத்தகைய சிறு அளவிலான தாக்குதல்களை தடுப்பது மிகவும் கடினம். இவர்களை அடையாளம் காண்பதே கடினம் என்றால் அவர்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்பை தடுப்பது அதைவிட மிகவும் கடினம்”, என்றார் அவர்.

லண்டன் தாக்குதலாளி கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் தனி ஆளா அல்லது அவருக்கு தொடர்புடையவர்களால் ஏற்படக்கூடிய ஆபத்து இன்னமும் தொடர்கிறதா என்பதை அறிந்துகொள்ளவேண்டியதே பிரிட்டன் புலனாய்வாளர்கள் இப்போதுள்ள மிகப்பெரிய சவால்.