`லண்டன் தாக்குதல்தாரி இஸ்லாம் மதத்துக்கு மாறி பெயரை மாற்றியவர்'

  • 24 மார்ச் 2017

லண்டனில் கடந்த புதன்கிழமை நடந்த தாக்குதலில் பொதுமக்களில் மூவரையும், ஒரு போலீஸ் அதிகாரியையும் கொன்ற நபர் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் காப்புரிமை PA
Image caption லண்டன் தாக்குதல்தாரி குறித்த மேலதிக தகவல்கள் வெளியானது

லண்டன் தாக்குதலில் ஈடுபட்டவர் காலித் மசூத்

52 வயதான இந்த நபரின் பெயர் காலித் மசூத் என்றும், அவர் இங்கிலாந்தை பிறப்பிடமாக கொண்டவர் என்றும் போலீசார் அடையாளம் கண்டறிந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை STACI MARTIN
Image caption உயிரிழப்பதற்கு முன் எடுக்கப்பட்ட போலீஸ்காரர் கீத் பால்மரின் புகைப்படம்

உயிரிழந்த தாக்குதல்தாரி ஆரம்பத்தில் அட்ரியன் எல்ம்ஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும், இஸ்லாம் மதத்துக்கு அவர் மாறிய பின்னர் தனது பெயரை மாற்றி இருக்கக்கூடும் என்றும் தற்போது நம்பப்படுகிறது.

புதன்கிழமை நடந்த தாக்குதலில் இந்நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பயங்கரவாத செயல்களை நடத்த தயார் ஆகிக் கொண்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் மேற்கூறிய மரணங்கள் தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட காலித் மசூத், அதே இடத்தில் சுடப்பட்டார்

போலீஸ் அதிகாரி கீத் பால்மர் மற்றும் பொதுமக்களில் இருவர் என உயிரிழந்த மூவரின் அடையாளம் வெளியிடப்பட்ட நிலையில், உயிரிழந்த மேலும் ஒரு நபரின் பெயரையும் போலீசார் அறிவித்துள்ளனர். 75 வயதான அந்த நபரின் பெயர் லெஸ்லி ரோட்ஸ். தெற்கு லண்டனில் உள்ள ஸ்ட்ரீதம் பகுதியைச் சேர்ந்தவர். வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் தாக்குதல்தாரி காரை மோதியதில் படுகாயமடைந்தவர்களில் இவரும் ஒருவர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக, வெஸ்ட் மிட்லேன்ட்ஸ் மற்றும் நார்த் வெஸ்ட் பகுதிகளில் இரண்டு முக்கிய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஸ்காட்லாந்து யார்டு படையின் தீவிரவாத தடுப்பு அதிகாரியான மார்க் ரெளலி தெரிவித்துள்ளார்.

மேலும் 31 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் அளவுக்குக் காயமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், நூற்றுக்கணக்கான துப்பறியும் நிபுணர்களை உள்ளடக்கிய சோதனைகள் , பர்மிங்காம், லண்டன் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்