சுதந்திரம் குறித்த இரண்டாவது வாக்கெடுப்புக்கு ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் ஆதரவு

  • 28 மார்ச் 2017

ஸ்காட்லாந்து பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெறவேண்டும் என்பது குறித்து இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த, முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜனின் பிரேரணைக்கு ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை PA
Image caption பிரிட்டன் பிரதமர் தெரீசா மே (இடது), ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்(வலது)

ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர், இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த அனுமதி கோரும் இப்பிரேரணையை, ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் 69 வாக்குகள் ஆதரவு, 59 எதிர்ப்பு என்ற நிலையில் நிறைவேற்றியது.

பிரெக்ஸிட் வாக்கெடுப்பை அடுத்து ஸ்காட்லாந்து மக்கள் என்ன பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவெடுக்க அனுமதிக்க இந்த வாக்கெடுப்பு தேவையாக இருப்பதாக ஸ்டர்ஜன் கூறுகிறார்.

ஆனால் பிரெக்ஸிட் வழிமுறை ( பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது) முற்றுப்பெறும் வரை இந்த ஸ்காட்லாந்து கருத்தறியும் வாக்கெடுப்பை தடுக்கப்போவதாக பிரிட்டிஷ் அரசு ஏற்கனவே கூறியிருக்கிறது.

இந்த கருத்தறியும் வாக்கெடுப்புக்கு இது தருணமல்ல என்று , திங்கட்கிழமை கிளாஸ்கோ நகரில் நிக்கோலா ஸ்டர்ஜனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பிரிட்டிஷ் பிரதமர், தெரீசா மே, மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

கடந்த 2014ல் தான் ஸ்காட்லாந்து மக்கள் , இது குறித்து நடந்த முதல் கருத்தறியும் வாக்கெடுப்பில் , ஐக்கிய ராஜ்ஜியத்துடன் இணைந்திருக்க வாக்களித்தனர்.

ஆனால் இப்போது பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகவிருக்கும் சூழலில், நிலைமைகள் மாறிவிட்டதாக நிகோலா ஸ்டர்ஜன் கூறுகிறார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த நிபந்தனைகள் தெளிவான பின்னர், இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று ஸ்டர்ஜன் விரும்புகிறார்

ஸ்காட்லாந்து விடுதலை: மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நிராகரிப்பு?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்