லண்டன் தாக்குதல்: வாட்ஸப் ரகசியம் காப்பது சரியா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

லண்டன் தாக்குதல்: வாட்ஸப் ரகசியம் காப்பது சரியா?

லண்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நான்கு பேரைக்கொன்று 40 பேருக்கும் அதிகமாக காயப்படுத்திய லண்டன் தாக்குதலாளி, தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன் வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய செய்தியை தெரிந்துகொள்ள தனக்கு உதவுமாறு லண்டன் காவல்துறை கோரியுள்ளது.

ஆனால் வாட்ஸ்அப் செய்திகள் அனைத்துமே சங்கேத மொழியில் அனுப்பப்படுவதால், அதை அணுகுவதற்கு தம்மால் இயலாது என்பதால் அந்த செய்தியில் என்ன இருந்தது என்பது தமக்கும் தெரியாது என்று வாட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கான ரகசிய உரையாடல் தளத்தை தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்கக்கூடாது என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து செல்பேசி செயலிகள் மூலம் தகவல்பரிமாற்றப்படுவதன் சரி தவறுகள் குறித்த சிக்கலான கேள்விகள் மீண்டும் உயிர்பெற்றுள்ளன.

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தொழில்நுட்ப நிறுவனங்கள் போதுமான அளவு உதவுகின்றனவா? குறிப்பாக தொலைபேசி தகவல்பரிமாற்ற செயலிகளில் அனுப்பப்படும் தனிப்பட்ட உரையாடல் விஷயத்தில்? இந்த கேள்விகளுக்கு எளிமையான பதில்கள் யாரிடமும் இல்லை.

பாதுகாப்புத்துறைகள் கையாளும் உளவுபார்க்கும் பொறிமுறைகளால் கண்காணிக்க முடியாத தொழில்நுட்பங்களை வாட்ஸ்ப் போன்ற நிறுவனங்கள் வடிவமைப்பதாக காவல்துறை கவலைப்படுகிறது.

“இன்றைய நிலையில் தொலைபேசி உரையாடலை காவல்துறை சட்டப்படி ஒட்டுக்கேட்கமுடியும். ஆனால் அதே தகவலை சமூக ஊடக தகவல்பரிமாற்ற செயலிகள் மூலம் பரிமாறிக்கொண்டால் அதை இடைமறித்து கண்காணிக்க முடியாது. இந்த முரண்பாடு தான் இன்றுள்ள மிகப்பெரிய சிக்கல். இதற்கு சட்டப்படியானதொரு தீர்வை நாம் கண்டாக வேண்டும்”, என்கிறார் யூரோபோல் இயக்குநர் ராப் வைன்ரைட்.

ஆனால் இத்தகைய செயலிகளில் அனுப்பப்படும் தகவல்களை தொழில்நுட்ப மின்னணு சங்கேதமொழியில் அனுப்புவது பொதுமக்களிடம் பரவலான ஆதரவை பெற்றுள்ளது.

காரணம் அப்படி செய்வதால் குற்றகும்பலிடம் சாமானியர்களின் தகவல்கள் சிக்காமல் பாதுகாக்கப்படுகிறது என்பதால்.

எனவே அத்தகைய தகவல் பரிமாற்றத்தை இடைமறிக்கும் புதிய அதிகாரத்தை அரசுகளுக்கு அளிப்பதை சிலர் விரும்பவில்லை.

அமெரிக்காவின் சான் பெர்னார்டினோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, செல்பேசியை ஆராய உதவுவது தொடர்பில் ஆப்பிள் நிறுவனத்துக்கும் எப்பிஐக்கும் இடையில் மோதல் வெடித்தது.

லண்டனில் காலித் மசூதின் செல்பேசியை காவல்துறை ஆராய முடிந்ததா என்பது தெரியவில்லை. அதை செய்வதன் மூலம், அவர் தனியாக செயற்பட்டாரா இல்லையா என்பதை உறுதி செய்யமுடியும் என காவல்துறை கருதுகிறது.

அத்துடன் தீவிரவாத கருத்துக்களை பரப்பும் ஏராளமான இணையதளங்களே பலரை மூளைச்சலவை செய்வதாக அஞ்சும் பிரிட்டிஷ் அரசு அதை கையாள்வதற்கே முன்னுரிமை கொடுக்கிறது.

இத்தகைய தகவல்கள் மீது புகார் வரும் வரை காத்திருக்காமல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தாமாகவே அவற்றை அகற்ற வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு விரும்புகிறது.

லண்டன் தாக்குதலைத் தொடர்ந்து புதிய சட்டம் வரப்போவதாக தெரியவில்லை. காவல்துறைக்கு புதிய அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான அழுத்தம் மூலம் அவர்களின் நடத்தையை மாற்ற முடியுமென அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.