சுகாதார பாதுகாப்பு மசோதா தோல்விக்கு ஜனநாயக கட்சியை குற்றம் சாட்டுகிறார் டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், போதுமான வாக்குகள் கிடைக்காததால் சுகாதார பாதுகாப்பு மசோதா திரும்பப்பெறப்பட்டது.

படத்தின் காப்புரிமை Reuters

"ஜனநாயக கட்சியின் வாக்குகளை பெறமுடியவில்லை, மேலும் நாங்கள் சற்று தயக்கம் காட்டியதால், பின்வாங்க நேர்ந்தது" என்று வாஷிங்டன் நாளிதழுக்கு டிரம்ப் அளித்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.

கடைசி நிமிடத்தில் மசோதா திரும்பப் பெறப்பட்டது அதிபர் டிரம்புக்கு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஒபாமாகேர் என்று அறியப்பட்ட சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை, அகற்றியோ-மாற்றியோ, புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்பது, அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் டிரம்ப் கொடுத்த முக்கியமான வாக்குறுதி.

மசோதா வெற்றி பெறுவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச 215 வாக்குகளை பெற முடியாது என்பது உறுதியாக தெரிந்தவுடன், மசோதாவை திரும்பப்பெற டிரம்ப் ஒப்புக்கொண்டதாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பால் ரயான் தெரிவித்தார்.

குடியரசுக் கட்சிக்கு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையிலும், செனட்டிலும் பெரும்பான்மை பலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும், குடியரசுக் கட்சியின் 28 முதல் 35 எம்.பிக்கள் அதிபரின் அமெரிக்க சுகாதார பாதுகாப்பு சட்ட வரைவு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக பல்வேறு தகவல்கள் தெரிவித்தன.

இந்த மசோதாவில் சுகாதார பாதுகாப்பு வெட்டு மிகவும் அதிகமாக இருந்ததாக சிலர் வருத்தம் தெரிவித்தாலும், போதுமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று வேறு சிலர் கருதினார்கள்.

மசோதா குறித்து அண்மையில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 17% வாக்குகள் மட்டுமே கிடைத்ததை அடுத்து, பொதுமக்களிடமும் எதிர்ப்பு நிலவியது உறுதியானது.

புதிய சுகாதார பாதுகாப்பு மசோதா அமலுக்கு வந்தால், 2017 முதல் 2026 க்கு இடைப்பட்ட காலத்தில் 336 பில்லியன் டாலர்கள் அளவிலான நிதி பற்றாக்குறை குறையும் என்று அமெரிக்க காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் மதிப்பிட்டிருந்த்து.

அதேசமயத்தில் 52 மில்லியன் மக்களுக்கு சுகாதார பாதுகாப்பு இருக்காது, இது ஒபாமா சுகாதார பாதுகாப்பு திட்டத்துடன் ஒப்பிடும்போது, 24 மில்லியன் அதிகம் என்பதும் குறிப்பிட்த்தக்கது.

மசோதாவை திரும்பப் பெற்றுக்கொண்ட டிரம்ப், அதற்கு பிறகும், ஒபாமாகேர் திட்டம் மாற்றப்படும் என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்